வளர்முக நாடுகளில் பொது இடங்களில் பாதுகாப்பான பாலியல் உறவை ஊக்குவிக்கும் வகையில் கருத்தடை உறைகளை தன்னியக்க ரீதியில் பெற வசதி செய்து தரும் கருத்தடை உறை இயந்திரங்கள் ஸ்தாபிக்கப்படுவது வழமையாகும்.

வீதியோர தன்னியக்க தொலைபேசி கட்டமைப்புகள் போன்று செயற்படும் இந்த கருத்தடை உறை இயந்திரங்களில் பணத்தைச் செலுத்தி கருத்தடை உறைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நிலையில் மேற்படி கருத்தடை உறை இயந்திரத்தை வீட்டில் தயாரிக்கப்பட்ட குண்டொன்றைப் பயன்படுத்தி வெடிக்க வைத்து அதற்குள் இருக்கும் பணத்தைக் களவாட முயன்ற நபரொருவர் (29 வயது) அந்த வெடிப்பில் சிக்கி பரிதாபகரமாக மரணமடைந்த சம்பவம் ஜேர்மனிய நகரான மன்ஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

கருத்தடை உறை இயந்திரத்தின் வெடித்துச் சிதறிய உலோகப் பகுதிகள் முகத்திலும் உடலிலும் தாக்கியமை காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அந்நபருக்கு உதவியாக அங்கு வந்திருந்த 27 வயது மற்றும் 29 வயதுடைய அவரது நண்பர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் பின்னர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெடிப்பையடுத்து அந்த இயந்திரத்திலிருந்து கருத்தடை உறைகளும் பணம் சிதறியதாக தெரிவிக்கப்படுகிறது.