மலையக சமூகம் முன்னேற கல்வி எனும் ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டும் - க்ளாஸோ தோட்டத்தின் முதல் பட்டதாரி நா. புண்ணியசெல்வன்

Published By: Nanthini

17 Jan, 2023 | 12:46 PM
image

(மா.உஷாநந்தினி)

லையக சமூகத்தின் எழுச்சியை தீர்மானிப்பவர்கள், அந்த மண்ணில் உருவாகும் பட்டதாரிகளே என்கிற எதிர்பார்ப்பினையுடைய மலையக மக்களின் 'நம்பிக்கை'யாக மிளிர்பவர்களில் நாராயணன் புண்ணியசெல்வனும் ஒருவர்.

நானுஓயா, க்ளாஸோ தோட்டத்தை சேர்ந்த இவர், கடந்த டிசம்பர் 13ஆம் திகதி (2022) கொழும்பு பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைத்துறையில் இளமாணிப் பட்டத்தை பெற்றுள்ளார்.

தன்னுடைய நீண்டகால கனவான இளமாணிப் பட்டத்தை பெற்றுக்கொண்டு க்ளாஸோ தோட்டத்துக்கு திரும்பிய புண்ணியசெல்வனை, க்ளாஸோ தோட்டத்தின் முதல் பட்டதாரி என்ற வகையில் ஊர் மக்கள் கோலாகலமாக வரவேற்றனர். நாடெங்கிலும், சமூக ஊடகங்களிலும் இவரது கல்வியாற்றல் பேசப்பட்டது.

"பட்டம் பெற்று வந்த என்னை ஊர்மக்கள் வரவேற்று கொண்டாடியபோது, படிப்புக்கும் பட்டத்துக்கும் எமது மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் அன்பையும் உணர்ந்தேன்..." என தொடர்ந்தவர், தனது உணர்வுகளையும் எண்ணங்களையும் பகர்கையில்....

ஒரு பட்டதாரியை (உங்களை) ஊரே இப்படி கொண்டாடும் என எதிர்பார்த்தீர்களா?

மலையக சமூகத்தில் பொருளாதார மூலதனம் குறைந்து காணப்பட்டாலும், சமூக மூலதனம் நிறைவாக உள்ளது.

எமது ஊர்மக்கள் அனைத்து விடயங்களிலும் பரஸ்பர ஒற்றுமையை பேணுபவர்கள். எந்த விடயமானாலும், ஊர்ச் சகோதரர்களும் அம்மாக்களும் அப்பாக்களும் எம்மை மனம் திறந்து பாராட்டுவர், வழிநடத்துவர்.

அதேபோல் ஊரில் சேவையளிக்கும் வகையில் இந்து இளைஞர் மன்றம், நற்பணி மன்றம், பொதுநல கழக மன்றங்களும் உள்ளன.
நற்பணி மன்றம், வருடாவருடம் சுதந்திர தினத்தன்று கல்வியில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அவர்களை ஊர்மக்கள் பாராட்டுவது இயல்பான ஒன்றே என்றாலும், என்னை பாராட்டும் வகையில் அமைந்த இந்நிகழ்வு இவ்வளவு பிரபலமடையும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

க்ளாஸோ தோட்டத்தின் முதல் பட்டதாரியாக பட்டம் பெற்று வந்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

பட்டம் பெற்று வந்த என்னை ஊர்மக்கள் வரவேற்று கொண்டாடியபோது, படிப்புக்கும் பட்டத்துக்கும் எமது மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் அன்பையும் உணர்ந்தேன்.  

க்ளாஸோ பிரதேசத்தில் இனியும் பட்டதாரிகள் உருவானால் கூட, அவர்களுக்கும் 'முதல்' பட்டதாரியான எனக்கு கொடுக்கப்பட்டதை போன்றதொரு வரவேற்பு கிடைப்பது சந்தேகமே என எண்ணுமளவுக்கு என்னை கொண்டாடினர்.

உபவேந்தரிடம் பட்டத்தை பெற்றபோது ஏற்பட்ட சந்தோஷத்தை விட ஊர்மக்கள் முன்னிலையில் நான் அடைந்த மகிழ்ச்சி எல்லையற்றது.
தன்னலமற்ற வகையில், 'தான் பெற்ற பிள்ளை' பட்டம் பெற்றதைப் போல அவர்கள் எனது வெற்றியை கருதி, அதை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்த நிகழ்வு, என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகிறது.  

உங்கள் வெற்றிக்குப் பின்னால் உள்ள பெற்றோரின் ஒத்துழைப்பு பற்றி சில வார்த்தைகள்...

எனது அப்பா மாணிக்கம் நாராயணன். அம்மா இராமசாமி புவனலோஜினி. ஆரம்பக்கல்வி முதல் பல்கலைக்கழக கல்வியை நிறைவு செய்த தற்போது வரை எனக்கான அனைத்தையும் எனது பெற்றோர் பார்த்துப் பார்த்து நிறைவேற்றி வருகின்றனர்.

வறுமையிலும் தங்களுக்கென எதையும் தேடிக்கொள்ளாமல், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது, பாடசாலை உபகரணங்களை வாங்கிக் கொடுப்பது என ஒவ்வொன்றையும் எனக்காகவும் தங்கைக்காகவுமே செய்தளித்துள்ளனர். அதற்கான தந்தையின் அர்ப்பணிப்பும் தாயின் உழைப்பும், அவர்கள் எதிர்நோக்கிய துன்பங்களும் மிக அதிகம்.

அவர்கள் பாமரர்களாக இருப்பதால், கல்வியின் அருமை அறிந்திருந்தனர். என்னை ஒரு கல்விமானாய் உருவாக்குவதற்காக பேரார்வத்தோடு முயற்சித்து, இன்று வெற்றி கண்டுள்ளனர். அந்த வகையில் நான் பட்டம் பெற காரணமான அம்மாவும் அப்பாவுமே நிஜமான சாதனையாளர்கள்.

உங்களது அடுத்த இலக்கு?

முதுமாணிப் பட்டத்தை பெற வேண்டும். எனது கலாநிதி பட்டத்தினை வெளிநாடொன்றில் பூர்த்தி செய்து, அரசியல் விஞ்ஞானத்துறையில் ஒரு பேராசிரியராக வர வேண்டும். இந்த இலக்கை அடைய அனைத்து வழிகளிலும் நான் முயற்சி செய்வேன்.

க்ளாஸோ தோட்ட பட்டதாரியான உங்களை நாடறிய, உலகறியச் செய்த ஊர் மக்களுக்கு நீங்கள் செய்யும் கைம்மாறு...?

தற்போதைய கடினமான சூழ்நிலையில் பெண்தலைமைத்துவ குடும்பம் மற்றும் வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், கற்றல் உபகரணங்களை வழங்கும் செயற்றிட்டமொன்றை கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களான நாங்கள் முன்னெடுத்து வருகிறோம்.

அதை தவிர, நான் தொழிலுக்குச் சென்று என்னால் முடிந்த உதவிகளை எமது பிரதேச மக்களுக்கு குறிப்பாக, மாணவர்களுக்கு செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.

என்னை போல கல்வியில் ஆர்வமுள்ள வறிய மாணவர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கி ஆற்றுப்படுத்தி, அவர்களையும் பட்டதாரிகளாக உருவாக்க முயற்சிப்பேன். ஏனென்றால் கல்வியே முழு உலகுக்குமான வாசலை திறக்கிறது.

இன்றைக்கு மதம், இனத்துவத்தை கடந்து பலர் என்னை பாராட்டி, வாழ்த்துகிறார்கள்... தமிழ் ஊடகங்கள் மட்டுமன்றி, சகோதர மொழி ஊடகங்களும் கூட என்னை பற்றி பேசுகின்றன... இப்போது இந்த பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறேன்... அனைத்துக்கும் காரணம், ஊர்மக்கள் எனக்களித்த வரவேற்பே.

ஆகவே, அவர்களுக்கு நான் பதில் உபகாரமாக பல வழிகளில் உதவி செய்வதொன்றையே  விரும்புகிறேன்.  

பட்டம் பெற்றதை பெருமையான விடயமாக நீங்கள் கருதினாலும், இந்த கல்விப் பயணத்தில்  எதையேனும் இழந்துவிட்டதாக உணர்கிறீர்களா?

மாணவர் விடுதியில் சென்று படிக்கிறபோது தாய், தந்தையின் அரவணைப்பை இழந்திருக்கிறேன். எனினும், என்னை சூழ இருந்த நண்பர்களின் அன்பினால் அந்த ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.

அதுமட்டுமன்றி, எனது பட்டதாரி கனவினை அடையும் நோக்கத்துக்காக ஊரில் நிகழும் எத்தனையோ திருவிழாக்கள், கலாசார கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வழியின்றி வேதனைப்பட்டிருக்கிறேன்.

கற்றலுக்காக உங்களை நீங்கள் எவ்வாறு தயார்ப்படுத்திக்கொள்கிறீர்கள்?

நிறைய வாசிக்கிறேன். பாடப் புத்தகங்களை மட்டுமன்றி, கல்வியோடு தொடர்புபட்ட ஆக்கங்களையும் பத்திரிகைகளையும் வாசிக்கலாம். அவற்றை குறிப்பெடுத்தும் படிக்கிறேன்.

அறிவுபூர்வமான விடயங்களை இணையத்தில் தேடி அறிந்துகொள்கிறேன்.
எழுதியும் மனனம் செய்தும் படிக்கிறேன். சத்தமாக படிப்பதுமுண்டு. கற்றதை யாருக்கேனும் கற்பித்து மனதில் பதித்துக்கொள்ளலாம்.
கடந்த கால பரீட்சை வினாப் பத்திரங்களுக்கு விடையளித்து என்னை நானே பரீட்சித்துக்கொண்டேன்.

மிக முக்கியமான விடயம், உளம், உடல் இரண்டையும் பாதுகாக்கும் உணவினை வேளை தவறாமல் உட்கொள்வதே ஆகும். குறிப்பாக, காலையுணவு அந்த நாளையே சிறப்பாக்கும்.

நிறைய வாசிப்பதாக கூறினீர்கள்... உங்களுக்கு பிடித்த புத்தகம்?

அரசியல் சார்ந்த பல புத்தகங்களை வாசித்திருக்கிறேன். நான் வாசித்ததிலேயே மிகவும் பிடித்த புத்தகம் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரான பேராசிரியர் அப்துல் கலாமின் 'அக்னி சிறகுகள்'. 

அந்த புத்தகத்தை அப்துல் கலாம், அவரது நண்பர் அருண் திவாரி ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும் கூட, தமிழில் மு.சிவலிங்கம் எழுதிய பதிப்பினை நான் வாசித்திருக்கிறேன். அது எனக்குள் ஒருவித உத்வேகத்தை அளித்தது எனலாம்.
அடுத்து, பேராசிரியர் கார்ல் மாக்ஸ் எழுதிய மூலதனம் (The Capital).

கற்பதற்கான சூழலை உங்கள் பிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் பெறக்கூடிய நிலை காணப்படுகிறதா?

உண்மையிலேயே, இங்கு பொருளாதார பாதுகாப்பின்மை மிக பெரும் பிரச்சினையாக உள்ளது. கற்றல் உபகரணங்களை வாங்குவதற்கும் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதற்கும் எமது மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

க்ளாஸோ பிரதேசத்திலிருந்து நானுஓயா பாடசாலைக்குச் செல்லும் தேயிலை தோட்டங்கள் ஊடான பாதை வெயில் காலமானாலும் மழைக்காலமானாலும் சீரற்ற வகையிலேயே காணப்படுவதால், அப்பாதை வழியே பாடசாலைக்கு செல்வதில் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

அவ்வாறெனில், நீங்கள் ஆரம்பக்கல்வி தொடக்கம் பட்டம் பெற்றது வரை முழுமையான கல்வியை பெற்றது அத்தனை எளிதாக இருந்திருக்காதே..!

ஆம். கல்விக் குடும்ப பின்னணி இல்லாத சூழலில் ஒரு மாணவன் பட்டம் பெறத் துணிவது மிக கடுமையான முயற்சி.

நான் ஆரம்ப கல்வியை க்ளாஸோ தமிழ் வித்தியாலயத்தில் கற்றபோது, அங்கு ஒழுங்கான கட்டடம் கூட இல்லை. அதிக மழை, அதிக வெயில் என்றாலும், அவற்றுக்கு தாக்குப்பிடிக்காத கட்டடமாகவே காணப்பட்டது.

அதன் பிறகு 2011இலேயே அந்த கட்டடம் திருத்தியமைக்கப்பட்டது.

அதுவரை எமது பாடசாலையில் தளபாடங்கள் கூட தேவைக்கேற்ப இருக்கவில்லை. கற்பிப்பதற்கு மூன்று ஆசிரியர்கள் மாத்திரமே இருந்தனர். பள்ளிச்சூழலில் அதுதான் நிலைமை என்றால், தரம் 12 வரையில் மின்சாரம் இல்லாத வீட்டுச்சூழலில் படிக்கவேண்டிய சந்தர்ப்பமும் ஏற்பட்டது.

அப்போது எனக்கு ஆரோக்கியமான கல்வியை பெற்றுத்தர அம்மாவும் அப்பாவும் மிகவும் கஷ்டப்பட்டனர். அந்த போராட்ட சூழலை பெற்றோரின் பங்களிப்பினால் மட்டுமே என்னால் முறியடிக்க முடிந்தது.

ஆரம்பகல்வியில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெறுமனே 75 புள்ளிகளை மாத்திரம் பெற்றுக்கொண்டேன்.

நு/நாவலர் கல்லூரியில் படித்துகொண்டிருந்தபோது சாதாரண தர கற்றல் செயற்பாடுகளில் கடுமையாக ஈடுபட்டேன். எனது கல்விக்காக ஆசிரியர்கள், அதிபர் பல உபாயங்களை மேற்கொண்டிருந்தனர்.
உயர்தரத்தில் தனியார் கல்விக்கூடத்தின் உதவியோடு இலவச கல்வி, அதனூடாக சிறந்த பெறுபேறு பெற்றேன்.

பல்கலைக்கழகத்தில் ஆங்கில ஆசிரியர்களை தேடிச் சென்று, குறிப்புகளை பெற்று தீவிரமாக படித்தே பட்டம் பெற்றேன். எனது செலவுகளுக்காக அம்மா தனது மாதாந்த சம்பளத்திலிருந்து மாதாமாதம் பணம் அனுப்புவார். அதை தவிர, மகாபொல புலமைப்பரிசிலும் கிடைத்தது.

தோட்டத்து கல்வித்தரம் எந்த மட்டத்தில் உள்ளது?

கடந்த ஐந்து வருடங்களாக வளர்ச்சியை நோக்கியே செல்கிறது.
நான் முதல் பட்டதாரி என்பதோடு, என்னை தொடர்ந்து தற்போது கிட்டத்தட்ட 10 பட்டதாரிகள் பல்கலைக்கழகங்களில் கற்று வருகின்றனர். சிலர் 2023ஆம் ஆண்டில் பட்டம் பெறவுள்ளனர்.  
அதேவேளை எமது மாணவர்கள் புலமைப்பரிசில், சாதாரண தர, உயர்தர பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று வருகின்றனர்.

மலையகத்துப் பிள்ளைகளில் ஒருதரப்பினர் இன்றும் கல்வியை தொடராமல் இடைநிறுத்திக்கொள்கிறார்களே, ஏன்?  

நான் ஆய்ந்தறிந்த வகையில், மூன்று காரணங்கள் உள்ளன.

முதலாவது, நுண்நிதிக் கடன்.
மலையகத்தில் அதிக பெண்கள் நுண்நிதிக் கடன்களை பெற்று, அதை மீள செலுத்த இயலாமல், பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து தொழிலுக்காக வெளிநாடோ அல்லது வேறொரு இடத்தினை நோக்கியோ செல்கின்றனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களது பிள்ளைகள் கல்வியை தொடர முடியாமல் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதை பார்க்க முடிகிறது.

அதுமட்டுமன்றி, மலையகத்தில் தற்கொலைகள் அதிகரிக்க இந்த நுண்நிதிக்கடன்களும் ஒரு காரணம்.

