நைன்ய பரிவர்த்தனை யோகம்

By Nanthini

18 Jan, 2023 | 02:58 PM
image

ம்முடைய ஜாதக கட்டத்தில் ஒவ்வொரு  கிரகமும் ஒவ்வொரு வீட்டுக்கு அதிபதியாக திகழ்கிறார்கள். மேஷம் மற்றும் விருச்சிக வீட்டுக்கு செவ்வாய் அதிபதியாகவும், ரிஷபம் மற்றும் துலாம் வீட்டுக்கு சுக்கிரன் அதிபதியாகவும், மிதுனம் மற்றும் கன்னி வீட்டுக்கு புதன் அதிபதியாகவும், கடகம் வீட்டுக்கு சந்திரன் அதிபதியாகவும், சிம்மம் வீட்டுக்கு சூரியன் அதிபதியாகவும், தனுசு மற்றும் மீனம் வீட்டுக்கு குரு அதிபதியாகவும், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீட்டுக்கு சனி அதிபதியாகவும் இருக்கின்றார்கள். 

நிழல் கிரகமான ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் வீடு இல்லை. இவர்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ... அந்த வீட்டின் பாவத்தையும் காரகத்துவத்தையும் வழங்குகிறார்கள்.

இந்நிலையில் பரிவர்த்தனை யோகம் என்ற ஒரு அமைப்பு எம்மில் பல ஜாதகர்களுக்கு அமைந்திருக்கும். 

பரிவர்த்தனை என்றால் இரண்டு கிரகங்கள் ஒன்றின் வீட்டில் மற்றொன்று இடம் மாறி அமைந்திருக்கிறது என பொருள். உதாரணத்துக்கு மிதுன ராசியில், அந்த ராசி அதிபதியான புதன் தனுசு ராசியிலும், தனுசு ராசிக்குரிய அதிபதியான குரு, மிதுன ராசியிலும் இடம் மாறி அமர்ந்திருந்தால், புதனும் குருவும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள் என பொருள் கொள்ள வேண்டும்.

அதே தருணத்தில் உங்களுடைய ஜாதகத்தில் லக்னாதிபதி ஒன்பதாம் இடத்தில் அமர்ந்திருக்க, ஒன்பதாம் இட அதிபதி லக்னத்தில் அமர்ந்திருந்தால், அந்த ஜாதகருக்கு பரிவர்த்தனை யோகம் ஏற்படுகிறது.

இத்தகைய பரிவர்த்தனை, ஜாதகருக்கு நல்லதொரு யோகத்தை வழங்கும். முதலாமிட, ஐந்தாமிட, ஒன்பதாமிட அதிபதிகளும், நான்காமிட, ஏழாமிட, பத்தாமிட அதிபதிகளும் பரிவர்த்தனை பெற்றிருந்தால், அந்த ஜாதகர் உலகை ஆள்வதுடன் ஏராளமான செல்வத்தையும் பெறுவார்கள்.

அதே தருணத்தில் இரண்டாமிட அதிபதி, பத்தாமிடத்திலும், பத்தாமிட அதிபதி இரண்டாமிடத்திலும் அமைந்திருந்தாலும், லக்னம் ஸ்திர லக்கினமாக அமையப் பெற்றிருந்தால், ஜாதகருக்கு சுகபோக வாழ்வு அமையும்.

இத்தகைய பரிவர்த்தனை யோகத்தை சோதிட நிபுணர்கள், சுப பரிவர்த்தனை யோகம் என்றும், அசுப பரிவர்த்தனை யோகம் என்றும், சம பரிவர்த்தனை யோகம் என்றும் மூன்று வகையினதாக பிரித்து பலன் சொல்கிறார்கள்.

மேலும், இதனை நுட்பமாக விவரிக்க வேண்டும் என்றால், சர ராசி பரிவர்த்தனை, ஸ்திர ராசி பரிவர்த்தனை, உபய ராசி பரிவர்த்தனை என்றும், கிரகங்கள் நின்ற நட்சத்திரங்களின் சார பரிவர்த்தனைகள் என துல்லியமாக அவதானித்து பலன்களை கூறுவர். 

வேறு சில ஜோதிட வல்லுநர்கள் கால புருஷ தத்துவத்தின்படியும் பரிவர்த்தனை யோக பலன்களை எடுத்துரைப்பர்.

உடனடியாக, எம்மில் பலரும் ஜாதகத்தில் 6, 8, 12ஆம் இடம் பற்றி கூறவில்லையே என மனதில் நினைத்துக்கொள்வர். உங்களுடைய ஜாதகத்தில் ஆறாமிட அதிபதி, எட்டாமிட அதிபதி, பனிரெண்டாமிட அதிபதி பரிவர்த்தனை பெற்றிருந்தால், அதனை 'நைனிய பரிவர்த்தனை யோகம்' என்று குறிப்பிடுகிறார்கள். இதனால் அசுப பலன்கள் தான் அதிகளவில் ஏற்படும் என குறிப்பிடுகிறார்கள். 

குறிப்பாக, தொழிலில் லாபம் கிடைப்பதில் தடை ஏற்படும் அல்லது உழைப்பை விட குறைவாக லாபம் கிடைக்கும். 

கூட்டுத் தொழிலில் பிரிவு ஏற்படும். நோய், வழக்கு, கடன் பிரச்சினைகள், எதிரிகளின் தொல்லை, குடும்பத்தில் பிரச்சினை, கண் நோய், சகோதர சகோதரிகளுக்கிடையே கருத்து வேறுபாடு, ஆயுள் குறித்த பயம் நீடித்திருப்பது, பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்காதது அல்லது அவர்கள் புறக்கணிப்பது, வீடு, கல்வி, உயர் கல்வி, தொழில்நுட்ப கல்வி பெறுவதிலும் தடை, பூர்வீக சொத்து மற்றும் அதில் பங்கு கிடைப்பதிலும் தடை, ஏதேனும் சில காரணங்களால் ராஜ யோக பலன் கிடைத்தாலும், உடனடியாக திடீர் நஷ்டம், அவமானம், வாரிசின் ஆரோக்கியம் கெடுதல் என பல்வேறு வகையினதான அசுப பலன்கள் கிடைக்கும் என குறிப்பிடுகிறார்கள். 

மிக சிலருக்கு மட்டுமே குறிப்பிட்ட காலகட்டத்துக்கு விபரீத ராஜ யோகம் கிடைக்கக்கூடும் என்றும் சில ஜோதிட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 

மேலும், இத்தகைய பரிவர்த்தனை கொண்டவர்கள் அதீத கோபம் கொண்டவர்களாகவும், அமங்கலமான சொற்களை அடிக்கடி உபயோகிப்பவர்களாகவும், பாவச் செயலை தயக்கமில்லாமல் செய்பவர்களாகவும், சலனத் தன்மையுடன் செயற்படுபவர்களாகவும், ஈடுபடும் காரியத்தை முழுமையாக நிறைவேற்றாதவர்களாகவும் இருப்பார்கள் என வேறு சில ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதே தருணத்தில் ஆறாமிட அதிபதி, எட்டாமிட அதிபதி, பனிரெண்டாமிட அதிபதி வேறு ஏதேனும் இடத்தில் அமைந்திருந்தாலும், அந்த வீட்டின் அதிபதி 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும், பொதுவாக நல்ல பலனை வழங்குவதில்லை என்றும் சோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். உதாரணத்துக்கு ஒருவரின் ஜாதகத்தில் ஆறாமிட அதிபதி, ஏழாம் இடத்திலோ அல்லது ஐந்தாம் இடத்திலோ அமையப்பெற்று, பரிவர்த்தனை பெற்றிருந்தால் நல்ல பலனை வழங்காது என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஆறாமிடத்து அதிபதி எட்டில் இருந்தாலோ அல்லது எட்டாமிட அதிபதி ஆறில் இருந்தாலோ, இந்த பரிவர்த்தனையின் காரணமாக கணவன் - மனைவி பிரிந்து வாழ வேண்டியதிருக்கும். சிலருக்கு இதன் காரணமாக மணமுறிவு ஏற்பட்டு, விவாகரத்து செய்துகொள்வர் என்றும் ஜோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த நைன்ய பரிவர்த்தனை இருப்பினும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், அவர்களின் லக்னாதிபதி வலிமையாக இருந்தால், இதற்கான வீரியம் குறைந்து குறைவான நட்டம் மட்டுமே ஏற்படும் என வேறு சில ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். 

மேலும், ஆறாமிட, எட்டாமிட, பனிரெண்டாமிட அதிபதிகளின் பரிவர்த்தனையினால் அசுப பலன்கள் உண்டாகும் காலகட்டத்தினை முன்கூட்டியே உணர்ந்து, அதற்குரிய பரிகாரத்தை முறையாகவும் முழுமையாகவும் ஒருமுகமானதுடன் மேற்கொண்டால் பாதிப்பின் தன்மை குறையும்.

கிரகங்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பரிவர்த்தனையை பெற்றிருந்தால், அவை எந்த இடத்தில் பரிவர்த்தனை பெற்றிருக்கிறது என்பதனை பொறுத்து சுப பலன்களையோ அல்லது அசுப பலன்களையோ தருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

- சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right