சீன எல்லையில் பிரம்மாண்ட போர் பயிற்சி - இந்திய விமானங்கள், ஏவுகணைகள் குவிப்பு

Published By: Rajeeban

23 Jan, 2023 | 11:08 AM
image

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில், சீன எல்லைக்கு அருகே இன்னும் சில நாட்களில் மிகப் பெரிய அளவில் போர் பயிற்சி மேற்கொள்ள இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

இந்தியா-சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை அடிக்கடி தலைதூக்குகிறது. 2017-ல் சீன எல்லையான டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டது. இதை இந்திய வீரர்கள் தடுத்தபோது, இரு தரப்பு ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. உயர்நிலை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இருதரப்பு ராணுவத்தினர் தங்கள் படைகளை டோக்லாம் பகுதியிலிருந்து விலக்கிக் கொண்டனர்.

2020-ல் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்தியா சார்பில் சாலை அமைக்கப்பட்டதற்கு சீன ராணுவம் எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது நடந்த மோதலில், இரு தரப்பிலும் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டன. கடந்த டிசம்பர் 9-ம் தேதி, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் இரு தரப்பு ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டன.

இந்தியா-சீன எல்லை வரையறுக்கப்படாததால், சீன ராணுவத்தின் ஊடுருவல் மற்றும் ஆக்கிரமிப்பு அடிக்கடி நடைபெறுகிறது. சீன எல்லைப் பகுதிகளில் ராணுவப் படைகளை சீனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்குள்ள ராணுவத்தினரை சீன அதிபர் ஜீ ஜின்பிங் சமீபத்தில் சந்தித்து, விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

பதிலுக்கு இந்தியாவும் சீன எல்லை அருகே படைகளை அதிகரித்து வருகிறது. எந்தச் சூழலையும் சந்திக்கத் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவம், விமானப்படை தளபதிகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர்.

மேகாலயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் இந்திய விமானப்படையின் கிழக்கு மண்டல கட்டுப்பாட்டு மையம் உள்ளது. இது வடகிழக்குப் பகுதியில் உள்ள வான் பகுதிகள் முழுவதையும் கண்காணிக்கிறது. சீன போர் விமானங்கள் எல்லைப் பகுதியை நெருங்கி வர முயலும்போது, அவற்றை திருப்பி அனுப்ப இந்திய போர் விமானங்களை இந்த கட்டுப்பாட்டு மையம் அனுப்புகிறது.

இந்நிலையில், வடகிழக்குப் பகுதியில் சீன எல்லை அருகே இன்னும் சில நாட்களில் மிகப் பெரிய போர் பயிற்சியில் ஈடுபட இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இதற்கு ‘ப்ராலே’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பகுதிகளில் உள்ள அனைத்து விமானப்படைத் தளங்களும் போர் பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட உள்ளன. இதில், இந்திய விமானப்படையில் உள்ள அதிநவீன ரஃபேல் மற்றும் சுகாய் போர் விமானங்கள மற்றும் போக்குவரத்து விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

மேலும், நாட்டின் இதர இடங்களில் இருந்த ட்ரோன் படைப் பிரிவுகளை, வடகிழக்குப் பகுதிக்கு இந்திய விமானப் படை கொண்டு சென்றுள்ளது. இதன் மூலம் சிக்கிம் மற்றும் சிலிகுரி பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது.

தயார் நிலையில் எஸ்-400: சில மாதங்களுக்கு முன்பு ரஷ்யா வழங்கிய எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை, வடகிழக்கு எல்லை அருகே இந்திய விமானப்படை தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த ஏவுகணை 400 கி.மீ. தொலைவுக்குள் வரும் எதிரி நாட்டின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை நடு வானிலேயே சுட்டு வீழ்த்தும் திறன் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47