அடுத்து, சமனற்ற வளப்பரம்பல்.
மலையகத்தில் நிறைய பாடசாலைகள் காணப்பட்டாலும், ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு விதமாகவே வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

மூன்றாவது, பொருளாதார தேவை.
வீட்டில் எல்லோரும் வாழ்வதற்கு வேண்டிய பொருளாதாரத் தேவையை நிவர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்துவதால், தமது பிள்ளைகளை கவனிக்க தவறிவிடுகின்றனர்.

இந்த மூன்று காரணங்களாலும் மலையகத்தில் பிள்ளைகளின் கல்வி நிலை பாதிப்படுகிறது.  இருப்பினும், எமது மக்கள் வறுமை காரணமாக இப்படியான விளைவுகளை எதிர்கொள்கின்றனரே தவிர, திட்டமிட்டு எதுவும் இடம்பெறுவதில்லை.

உயர்தரமாகட்டும், மேற்கல்வியாகட்டும்... பாடங்களை தெரிவுசெய்வதில் இன்றைக்கு பிள்ளைகளுக்கு குறிப்பாக மலையகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உள்ள தடைகள்?

மலையகத்தை பொறுத்தவரையில் உயர்தரத்தில் கலைப்பிரிவு, வணிகப் பிரிவு, உயிரியல் விஞ்ஞான பிரிவு, பௌதீக விஞ்ஞான பிரிவு, பொறியியல் தொழில்நுட்ப பிரிவு, உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவு, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரிவு, தொழில் துறை பிரிவு என சில பாடப்பிரிவுகள் பிரதானமாக உள்ளன.

ஒரு துறையை வெற்றகரமாக தொடர முடியும் என்ற நம்பிக்கையும் ஆர்வமும் இருப்பின், அத்துறையை தெரிவுசெய்யலாம். இதையே 'உடன்பிறந்த எண்ணக்கரு' என்ற கோட்பாடு உணர்த்துகிறது.
எனினும், விரும்பிய பாடத்தை தெரிவுசெய்து, அப்பாடத்துக்குரிய ஆசிரியர்களை தேடிச் சென்று பயிலுமளவுக்கு, மேலதிக வகுப்புகளுக்கு செல்லுமளவுக்கு பொருளாதார வசதி பலருக்கு இங்கில்லை.

அது மட்டுமன்றி, சில ஆசிரியர்கள் தாம் சார்ந்த துறையை உயர்வாகவும், மற்ற துறைகளை தாழ்த்தியும் பேசுகின்ற போக்கும் காணப்படுகிறது.
எனினும், மாணவர்களுக்கு பொருத்தமான துறை, சிறந்த பெறுபேறுகளை பெற்றுத்தரும் பாடங்கள் அடங்கிய துறை எது என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் மாணவர்களே. அவர்களின் தெரிவு சுய விருப்பத்தின் அடிப்படையில் இருந்தால் தான் தங்குதடையின்றி உயர்தரக்கல்வியையோ மேற்படிப்பையோ தொடரக்கூடியதாக இருக்கும்.

மாணவர்கள் கல்விநிலையில் விருத்தியடைவதற்கான முதல் வழிமுறை என்ன?

முதலில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

தவறிழைக்கும் பிள்ளைகளை ஆசிரியர்கள் நெறிப்படுத்த எத்தனிக்கும்போது பெற்றோர்கள் பிள்ளைகளின் பக்கமாக நின்று நோக்காமல், ஆசிரியர்களின் சார்பாக நின்று ஒத்துழைக்க வேண்டும்.

ஏனென்றால், இன்று அதிகமான பெற்றோர்கள் தம் பிள்ளைகள் தவறு செய்தால், ஆசிரியர்களை குறை கூறுவதும், தவறிழைக்கும் மாணவர்களை தண்டிக்கும் ஆசிரியர்களுடன் முரண்படுவதும் மோதலில் ஈடுபடுவதுமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்கு மாறுகிறபோதே கல்விச் சமூகத்தின் விருத்தி துளிர்விட ஆரம்பிக்கும்.

அத்தோடு இன்றைக்கு அதிகளவான மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதற்கு, பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாக சிந்திப்பதும் ஒருவகையில் காரணமாகிறது.

இன்றைக்கு இணையம், தொழில்நுட்பத்தின் வழியே கல்வித்துறை இணைந்திருப்பது நன்மையென கருதுகிறீர்கள்?

