சீனாவின் உத்தரவாதத்தை நாணய நிதியம் ஏற்குமா ?

Published By: Digital Desk 3

26 Jan, 2023 | 11:08 AM
image

ரொபட் அன்டனி 

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடனுதவி இலங்கைக்கு கிடைக்குமா கிடைக்காதா? எப்போது கிடைக்கும்?   வருடத்தின் முதலாவது காலாண்டில் இந்த கடன் உதவி கிடைக்குமா? அல்லது இரண்டாவது காலாண்டில்  கிடைக்குமா ?  என்பதே இன்றைய நிலையில் அரசியல் மற்றும் பொருளாதார களத்தில் மிக முக்கியமான பேசுபொருளாக காணப்படுகிறது.  அதுவே தற்போது இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு விடயமாகவும் மாறியிருக்கிறது.  சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி இந்த வருட முதல் காலாண்டு அல்லது இரண்டாம் காலாண்டு காலப்பகுதிக்குள் கிடைக்காவிடின் மிகப்பெரிய நெருக்கடிகளை சந்திக்க வேண்டியேற்படும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.  நாம் அந்த கட்டத்திலேயே தற்போது இருக்கின்றோம். 

இந்நிலையில் பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் ஆஜராகிய மத்திய வங்கியின் பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை வருடத்தின் முதல் காலாண்டில் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெறுமனே இவ்வாறு கூற மாட்டார்கள். அதற்கு ஏதுவான ஆதாரங்கள் மற்றும் அதற்கான சூழ்நிலைகள் உறுதிப்படுத்தப்பட்ட பட்சத்தில் மட்டுமே இவ்வாறு கூறமுடியும்.  எனவே மத்திய வங்கியின் அதிகாரிகள் அறிவித்திருக்கின்றமையை பார்க்கும்போது வருடத்தின் ஆரம்பத்தில் முதலாவது காலாண்டில் இந்த நிதியுதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா ஏற்கெனவே இலங்கைக்கு உதவுவதாக அறிவித்துவிட்டது.  அதன்படி தற்போது சீனாவும்  இலங்கையின் இந்த கடன் மறுசீரமைப்பு உதவுவதாக  அறிவித்திருக்கின்றமை முக்கியமானது.   அதாவது சீனாவானது இலங்கைக்கு இரண்டு வருட கால கடன் மீள்செலுத்தல் அவகாசத்தை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    இரண்டு வருடங்களுக்கு கடன் மீள்செலுத்தலை    இடைநிறுத்த சீனா தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.    இது தொடர்பான உறுதியான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.  எனினும் சீனாவின் எக்சிம் வங்கி அதாவது சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியானது இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துக்கு அறிவித்திருப்பதாக   தெரிவிக்கப்படுகிறது.  அந்த தகவலும் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. ஆனால் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் அறிவிப்புக்களை பார்க்கும்போது இலங்கை விடயத்தில் சீனா ஒரு சாதக நகர்வை எடுத்திருப்பதாகவே தெரிகின்றது. 

சீனாவின் எக்சிம் வங்கிக்கு இலங்கை 3 பில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டும்.   மொத்தமாக சீனாவுக்கு கிட்டத்தட்ட 8 பில்லியன் டொலர்களை இலங்கை   கடனாக செலுத்த வேண்டும்.     அதில் சீன எக்சிம் வங்கிக்கு இலங்கை 3 பில்லியன் டொலரை செலுத்தவேண்டும்.    அதனடிப்படையில் சீனா வழங்கவுள்ளதாக கூறப்படும்  இந்த இரண்டு வருட கால அவகாசம்  2022ஆம் ஆண்டே  ஆரம்பிப்பதாக தெரிகின்றது.  அப்படி பார்த்தால் 2022ஆம் ஆண்டு முடிவடைந்துவிட்டது.  அதாவது சீனா இலங்கைக்கு வழங்கும் இரண்டு வருடங்களில் ஒரு வருடம் ஏற்கனவே முடிந்து விட்டதாகவே காணப்படுகிறது.  இந்த 2023 ஆம்  வருடத்தில் ஒரு மாதம் முடிவடையப் போகிறது.  எனவே 11 மாதங்களே எஞ்சியிருக்கின்றன.  எனவே இந்த 11  மாதங்கள் மட்டுமே தற்போது செயற்பாட்டு ரீதியாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு கடன் மறுசீரமைப்பின் அவகாசமாக கிடைக்கவிருக்கிறது.  இது போதுமானதா? இதனை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொள்ளுமா என்பது இன்னும் தெரியாமலேயே இருக்கின்றது. 

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடன் பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் இலங்கைக்கு ஏற்கனவே கடன் வழங்கிய நாடுகள் இலங்கையுடன் கடன் மறு சீரமைப்பு செய்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி இலங்கைக்கு கிடைக்காது என்பதே உண்மையாகும். அந்தவகையில் தற்போது இலங்கைக்கு கடன் வழங்கிய தரப்பினரை சர்வதேச மட்டத்தில் நாம் மூன்று வகைக்குள் கொண்டுவரலாம். பரிஸ்கிளப்  அமைப்பில் அங்கம் வகிக்கின்ற நாடுகள், பரிஸ்கிளப்  அமைப்புக்கு வெளியே இருக்கின்ற இந்தியா   சீனா ஆகிய நாடுகள்,   மற்றும்  இலங்கைக்கு கடன் வழங்கிய சர்வதேச வங்கிகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆகியவற்றை குறிப்பிடலாம். இந்த சகல தரப்புக்களுடனும் கடன் மறசீரமைப்பு செய்ய வேண்டும். 

இலங்கைக்கு ஆதரவு தெரிவித்து ஜப்பான் உள்ளிட்ட பரிஸ்கிளப் நாடுகள் நாணய நிதியத்துக்கு அறிவித்துள்ளன.    அதேபோன்று பரிஸ்கிளப் நாடுகளுக்கு வெளியே இருக்கின்ற இந்தியாவும் இலங்கைக்கு கடன் மறுசீரமைப்பு  செய்ய  உதவுவதாக சர்வதேச நாணய நிதியத்துக்கு அறிவித்திருக்கின்றது.  இந்தியாவின் அந்த ஆதரவை   சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக் கொண்டு இருக்கின்றது.  

இந்நிலையில் தற்போது சீனாவின் தீர்மானம் மிக முக்கியத்துவமாக அமைகின்றது.  சீனா ர்வதேச நாணய நிதியத்துக்கு கடிதம் அனுப்பி இருக்கிறதா இல்லையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஒருவேளை   சர்வதேச நாணய நிதியத்துக்கு கடிதம் சென்றிருக்கலாம்.  அப்படி சென்றிருந்தால் சர்வதேச நாணய நிதியம் அதனை ஏற்றுக் கொள்ளுமா என்பது உறுதியாக தெரியவில்லை.  ஒருவேளை தற்போதைய இந்த கட்டுரை எழுதப்படும் போது அந்த உறுதி ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கலாம்.  அல்லது முடிவு எடுக்கப்படாமல் இருக்கலாம். 

எப்படியிருப்பினும்  சீனா இலங்கைக்கு தற்போது வழங்கி இருக்கின்ற இரண்டு வருட கால அவகாசத்தில் ஏற்கனவே ஒரு வருடமும் ஒரு மாதமும் முடிந்து விட்டன. இன்னும் 11 மாதங்களே இருக்கின்றன.  எனவே இது எந்தளவு தூரம் சர்வதேச நாணய நிதியத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டி இருக்கின்றது.   

ஆனாலும் சீனாவின் இந்த முடிவு மிக முக்கியமாக இருக்கின்றது. காரணம் இலங்கை சகல தரப்பினருடனும் கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ள வேண்டும். இலங்கை ஏற்கனவே கடன் செலுத்த முடியாது என்று வங்குரோத்து நிலையை பிரகடனம்  செய்துள்ளதால்  நிச்சயமாக கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ள வேணடிய கட்டாயம் உள்ளது.  அதாவது ஏற்கனவே     கடன்   வழங்கிய தரப்புகளுடன் கடன் மறுசீரமைப்பு செய்து எவ்வாறு இந்த கடன்கள் செலுத்தப்படும் என்ற ஒரு திட்டத்துக்கு செல்ல வேண்டும்.  அதற்கால இந்த கடன்மறுசீரமைப்பில் பல  கருவிகள் பயன்படுத்தப்படலாம்.   

ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைக்கலாம்.  அல்லது அந்த கடன்களுக்கான தவணை பணத்தை மீள்செலுத்தும் காலத்தை அதிகரிக்கலாம்.  அதாவது கடன் செலுத்துவதற்கு நீண்ட நிவாரண காலப்பகுதியை பெற்றுக் கொள்ளலாம்.  மூன்றாவதாக இலங்கை இந்த நாடுகளிடம் பெற்றிருக்கின்ற கடன்களில் ஒரு தொகையை கழித்து விடலாம். அல்லது ரத்து செய்துவிடலாம்.  அதனை Haircut  என்று கூறுவார்கள்.  இந்த மூன்று முறைகளில் இலங்கை சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் கடன் மறுசீரமைப்பை செய்து கொள்ள முடியும்

சீனா இதில் இரண்டாவது வகையை தெரிவு செய்து இருக்கின்றது. அதாவது சீனாவுக்கு இலங்கை செலுத்தவேண்டிய கடன்களுக்கான காலப்பகுதியை    நீடித்திருக்கிறது.  அதாவது இரண்டு வருடங்களுக்கு இலங்கை சீனாவுக்கு கடன் செலுத்த வேண்டியதில்லை. அதன்பின்னர் கடன்களை செலுத்த  வேண்டும்.  

ஆனால் சீனா வழங்குவதாக கூறப்படும் இந்த  இரண்டு வருட கால அவகாசம் போதுமானதா? அதனை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொள்ளுமா? என்பதே இங்கு இருக்கின்ற மிக முக்கியமான கேள்வியாகும்.    சீனா இலங்கைக்கு இதனை விட அதிகளவு கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்கியிருக்கலாம் என்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 

இதேவேளை பரிஸ்கிளப் நாடுகள் இலங்கைக்கு வழங்கிய கடனில் ஒரு பகுதியை ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   அதற்கு ஒரு பலமான காரணமும் இருக்கின்றது. இலங்கைக்கு கடன் வழங்கிய பரிஸ்கிளப் நாடுகளில் ஜப்பான் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.    எனவே ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய கடன்களில் ஒரு பகுதியை ரத்து செய்ய முயற்சித்தால் அதாவது Haircut முறைக்கு  ஜப்பான் சென்றால் அந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்ற  இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து நாடுகளும் அதே தீர்மானத்தை எடுக்க வேண்டி ஏற்படும். அப்படி பார்க்கும்போது சில நாடுகளிடம் பெறப்பட்ட கடன்களில்   ஒரு தொகையை இலங்கை ரத்து செய்து கொள்ளும் நிலைமை ஏற்படும். அது   இலங்கைக்கு பாரியதொரு சாதகமாக அமையும். ஆனால் ஜப்பான் இந்த விடயத்தில் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கும் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆனால்  கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் ஏற்கனவே அறிவித்திருக்கின்றது. அது தொடர்பாக ஜப்பான் ஏனைய சர்வதேச நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது.  அதனால் இலங்கைக்கு   கடன் ரத்து   கிடைக்கும் ஒரு சாத்தியம் காணப்படுகிறது என்பதை மறுக்கமுடியாது.    இறுதி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கின்றது. 

 இதுவரை காலமும் இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு செய்வதில் தொடர்ச்சியாக தயக்கம் காட்டி வந்த சீனா தற்போது கடன் செலுத்தும் காலப்பகுதியில் ஒரு கால அவகாசத்தை வழங்குவதற்கு முன் வந்து இருக்கின்றதாக தெரிவிக்கின்றமை முக்கியமானதாகும்.  இலங்கையை பொறுத்தவரையில் இது  மிக முக்கியமான ஒரு சாதகமான முடிவாக காணப்படுகிறது. 

ஆனால்  அதனை சர்வதேச நாணய நிதியம் எந்தளவு தூரம் ஏற்றுக்கொள்ளும் என்பது ஒருபுறமிருக்க சீனா இலங்கை விடயத்தில் இவ்வாறான தீர்மானத்தை எடுத்தமை மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.  அதன் பின்னணியிலேயே  தற்போது அரசாங்க தரப்பில் ஒரு மகிழ்ச்சியான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.  அதாவது சீனாவிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதால்   விரைவாக    சர்வதேச நாணய நிதியத்தின் கடனை இலங்கை  பெற்றுக் கொள்ள முடியும் என்ற அறிவிப்பு அரசாங்கத் தரப்பில் இருந்து வெளி வருவதை காணமுடிகிறது. 

அடுத்தடுத்த கட்டங்களில் எவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறப்போகின்றன என்பது  தீர்க்கமானதாகும்.   சீனாவின் அறிவிப்புக்கு நாணய நிதியம் என்ன பதில் சொல்லப்போகின்றது என்பதனை பார்க்கவேண்டியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49