இன்றைய சூழலில் இறை நம்பிக்கை கொண்ட குடும்பங்களிலுள்ள திருமண வயதை எட்டிய ஆண் மற்றும் பெண்களுக்கு திருமணம் செய்ய அவர்களது பெற்றோர்கள் தீர்மானித்தவுடன், முதலில் அவர்கள் தங்களது பிள்ளைகளுடைய ஜாதகங்களை எடுத்துக் கொண்டு நன்கு பரீட்சயமான ஜோதிட நிபுணர்களை தேடிச் செல்வர். அவரிடம் மணமகன் அல்லது மணமகளின் ஜாதகத்தை அளித்து பொருத்தம் இருக்கிறதா? பாருங்கள் என கேட்பர்.
உடனடியாக ஜோதிட நிபுணர்களும் நட்சத்திரப் பொருத்தம், தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், ராசி பொருத்தம், யோனி பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம் என பத்து பொருத்தம் இருக்கிறதா? என்பதனை ஆய்வு செய்து, எத்தனை பொருத்தம் இருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானித்து தெரிவிப்பார்.
அதனைத் தொடர்ந்து பத்து பொருத்தமும் இருந்தால் திருமணம் தொடர்பான பேச்சை தொடர்வர். தற்போதைய சூழலில் ஏழு அல்லது எட்டு பொருத்தம் இருந்தால் போதும் என கருதி, திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தையை பெற்றோர்கள் தொடங்குகிறார்கள்.
மேலும் சில ஜோதிடர்கள் இந்த பத்து பொருத்தங்களுடன் மணமகன் மற்றும் மணமகளின் லக்னம், லக்னாதிபதி, திசா புத்தி, அடுத்து என்ன திசை வரப்போகிறது? உள்ளிட்ட பல நுட்பமான விடயங்களையும் ஆராய்ந்து, திருமண திகதியை குறித்துக் கொடுப்பர். இவை அனைத்தும் நடைபெற்ற பிறகும் பலரது வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருப்பதில்லை. சிலர் மணமுறிவு ஏற்பட்டு, விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.
இது தொடர்பாக சோதிட வல்லுனர்களிடையே பல்வேறு வகையினதான கருத்துகளும், விதிவிலக்குகளும், பரிகாரங்களும் இருக்கின்றன. இருப்பினும் புதிதாக இல்லற வாழ்க்கையில் இணையவிருக்கும் ஜோடிகளின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக தொடர்ந்து ஆயுள் முழுவதும் நீடிக்க வேண்டுமென்றால் அவர்களது ஜாதகத்தில் ராகு மற்றும் கேது எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதனை துல்லியமாக அவதானிக்க வேண்டும்.
இந்த நுட்பமான ஜோதிட ரகசியம் சில ஜோதிட வல்லுனர்களுக்கு மட்டுமே கைவந்த கலையாக இருக்கிறது. அந்த சூட்சுமத்தை நாமும் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் ராகு எங்கு நிற்கிறாரோ... அந்த இடத்திலிருந்து ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய இடங்களில் உங்களது துணையின் ஜாதகத்தில் ராகு நின்றிருந்தால், அந்த ஜாதகர்களின் இல்வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இவர்களது இணைவு என்பது பூர்வ ஜென்மத்தில் தீர்மானிக்கப்பட்டது என சோதிட விதிகள் சொல்கின்றன.
திருமண பொருத்தம் பார்க்க வரும் ஜாதகத்தில் ஆணின் ஜாதகத்தில் ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு சாயா கிரகங்கள் எங்கு இருக்கிறது என்பதனையும், எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது என்பதனையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் பெண் ஜாதகத்தில் ராகு எங்கு இருக்கிறாரோ அதுதான்- அந்த நட்சத்திரம் தான் அவர்களின் யோனி, ஆண் ஜாதகத்தில் கேது எங்கிருக்கிறாரோ அதுதான்- அந்த நட்சத்திரம் தான் அவர்களின் யோனி. இந்த இரண்டும் பொருத்தமாக இருக்கிறதா? இல்வாழ்க்கைக்கு ஏற்றதாக இருக்கிறதா? என்பதனை துல்லியமாக சில விதிகளின்படி அலசி ஆராய வேண்டும்.
