(எம்.ஆர்.எம்.வஸீம்)

சீன கம்பனியுடன் அரசாங்கம் செய்துகெண்டுள்ள ஒப்பந்தத்தை நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார். 

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக்க ஹெல உறுமயவின் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

அரசாங்கம் அம்பந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. ஆனால் இது தொடர்பாக செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை  நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அதில் ஒரு நிபந்தனையாக அம்பந்தோட்டை முதல் காலிவரையும் மற்றும் அம்பந்தோட்டை முதல் ஒழுவில் வரையும் 99 வருடங்களுக்கு எந்தவொரு சர்வதேச துறைமுகங்கள் அமைக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இவ்வாறான ஒப்பந்தங்கள் நாட்டுக்கு பொருத்தமானதல்ல. அத்துடன் அரசாங்கம் நாட்டுக்குள் இந்தியா,சீனா மற்றும் அமெரிக்க நாடுகளை திருப்திப்படுத்த முயற்சித்து வருவதானது எதிர்காலத்துல் நாடு யுத்த பூமியாக மாறும். அதனால் அரசாங்கம் சிந்தித்து செயற்படவேண்டும் என்றார்.