எம்மில் பலரும் தற்போது ஓய்வில்லாமலும், எப்போது வேண்டுமானாலும் பணியாற்றுவதால் அவர்களின் உணவு பழக்க வழக்கம் என்பது முறையாக இருப்பதில்லை. இதனால் அவர்களுக்கு ஆரோக்கிய கேடு ஏற்பட்டு, அதன் காரணமாக நெஞ்செரிச்சல் வந்துவிடுகிறது.

காரமான மற்றும் சூடான உணவுகள், துரித வகை உணவுகள், அளவுக்கு அதிகமாக ஒரே வேளையில் சாப்பிடுவது, சாப்பிட்டவுடன் போதிய ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உறங்கச் செல்வது என பல காரணங்களால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

இவை ஏற்படுவதற்கு எம்முடைய இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் காரணம். உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப் படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும். 

நெஞ்செரிச்சலை உடனடியாகக் குறைக்க இளநீர், புளிப்பில்லாத மோர், நுங்கு, குளிர்ந்த நீர், அப்பிள் ஆகியவற்றை சாப்பிடலாம். அதே போல அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டியது முக்கியம். ஏனெனில் சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அதன் ஆரம்ப அறிகுறியாக, நெஞ்சில் எரிச்சல் மட்டுமே ஏற்படும். எண்டோஸ்கோபி இசிஜி போன்ற பரிசோதனையைச் செய்துகொண்டு, உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு சிலருக்கு,  நீண்ட நாள் நெஞ்செரிச்சல் இருக்கும். அவர்களுக்கு உணவுக் குழாய் கீழ்முனைச் சுவரில், குடல் சுவரைப் போன்ற மாறுபாடு உண்டாகும். இதற்கு ‘பாரட்ஸ் உணவுக் குழாய்’ என மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். இத்தகைய நிலை ஏற்பட்டவர்களில் நூற்றில் ஒருவருக்குப் புற்றுநோயாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால் இதை அலட்சியம் செய்யாமல் பரிசோதனைச் செய்து கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கு எண்டாஸ்கோப்பி மூலம் சிகிச்சையளித்து குணப்படுத்தலாம். இருந்தாலும் வெகு எளிதில் இத்தகைய பாதிப்பினை கண்டறிந்து சிகிச்சைப் பெற்று கொள்ளவேண்டும்.

டொக்டர் K.கணேசன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்