(நா.தனுஜா)
புதிய திருத்தங்களுடன்கூடிய புனர்வாழ்வுப்பணியகச்சட்டமூலம் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் நிலையில், அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அச்சட்டமூலத்திற்கு எதிரான வலுவானதொரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை, பாதிப்பை இழிவளவாக்கும் சர்வதேச அமைப்பு மற்றும் போதைப்பொருள் கொள்கை தொடர்பான சர்வதேச கூட்டிணைவு ஆகிய 3 அமைப்புக்களும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து மேற்குறிப்பிட்ட 3 அமைப்புக்களும் இணைந்து அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
போதைப்பொருளை ஒழிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் கையாளப்படும் உத்திகளும், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் கடந்த சில வருடங்களாக சர்வதேசக்கட்டமைப்புக்கள் மற்றும் நிபுணர்களின் கண்காணிப்புக்கு உள்ளாகிவருவதுடன், கடந்த வருடம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின்போது இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரும் தமது கரிசனையை வெளிப்படுத்தியிருந்தார்.
குறிப்பாக போதைப்பொருள் ஒழிப்புச்சட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானோருக்குப் புனர்வாழ்வளித்தல் ஆகிய நடவடிக்கைகளில் இராணுவத்தினர் மிகையான அளவில் ஈடுபடுத்தப்படல், போதைப்பொருள்சார் புனர்வாழ்வளித்தல் நிலையங்களில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படல் என்பன தொடர்பில் வெகுவாகக் கரிசனை வெளியிடப்பட்டிருந்தது.
இக்கரிசனைகளைக் கருத்திற்கொண்டு அதற்கு உரியவாறான தீர்வை வழங்குவதற்குப் பதிலாக, புனர்வாழ்வளித்தல் பணியகச்சட்டமூலத்தின் ஊடாக இச்செயன்முறையில் மென்மேலும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் செயற்பாட்டையே அரசாங்கம் மேற்கொள்கின்றது.
அதுமாத்திரமன்றி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் இச்சட்டமூலமானது புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்படுபவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதற்கும், முறையற்ற விதத்தில் நடத்தப்படுவதற்குமான வாய்ப்பை அதிகரித்துள்ளது.
எனவே அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படும் இச்சட்டமூலத்திற்கு எதிரான வலுவானதொரு நிலைப்பாட்டை எடுக்குமாறு உங்களனைவரையும் வலியுறுத்துகின்றோம்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான சர்வதேச கொள்கை நியமங்கள் என்பவற்றுக்குப் புறம்பானதோர் சட்டத்தை நிறைவேற்றுவதானது மேலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கும் போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களின் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதற்குமே வழிவகுக்கும் என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM