(என். வீ. ஏ.)
நியூஸிலாந்துக்கு எதிராக இந்தூர் ஹொல்கர் கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 90 ஓட்டங்களால் இந்தியா இலகுவாக வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் நியூஸிலாந்துடனான 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முழுமையாக தனதாக்கிக்கொண்டது.
அப் போட்டியில் இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 386 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 41.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 295 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
முதலாவது ஓவரிலேயே பின் அலனின் விக்கெட்டை இழந்த போதிலும் அடுத்த 3 துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி இந்தியாவுக்கு சோதனை கொடுத்தனர்.
குறிப்பாக மற்றைய ஆரம்ப வீரர் டெவன் கொன்வே அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி இப் போட்டியில் சதம் குவித்த மூன்றாவது வீரரானார்.
ஹென்றி நிக்கல்ஸுடன் 2ஆவது விக்கெட்டில் 106 ஓட்டங்களையும் டெரில் மிச்செலுடன் 3ஆவது விக்கெட்டில் மேலும் 82 ஓட்டங்களையும் கொன்வே. பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டிக்கொண்டிருந்தார்.
ஆனால், சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்ததால் நியூஸிலாந்தின் வெற்றிக்கான முயற்சி கைகூடாமல் போனது.
டெவன் கொன்வே 100 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் அடங்கலாக 138 ஓட்டங்களைக் குவித்தார். 18ஆவது போட்டியில் விளையாடும் டெவன் கொன்வே பெற்ற 3ஆவது சர்வதேச ஒருநாள் சதமாகும்.
அவரை விட ஹென்றி நிக்கல்ஸ் 42 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 24 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் மைக்கல் ப்றேஸ்வெல் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
25 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றிருந்த நியூஸிலாந்து அடுத்த 16.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 111 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
இந்திய பந்துவீச்சில் ஷர்துல் தக்கூர் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் யுஸ்வேந்த்ர சஹால் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 385 ஓட்டங்களைக் குவித்தது.
அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் 26 ஓவர்களில் சதங்களைப் பூர்த்தி செய்ததுடன் 212 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
இதன் காரணமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 500 ஓட்டங்களை இந்தியா முதலாவது அணியாக பெறும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது.
ஆனால், அதன் பின்னர் இந்திய துடுப்பாட்டத்தை நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர்.
முதல் 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 212 ஓட்டங்களைக் குவித்த இந்தியா அடுத்த 24 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ரோஹித் ஷர்மா 85 பந்துகளில் 9 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களையும் ஷுப்மான் கில் 78 பந்துகளில் 13 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 112 ஓட்டங்களையும் குவித்தனர்.
ரோஹித் ஷர்மா தனது 241ஆவது போட்டியில் 30ஆவது சதத்தைக் குவித்ததுடன் ஷுப்மான் கில் தனது 21ஆவது போட்டியில் 4ஆவது சதத்தைப் பெற்றார்.
அவர்கள் இருவரும் வெளிப்படுத்திய அதே ஆக்ரோஷத்தை, அதிரடி ஆற்றலை ஏனைய வீரர்களும் பின்பற்ற முயற்சித்த போதிலும் நியூஸிலாந்தின் பந்துவீச்சாளர்கள் அவர்களது விக்கெட்களை சுலபமாக வீழ்த்தினர்.
மேலும், இந்திய துடுப்பாட்ட வீரர்கள் அநாவசியமாக பந்தை சுழற்றி அடிக்க விளைந்து விக்கெட்களை இழந்தவண்ணம் இருந்தனர்.
ஆரம்ப வீரர்களை விட விராத் கோஹ்லி (36), ஹார்திக் பாண்டியா (54), ஷர்துல் தக்கூர் (25) ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
நியூஸிலாந்து பந்துவீச்சில் ப்ளயார் டிக்னர் 76 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் 76 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜேக்கப் டஃபி 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM