மக்கள் விரும்புகின்றார்கள் என்பதற்காக நான் ஓவியம் வரைவது என்பது ஒருவித வியாபாரத்தனமாகிவிடும். அதேவேளை எனது எண்ணத்திற்கு ஏற்பவும் ஓவியங்கள் அமைந்துவிடலாகாது. ரசிப்பவர்களின் கருத்துக்களை கேட்டு ஓவியங்களின் குறை நிறைகளை அறிந்துக்கொண்டு வரைவதே சிறப்பாகும் என்கிறார் திருமதி சாந்தி சண்முகநாதன்.
ஓவியரும் குடும்ப தலைவியுமான இவர் கண்டி மோப்ரே கல்லூரியின் பழைய மாணவியாவார்.
ஓவியத்தின் மீதான காதலையும் அவரது ஓவியங்கள் சொல்லக்கூடிய கதைகளையும் எதிர்வரும் ஓவிய கண்காட்சியில் வெளிப்படுத்த உள்ள நிலையில் தன் ஓவியங்கள் குறித்து வீரகேசரி வாசகர்களின் பார்வைக்கு…
அறிமுகம்
நான் திருமதி சாந்தி சண்முகநாதன். குடும்ப தலைவி.
பிறந்து வளர்ந்தது கண்டி மாநகரில்தான். எனது கல்வியை கண்டி மோப்ரே கல்லூரியில் தொடர்ந்தேன். பாடசாலை கல்வி முடிந்ததும் எனக்கு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை தொடர்வதற்கான வாய்ப்பு கிட்டிய போதும், சில காலங்களே அதனை அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டியது.
காரணம், எனது பெற்றோர் பெண் பிள்ளைகளுக்கு குறிட்ட வயதுக்குள் திருமணமாகிவிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தனர். எனவே, மேற்படிப்பை கைவிட்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டேன்.
இதன் பின்னர் டுபாயில் எட்டு வருடங்கள் வசித்தேன். எனக்கு மூன்று பிள்ளைகள். அவர்கள் தனியே புத்தக படிப்பை மட்டுமன்றி ஏனைய கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற இதர விடயங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் என நினைத்தேன். அதற்காக ஒரு குடும்ப தலைவியாக எனது நேரத்தை செலவிட்டேன்.
தற்போது பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்து அவரவர் வாழ்க்கை ஓட்டத்தில் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். இப்போது, எனக்கு நிறையவே நேரம் இருக்கின்றது. எனவே, நான் கல்லூரி காலங்களில் எந்த கலையை ஆர்வமாக கற்றேனோ அதில் மீண்டும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளேன்.
கலை மீதான ஆர்வம்…
கலை என்பது நான் பிறந்தது முதல் என்னோட ஊறி வந்த ஒன்றாகும், அது எப்போது வந்தது என்று கேட்டால் அது எனக்கு மிக கஷ்டமான ஒரு கேள்வி ஆகும்.
சிறு வயது தொடக்கம் எனக்கு கலை மீதான ஆர்வம் மிகுந்திருந்தது. ஓவியங்கள் வரைவது கைவினை பொருட்கள் செய்வது என எனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன்.
நான் படித்த காலங்களில் பாடசாலை கல்வியை தவிர்ந்த எனைய கலைகளையும் கற்பதற்கான வாய்ப்பு இருந்தது. இது எங்களுக்குள் என்ன ஆர்வம் இருந்தது என்பதை வெளி கொண்டுவர பெரிதும் உதவியது. இதனால் எனது கலை மீதான ஆர்வத்தினை வளர்த்துக் கொள்ள முடிந்தது.
குடும்ப வாழ்க்கைக்குள் வந்ததன் பின்னர் ஓவியங்கள் வரைவது, கைவினை பொருட்களை செய்வதில் ஆர்வம் இருப்பினும் கூட பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளில் ஆர்வம் காட்டியதால் சிறிது இடைவெளி ஏற்பட்டு போனது. தற்போது பிள்ளைகள் வளர்ந்து அவர்கள் அவர்களது குடும்பங்களோடு இருக்கின்றனர்.
