நான் லசந்த விக்கிரமதுங்கவுடன் தொலைபேசியில் உரையாடுவது வழமையான ஒன்றாகும். நானும் லசந்த விக்கிரமதுங்கவும் தொலைபேசியில் உரையாடும் வகையில் வெளியாகியுள்ள ஒலிப்பதிவு சிலவேளை உண்மையானதாக இருக்கலாம். எனினும் நான் இதனை கதைத்தேனா அல்லது இல்லையா என்று ஞாபகம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு ஒன்று தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லசந்த விக்கிரமதுங்க இலங்கை அரசுக்கெதிராகவும் பல அரசியல்வாதிகள் தொடர்பாகவும் ஆயுதக் குழுக்கள் தொடர்பாகவும் மிக நீண்டகாலமாக மிகக் கடுமையான கட்டுரைகளை "சண்டே லீடர்', மோர்னிங் லீடர் மற்றும் ஞாயிறு சிங்களப் பத்திரிகையான "இருதின' ஆகியற்றில்  வெளியிட்டு வந்ததால் இவர் பல ஆண்டுகளாக்க தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வந்திருந்தார்.

இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி தெஹிவளை, அத்திட்டய பேக்கரி சந்தியில் வைத்து லசந்த விக்கிரமதுங்க இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார். 

இந்தப் படுகொலை இடம்பெற்று 8 வருடங்கள் கடந்த பின்னர், இவ்வாறானதொரு ஒலிப்பதிவு அம்பலமாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த உரையாடல் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக இருவருக்கும் இடையிலான உரையாடல் மூலம் தெரியவருதோடு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவுரை கூறும் வகையில் இந்த உரையாடல் அமைந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

'இந்த சம்பவம் இன்று நடைபெற்றதல்ல. அக்காலத்தில் இடம்பெற்ற ஒன்றாகும். அந்த ஒலிப்பதிவு சில வேளை உண்மையானதாக இருக்கலாம். நான் லசந்த விக்கிரமதுங்கவுடன் தொலைபேசியில் உரையாடுவதை வழமையாக கொண்டிருந்தேன். இது ஒன்றும் புதிய விடயமில்லை. எனினும் குறித்த விடயம் தொடர்பில் கதைத்தேனா அல்லது இல்லையா என்று எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் தொலைபேசியில் கதைப்பதையெல்லாம் லசந்த பதிவு செய்வதை அவருடைய வழக்கமாக கொண்டிருந்தார்.

ஆனால் அவர் இந்த உரையாடலை பதிவு செய்தாரா என்று தெரியவில்லை. ஊடகவியலாளர் என்ற வகையில் ஒருவேளை உரையாடலை ஒலிப்பதிவு செய்திருக்காலம்' என்றார்.