(லியோ நிரோஷ தர்ஷன்)
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று வியாழக்கிழமை (19) இலங்கை வருகிறார்.
இவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் தமிழ்த்தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய செய்தியுடன் கொழும்பு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான திகதி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கலாம் என இராஜதந்திர மட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஏனெனில் ஜனாதிபதி ரணில் பதவியேற்றதன் பின்னர் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் இதுவரையில் அதற்கான வாய்ப்பு கிடைக்க வில்லை.
எனவே இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து இலங்கை கவனத்தில் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை வருவதற்கு முன்னர் மாலைதீவிற்கு விஜயத்தை மேற்கொண்டு அங்கு இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுப்பட உள்ளார்.
மேலும் விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் இரண்டு முக்கிய கடல்சார் அண்டைய நாடுகளான இலங்கை மற்றும் மாலைத்தீவுடன் இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே இந்த விஜயம் அமைய உள்ளது.
குறிப்பாக இலங்கை, இந்தியாவிடமிருந்து கடன் மறுசீரமைப்பை எதிர்பார்த்துள்ள இந்த தருணத்தில் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கொழும்பு வருகிறார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மிகவும் தேவையான 2.9 டொலர் பில்லியன் கடனைப் பெற முயற்சிக்கும் அதே வேளை, இலங்கையின் முக்கிய கடன் வழங்குனர்களான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவிடம் இருந்து நிதி உத்தரவாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கம் முயற்சிக்கிறது.
மறுப்புறம் கடனைக் குறைக்க இந்தியாவும் சீனாவும் இணங்கும் வரை நிதியை வழங்குவது சாத்தியமாகது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கொழும்பு விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து இருதரப்பு பரஸ்பர ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாட உள்ளதாக டெல்லி தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பின் போது இலங்கை - இந்திய கூட்டுறவினை அனைத்து துறைகளிலும் விரிவாக்கம் செய்து வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாட உள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு முன்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இலங்கை; இந்தியாவின் முக்கிய கடல்சார் அண்டைய நாடாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் 'சாகர்' (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) மற்றும் 'அயலகத்திற்கு முதலிடம்' என்ற கொள்கை திட்டத்தில் இலங்கை சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கொழும்பு விஜயம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
மேலும் இலங்கை ஒரு நெருங்கிய நண்பன் மற்றும் அண்டைய நாடு. இந்தியா அனைத்து சந்தரப்பங்களிலும் இலங்கை மக்களுடன் இருக்குமெனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் கொழும்பு விஜயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கம் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM