நெற்செய்கையில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் உர மானியத்திற்காக மேலும் 1.5 பில்லியன் ரூபாவை நிதியமைச்சு இன்று வழங்கியுள்ளதையடுத்து நெற்பயிர் செய்கை விவசாயிகளுக்காக அரசாங்கம் இதுவரை 7 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

நாட்டின் நெற்பயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதற்கு தேவையான மானியங்களை பெற்றுக்கொடுப்பதற்காக ஏற்கனவே 5.5 பில்லியன் ரூபா நிதி அமைச்சினூடாக ஒதுக்கப்பட்டிருந்தது. 

தற்போதைய அரசாங்கம் அறிவித்ததைப் போல் ஒவ்வொரு சிறு மற்றும் பெரும்போக பயிற்ச் செய்கைக்கான தொகையாக ரூபா 25000 மானிய தொகையை வழங்குவதற்கான தொகையாகவே மேலதிகமான 1.5 பில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

எதிர்வரும் வருடத்திற்கு மாத்திரம் மானிய தொகை வழங்குவதற்காக 55 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனூடாக விசாயிகளுக்கான மானியங்களாக ரூபா 50,000 அவர்களின் சொந்த கணக்கிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் விவசாயிகளின் கடன் சுமையை குறைத்து, அவர்களுக்கான மானிய திட்டங்களை சிறப்புற வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதோடு விவசாய அமைச்சின் கோரிக்கைகள் கிடைத்தவுடன் நிதியை கையளிப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.