ஆக, எனக்கு தற்போது ஓய்வான நேரம் கிடைக்கின்றது. இந்த ஓய்வான நேரத்தை வீணே விணடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. எனவே, நான் எனது கலை பணியை மீண்டும் ஆரம்பித்தேன்.
குறிப்பாக, கொரோனா தொற்று பரவல் காலத்தில் கிடைத்த நீண்டகால ஓய்வில் எனது எண்ணத்தில் உதித்த பல ஓவியங்களை வரைந்தேன்.
எனது இந்த ஓவிய பணிக்கு எனது குடும்ப உறவுகள் குறிப்பாக எனது கணவர் மிக உருதுணையாக உள்ளார்.
நமக்குள் இருக்கும் கலை ஆர்வத்தை இனங்காண்பதெப்படி?
ஒவ்வொருவருக்கும் ஒரு பிடித்தமான பொழுதுபோக்கு இருக்கும் அது என்ன என்பதை சரியாக அறிந்துக் கொண்டால் அது நமக்கான அதிர்ஷ்டம் என்றே நான் கருதுவேன்.
நான் ஓவியம் வரைவது தவிர்ந்த இகிபானா எனப்படும் ஜப்பானிய பூவினை அலங்காரம், ஜப்பானிய மரம் வளர்க்கும் கலையான பொன்சாய் போன்ற கலை சார்ந்த விடயங்களில் ஆர்வம் இருந்தமையால் அதனை கற்றுக் கொண்டது மட்டுமன்றி அதனை விருப்பமாக செய்தும் வருகின்றேன்.
இவை தவிர்ந்த செடிகள் வளர்த்து அதனை பராமரிப்பது போன்ற தோட்ட வேளையில் மிகுந்த ஆர்வம் உள்ளது. கலை என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது வரையறுக்கப்பட்டடது அல்ல.
எந்த வயதிலிருந்து ஓவியம் வரைய ஆரம்பித்தீர்கள்?
இது மிக கடினமான கேள்வி. எனது நான்கு ஐந்து வயதிலேயே எனது எந்த பாட புத்தகத்தை எடுத்து கொண்டாலும் அதில் ஒரு ஓவியம் இருக்கும் இதனால் பல பிரச்சினைகளை சந்தித்திருக்கின்றேன்.
ஓவியம் வரைவது என்பது எனக்குள்ளேயே பிறந்தது. அதனால், அதன் வெளிபாடு என்பது இந்த கால பகுதிதான் என்பதை என்னால் குறிப்பிட்டு கூற முடியாதுள்ளது.
உங்கள் ஓவியங்கள் எதைப்பற்றி பேசுகின்றன?
என் எண்ணத்தை பொருத்தவரையில் நம்மை சூழ்ந்திருக்கும் இந்த இயற்கை கூட அழகுதான். எனினும், மனித உடல் அது ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அதில் நான் கலையை ஓவியமாக கொண்டுவருகின்றேன்.
அதிலும், குறிப்பாக பெண் ஓவியங்களை வரைவதில் என்கு மிகவும் விருப்பமுண்டு.
என் இளமை காலத்தில் எனது வீட்டுக்கு வேலைக்கு வரும் பெண்களை அவதானித்திருக்கின்றேன். அவர்கள் உரலில் மா இடிப்பது, அவர்கள் செய்யும் வேலைகள் என்பன எனது மனதில் பதித்துவிட்டது.
அவற்றை தற்போது ஓவியமாக வரையும்போது அந்த நாட்களின் நினைவுகள் எனக்குள் வருகின்றன.
எவ்வாறான சூழலில் ஓவியங்களை வரைகின்றீர்கள்?
ஓவியங்கள் வரைவதற்கு முதலில் மனம் அமைதியாக இருக்க வேண்டும். இதுதவிர காலை வேளைகளில் ஓவியம் வரைவது எனக்கு பிடிக்கும். நான் வீட்டினுள்ளேயன்றி வீட்டுக்கு வெளியே தோட்டத்தில் ஓவியங்களில் வரைவதால் மதியம் வெப்பமான நேரங்களை தவிர்க்கிறேன்.