இந்நிலையில் 27 நட்சத்திரங்களில் ராகு எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ அதற்கு ஏற்ற வகையில் 1,2,3,4 என எண்கள் வழங்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், மகம், பூரம், மூலம், பூராடம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களுக்கு ஒன்று என எண்ணும், கார்த்திகை, பூசம், சித்திரை, விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களுக்கு இரண்டு என எண்ணும், அஸ்வினி, அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு மூன்று என்ற எண்ணும், பரணி, உத்திரம், ஹஸ்தம், சுவாதி, உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களுக்கு நான்கு என்ற எண்ணும் வழங்கப்பட்டிருக்கிறது.
பெண்ணின் ஜாதகத்தில் ராகு நின்ற நட்சத்திரத்தின் எண்ணும், ஆணின் ஜாதகத்தில் கேது நின்ற நட்சத்திரத்தின் எண்ணும் ஒன்று - ஒன்று என சமமாக இருந்தாலும், இரண்டு - இரண்டு என சமமாக இருந்தாலும், மூன்று - மூன்று என சமமாக இருந்தாலும், நான்கு- நான்கு என சமமாக இருந்தாலும் சிறப்பான பொருத்தம் இருக்கிறது என பொருள்.
அதே தருணத்தில் ஆணின் ஜாதகத்தில் ஒன்று என எண்ணும், பெண்ணின் ஜாதகத்தில் இரண்டு என்ற எண்ணும் வந்தாலும் பொருத்தம் உண்டு. அதே தருணத்தில் பெண்ணின் ஜாதகத்தில் இரண்டு என்ற எண்ணும், ஆணின் ஜாதகத்தில் ஒன்று என்ற எண்ணும் இருந்தாலும் பொருத்தம் உண்டு.
மேலும் ஆணின் ஜாதகத்தில் மூன்று என்ற எண்ணும், பெண்ணின் ஜாதகத்தில் நான்கு என்ற எண்ணும் இருந்தாலும் இணைக்கலாம். அதே போல் பெண்ணின் ஜாதகத்தில் மூன்று என்ற எண்ணும், ஆணின் ஜாதகத்தில் நான்கு என்ற எண் இருந்தாலும் இணைக்கலாம்.
ஆனால் ஆணின் ஜாதகத்திலோ அல்லது பெண்ணின் ஜாதகத்திலோ ராகுவின் எண் ஒன்றாக இருந்து, பெண்ணின் ஜாதகத்திலோ அல்லது ஆணின் ஜாதகத்திலோ கேதுவின் எண் மூன்றாக இருந்தால் அவர்களை இணைக்க கூடாது. மேலும் ஆணின் ஜாதகத்திலோ அல்லது பெண்ணின் ஜாதகத்திலோ, ராகுவின் எண் இரண்டாக இருந்து, பெண்ணின் ஜாதகத்திலோ அல்லது ஆணின் ஜாதகத்திலோ கேதுவின் எண் நான்காக இருந்தாலும் இணைக்க கூடாது.
ஜாதகத்தில் திருமண பொருத்தத்தை பத்து பொருத்தங்களுடன் பார்ப்பதை விட, ராகு - கேதுக்களின் பொருத்தத்தை மட்டும் துல்லியமாக அவதானித்து அது சரியாக இருந்தால், இல்வாழ்க்கையில் இணையலாம். இவர்கள் ஆயுள் முழுவதும் அவர்களின் கர்ம வினைக்குரிய சம்பத்துகளை பெற்று மன மகிழ்ச்சியுடன் வாழ்வர் என்பது சோதிடம் வலியுறுத்தும் நுட்பமான உண்மை.
தகவல்: குருசாமி நாகராஜ்
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM