புன்னகை மாறாமல் காட்சி அளிக்கும் பெண்கள்

By Ponmalar

23 Jan, 2023 | 01:34 PM
image

மகிழ்ச்சி தான் வாழ்க்கையை வசந்தமாக்கும் திறவுகோல். எந்த வேலையாக இருந்தாலும் அதை ரசித்து சந்தோஷமாக செய்ய தொடங்க வேண்டும். அப்போதுதான் அந்த காரியங்களில் முழு கவனத்தையும் செலுத்த முடியும். 

இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டிருப்பவர்கள் எந்தவொரு விஷயத்தையும் சுலபமாக கையாண்டுவிடுவார்கள். பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் சாதுரியமாக சமாளித்து விடுவார்கள். சட்டென்று மன நிம்மதியை இழக்க மாட்டார்கள். மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்வார்கள். மகிழ்ச்சியான மன நிலையில் இருப்பவர்களிடம் மன அழுத்தம் எட்டிப்பார்க்காது. அதனால் மகிழ்ச்சியான மனநிலையை தக்க வைப்பதை அன்றாட கடமையாக்கி கொள்ள வேண்டும். 

எப்போதும் மன இறுக்கமாக இருப்பவர்களிடம் மகிழ்ச்சி ஒருபோதும் நிலைத்திருக்காது. அவர்களிடம் நெருங்கி பேசுவதற்கே பலரும் பயப்படுவார்கள். அதனால் அவர்களுடன் நட்புறவை பேணுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கும். 

அலுவலகங்கள், பொது இடங்கள், உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் அவர்களை தேடிச்சென்று நலம் விசாரிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். 

வீட்டில் கூட தனிமை சூழலுக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுவிடும். அவர்களிடத்தில் குழந்தைகள் கூட சகஜமாக பேசுவதற்கு தயங்குவார்கள். 

பெண்களிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு குடிகொண்டிருக்கும். எப்போதும் புன்னகை மாறாமல் காட்சி அளிக்கும் பெண்களின் வீடு எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். அவர்களிடம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நெருங்கி பழகுவார்கள். அவர்களின் மனங்களில் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும். 

அத்தகைய சந்தோஷமான மனநிலையும், திருப்தி அடையும் மனப் பக்குவமுமே வாழ்க்கையை வசந்தமாக்கும். 

இத்தகைய எதார்த்தத்தை புறக்கணித்து விட்டு பலவிதமான எதிர்பார்ப்புகளுடன் வாழ்பவர்கள் எளிதில் மனக் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். மனக்கவலை, மனக்குழப்பம் இல்லாமல் இருந்தாலே மகிழ்ச்சி எட்டிப்பார்க்கும். சந்தோஷம்தான் வாழ்வின் அடிப்படை தேவை. 

கவலை, துயரம், கோபம், ஆக்ரோஷம், விரக்தி இவையெல்லாம் உடல் நலனையும், மன நலனையும் பாதிக்கக்கூடியவை. வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்கு `மகிழ்ச்சி' எனும் கடலில் மூழ்கி `நிம்மதி' எனும் முத்தெடுக்கும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்