ஓவியங்களுக்கு ஓயில் கென்வஸ் பயன்படுத்தும்போது மூடிய அறையில் பயன்படுத்துவது உகந்ததல்ல. எனவேதான், திறந்த வெளியில் தான் இவ்வாறான ஓவியங்களை வரைவதை வழமையாக வைத்துள்ளேன்.
ஒரு ஓவியத்தை வரைய எவ்வளவு நேரம் செலவிடுகின்றீர்கள்?
ஒரு ஓவியத்தை வரைய முடிவு செய்துவிட்டால் மனதில் உள்ள அந்த உருவை முதலில் ஒரு வரைதல் கொப்பியில் பென்சிலால் வரைந்து கொள்வேன். இது சிலருக்கு சிறுபிள்ளை தனமாக தெரியலாம் எனினும் இதுவே எனது வழமை.
பின் பென்சிலால் வரைந்த உருவை ஓவியமாக வரைய ஆரம்பிப்பேன்.
ஆக ஓவியம் வரைவதற்கு ஸ்கெட்ச்தான் முதமையானது. இதனை சரியாக வரைந்துவிட்டால் ஓவியம் வரைய ஆரம்பித்துவிடலாம்.
எனினும், ஸ்கெட்ச்சிங் வரைவதற்கு ஒருவாரம் வரை ஆகும். இதன் பின்னர் ஓவியத்தை மூன்று நான்கு நாட்களில் வரைந்து முடித்துவிடலாம்.
ஓவியத்தை வரைந்து முடிந்ததன் பின்னர் நம் வேலைகளின் இடையே ஓவியத்தின் குறைபாடுகளை செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போதுதான் இறுதியாக நாம் நம் மனதில் கொண்டுவந்த உருவம் ஓவியத்தை முழுமைப்பெறும்.
ஒவ்வொரு ஓவியத்திற்கும் அதிகமான நேரத்தை செலவிட வேண்டும்.
எதிர்வரும் வாரம் இடம்பெறவிருக்கும் ஓவிய கண்காட்சி பற்றி
Beyond Borderd என்ற தலைப்பின் கீழ் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் லயனெல் வென்ட் ஆர்ட் கெலரியில் (Lionel Wendt Art Gellery) காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையில் ஓவிய கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம்.
இதில் முழுவதுமாக நான் வரைந்த 75 க்கும் அதிகமான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இந்த கண்காட்சியானது விற்பனை ஓவிய கண்காட்சியாகவே இடம்பெறவுள்ளது.
ஓவியங்களுக்கு விலை நிர்ணயிப்பது கடினம் எனினும் இதற்கு அப்பாட்பட்ட விடயமாக இதில் கிடைக்கும் நிதியின் ஒரு பகுதியை நான் படித்த கல்லூரியான கண்டி மோப்ரே கல்லூரிக்கும் வழங்க முடிவு செய்துள்ளேன்.
அடுத்து, எனது கணவர் ரோட்டரி கழகத்தின் மூலம் பல சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் நீர் வசதி மலசலகூட வசதிகலற்ற பின் தங்கிய கிராமங்களுக்கு அவ்வகையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கின்றனர். எனவே, அதற்கு இதன் மிகுதி நிதியை வழங்க திட்டமிட்டுள்ளேன்.
ஓவியம் வரையாய ஆர்வமுடைய ஒருவருக்கு நீங்கள் கூறும் அறிவுரை?
ஓவியம் வரையவேண்டும் ஓவியம் வரையவேண்டும் என எண்ணிக் கொண்டே இருக்க வேண்டாம் அதனை உடன் நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்.
நாளைக்கு செய்வோம் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என எதனையும் தள்ளிப் போட வேண்டாம்.
நேர்காணல்: பொன்மலர் சுமன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM