(பா.ருத்ரகுமார்)

பொது முயற்சியான்மை குறித்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பியிருக்க வேண்டியது பிரதமர் அல்ல சபாநாயகரே என, ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

 

சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடிகள் குறித்து விசாரணை செய்ய சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழு தனது இறுதி அறிக்கையை கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. 

குறித்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது பாராளுமன்றத்திற்கு சொந்தமான ஆவணமாகும். அந்த அறிக்கை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டியது சபாநாயகராகிய நீங்களே என்பது, பாராளுமன்ற விவகாரம் குறித்த அனுபவம் மிக்க உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

ஆனால் உங்கள் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அவ்வாறு அந்த அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப வேண்டுமாயின் அதனை தீர்மானிக்க வேண்டியது, பிரதமர் அல்ல, முழுப் பாராளுமன்றத்தினாலுமே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும். 

இதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனையோ அல்லது வேறெந்த நடவடிக்கையோ மேற்கொள்ள வேண்டுமாயின், அது எம் அனைவரின் சார்பிலும் சபாநாயகரான உங்களாலேயே முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், இந்த அறிக்கையை 2017 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள முதலாவது சபைக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்து, இது தொடர்பில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.