(லியோ நிரோஷ தர்ஷன்)

பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் கூட்டு பயிற்சி உள்ளிட்ட துறைசார் ஒத்துழைப்புகள் தொடர்பில்  ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையிலான முதலாவது பாதுகாப்பு கலந்துரையாடல் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 

ஜப்பான்- இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் அழைப்பின் பேரில், ஜப்பானிய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவொன்று இந்த கலந்துரையாடலில் பங்கேற்றது.

இந்தக் கலந்துரையாடலில் இருதரப்பு மற்றும் பரஸ்பர நலன்கள், முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டது.

இலங்கை தரப்பில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி,முப்படைகளின் தளபதிகள்  உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். 

அத்துடன் ஜப்பான்  உயர்மட்ட பாதுகாப்பு  குழுவினருடன், கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப். அட்சுகிரோ மொரோரேயும் பங்கேற்றார்.