பீபா விதித்த தடையை நீக்க முழு வீச்சில் முயற்சிப்பதாக ஸ்ரீ ரங்கா உறுதி

25 Jan, 2023 | 07:38 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு FIFA விதித்துள்ள தடையை நீக்குவதற்கும் கால்பந்தாட்ட விளையாட்டுக்கு புத்துயிர் கொடுப்பதற்கும் தானும் தனது நிருவாக சபையினரும் முழு வீச்சில் செயற்படவுள்ளதாக சம்மேளனத்தின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ள ஜே. ஸ்ரீ ரங்கா தெரிவித்தார்.

தலைவராகத் தெரிவானபோதிலும் தான் உட்பட நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு சம்மேளனத்தின் email password ஐ  முன்னாள் தலைவர் ஜஸ்வர் வழங்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் கால்பந்தாட்ட அணித் தலைவருமான ஸ்ரீ ரங்கா கூறினார்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு பீபாவினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதை அடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற சம்மேளனத்தின் நிருவாக சபை உத்தியோகத்தர்களுக்கான தேர்தலில் ஜே. ஸ்ரீ ரங்கா 27 - 24 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய தலைவரானார்.

ஊடக சந்திப்பில் தொடர்ந்து பேசிய அவர்,

'இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நிருவாக சபை உறுப்பினர்களாக தெரிவாகியிருக்கும் நாங்கள் அனைவரும் புதியவர்கள். இதற்கு முன்னர் ஒரே தரப்பினர்தான் மாறி மாறி போட்டியிட்டு பதவி வகித்து வந்துள்ளனர். நாங்களோ எவ்வித தொடர்பும் இல்லாமலேயே போட்டியிட்டு தெரிவாகியுள்ளோம். சம்மேளனத்தில் தங்கி வாழ வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. கால்பந்தாட்டத்திற்கு நாங்கள் நேர்மையாக, தூய்மையாக சேவையாற்றவே வந்துள்ளோம்' என்றார்.

'ஊடகங்களுடன் இது எனது முதலாவது சந்திப்பாகும். இந்த முதலாவது சந்திப்பு நல்லபடியாக அமையவேண்டும் என்றுதான் நாங்கள் எண்ணினோம். ஆனால் முதல் சந்திப்பிலேயே இம் மாதிரியான விடயங்களை கூறவேண்டிவரும் என நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தை பீபா தடை செய்திருப்பது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் தருகிறது. இதன் காரணமாக எங்களால் எதையும் செய்ய முடியாதுள்ளது. நாங்கள் தேர்தலில் வெற்றிபெற்றதை உரிய வேளைக்கு பீபாவுக்கு அறிவிக்க விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர்நாயகம் தவறியதே இதற்கு காரணம்.

'தேர்தலில் நான் வெற்றிபெற்ற அதே தினத்தன்றே (ஜனவரி 14) தேர்தல் முடிவுகளை பீபாவுக்கு விளையாட்டுத்துறை பணிப்பாளர்நாயகம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தால் இந்த சிக்கல் உருவாகி இருக்காது. அவரோ 9 தினங்கள் கழித்து ஜனவரி 23ஆம் திகதியன்றே பீபாவுக்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் முடிவுகளை அறிவித்தார். அதுவும் பீபாவினால் தடை விதிக்கப்பட்டு இரண்டு தினங்களின் பின்னராகும். இதன் மூலம் அவர் கடமையில் தவறியுள்ளார் என்பது புலனாகிறது. இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக நானும் செயலாளர்நாயகமாக இந்திக்க தேனுவரவும் தெரிவாகியுள்ளோம். எனினும் இலங்கை மீதான தடை குறித்து முன்னாள் செயலாளர்நாயகம் உபாலி ஹேவகேயின் பெயருக்கு பீபா கடிதம் அனுப்பிவைத்திருப்பது எங்களுக்கு பெரும் வியப்பை தோற்றுவித்துள்ளது' என ஜே. ஸ்ரீரங்கா தெரிவித்தார்.

'தேர்தலில் எமது தரப்பினர் வெற்றிபெற்ற பின்னர் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் தானே என கூறிக்கொண்டு ஜஸ்வர் எவ்வாறு பீபாவுக்கு அரசியல் தலையீடு எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்ப முடியும். உண்மையில் இங்கு தேர்தல் நடத்தப்பட்டது பீபாவுக்கு தெரியாமல் போய்விட்டதா?

'சம்மேளனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாலேயே தன்னால் யாப்பு விதிகளை திருத்தி அமைக்க முடியாமல் போனதாக ஜஸ்வர் கூறுகிறார். ஆனால், இன்று அவர் என்ன செய்கிறார். வழக்குக்கு மேல் வழக்கு தாக்கல் செய்து சம்மேளனத்தின் செயற்பாடுகளை அவர் முடங்கச் செய்துள்ளார். அது எந்த வகையில் நியாயம்.  இதன் காரணமாக இலங்கை கால்பந்தாட்ட விளையாட்டையும் வீரர்களையும் அவர் நட்டாற்றில் தத்தளிக்க விட்டுள்ளார்' என ரங்கா சுட்டிக்காட்டினார்.

'இத்தகைய ஈனச் செயல்களால் இலங்கை கால்பந்தாட்டம் பாதிக்கப்படும். அவர்கள் எல்லோரும் ஏன் எமக்கு இப்படி செய்கிறார்கள்? நாங்கள் புதியவர்கள். சம்மேளனத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு ஆட்சி செய்ய வரவில்லை. நாங்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்தவே தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றிபெற்றோம். என்னைப் பொறுத்தமட்டில் ஊழல் மோசடியற்ற நிருவாகத்தை கட்டியெழுப்புவதே எனது தலையாய பணியாக இருக்கும். எனவே உள்ளக கணக்காய்வாளர் ஒருவரை நியமிக்க நானும் எனது நிருவாக சபையினரும் தீர்மானித்துள்ளோம். அத்துடன் பாராளுமன்ற கோப் குழுவும் கணக்காய்வுத் திணைக்களமும் சம்மேளனத்தின் நிதி தொடர்பாக ஆய்வு செய்யும். அப்போது எல்லா உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும்' என ஸ்ரீ ரங்கா மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் மீதான தடையை நீக்கி இலங்கையில் கால்பந்தாட்ட விளையாட்டிற்கு புத்துயிர் கொடுத்து விளையாட்டு வீரர்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் தனது தலைமையிலான நிருவாக சபை முழு வீச்சில் முயற்சிக்கும் என ரங்கா குறிப்பிட்டார்.

பீபாவின் தடையை நீக்குவதற்கும் கால்பந்தாட்டதை மேம்படுத்துவதற்கும் யாருடனும் இணைந்து செயற்படத் தயார் என கூறும் ஜஸ்வர், தூய சிந்தையுடன் எம்மோடு இணைந்து செயற்படவேண்டும் எனவும் ஊடகங்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஸ்ரீ ரங்கா அழைப்பு விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதம் குவித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார் ஜோ...

2024-02-23 22:25:16
news-image

மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று...

2024-02-23 21:56:41
news-image

பென்ஸ் - வெஸ்லி சமஅளவில் மோதல்...

2024-02-23 21:20:49
news-image

ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர்...

2024-02-23 17:57:46
news-image

றோயல் - தோமாவின் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 22:05:50
news-image

றோயல் - தோமியன் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 00:42:42
news-image

நடுவருடன் மோதல் - வனிந்து போட்டி...

2024-02-22 15:09:19
news-image

விக்ரம் - ராஜன் - கங்கு...

2024-02-22 14:49:14
news-image

மூன்றாவது ரி20 போட்டியில் நோபோல் சர்ச்சை...

2024-02-22 13:51:18
news-image

இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல்...

2024-02-22 00:28:59
news-image

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான நான்காவது...

2024-02-21 16:12:47
news-image

ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கு பிக்ஸ்டன் அனுசரணை

2024-02-21 14:45:53