இணையத்தோடு கல்வி இணைந்திருப்பதில் இரு வேறு விளைவுகள் உள்ளன. ஒன்று, இணையம் பற்றிய தெளிவு உள்ள மாணவர்களுக்கு இணையம் நன்மையாகவும், இணையத்தை சரியாகவும் தெளிவாகவும் புரிந்துகொள்ளாத மாணவர்களுக்கு அது தீமையாகவும் இருக்கிறது.

என்னை பொறுத்தவரையில், மாணவர்களுக்கு இணையம் தொடர்பாக சரியான வழிகாட்டலை வழங்கும்போது, அதை பயன்படுத்தும் மாணவர்கள் நிச்சயம் நன்மையையே அடைவர்.

அதிகமான விடயங்களை தேடி, சுயமாக கற்றுக்கொள்ளவும், ஒரு விடயம் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டு பிரச்சினையை கண்டறியவும் இணையம் பயன்படுகிறது எனும் வகையில் இணையம் கல்வியோடு இணைந்திருப்பது நன்மையான விடயமே.

கல்வியும் நவீனமயப்பட்டுள்ள நிலையில் இந்த மாற்றம் மலையக பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளுக்கு சாதகமாக அமைகிறதா? அல்லது...

இந்த நவீனமயமாக்கம் எமக்கு உதவியாகத்தான் உள்ளது. ஏனெனில், பொருளாதார பாதுகாப்பு குறைந்துள்ள எமது சமூகத்தில் மேலதிக வகுப்புக்கு செல்ல முடியாத ஒரு மாணவன், நவீனமயமாக்கல் காரணமாக சுயகற்றலில் ஈடுபடுகிறான்.

தற்போது கல்வி சார்ந்த குறிப்பிட்ட விடயங்களை இணையம் மற்றும் அவை சார்ந்த ஊடகங்களினூடாக கற்றுக்கொள்ள முடியும். அதற்காக பல இலவச zoom வகுப்புகள் நடைபெறுகின்றன.  

அவற்றில் இணைவதனூடாக எமது சமூகத்தில் இருந்துகொண்டு வெளிச்சமூகத்தை நோக்கும்போது, அந்த சமூகம் எவ்வாறு அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக அபிவிருத்தியடைந்த சமூகமாக விளங்குகிறது என்பதை எம் சமூகத்து மாணவர்கள் அறிந்து, தமக்குள் ஒரு சுய ஊக்கத்தை உருவாக்கிக்கொண்டு, அவர்கள் கற்கிறார்கள்.

குறிப்பிட்ட பாடம் தொடர்பான வல்லுநர்கள் நாட்டின் பல பிரதேசங்களிலும் இருக்கின்றனர். அவர்களின் கற்றல் ஆலோசனைகளை நேரடியாக இணையத்தினூடாக பெற முடிவதால், இந்த நவீனமயமாக்கம் மலையக மாணவர்களுக்கு பயனுடையது.

உங்கள் பார்வையில், நாட்டில் பட்டதாரிகளுக்கான வகிபாகம் என்ன?

கல்வி என்பது அறிவு, ஒழுக்கம் இரண்டும் சார்ந்த ஒன்றாகும். ஆகவே, பட்டதாரிகளுக்கு சமூகப் பொறுப்பு - சமூகத்தை ஆற்றுப்படுத்தலுக்கு உட்படுத்தும் பொறுப்பு இருக்கிறது.

தமது சமூகத்தையும் தம்மை சார்ந்தவர்களையும் சிறந்த கல்வியின் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில், அரசு எடுக்கின்ற சில கொள்கை தீர்மானங்களுக்கான பரிந்துரைகளை ஒரு பட்டதாரி தான் சார்ந்துள்ள துறையிலேயே கண்டறிந்து, அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும். அதனூடாகவும் நாடு அபிவிருத்தியை நோக்கிச் செல்லக்கூடும்.

ஒரு பட்டதாரி தமக்கான தொழிற்சந்தையினை பெற்றுக்கொள்வதோடு, நாட்டின் தேசிய நலன்களில் பங்கெடுக்க வேண்டும். நாட்டின் மீது பற்று கொண்டு, தமது சேவைகளை மக்களுக்கு வழங்க வேண்டும்.

அரசியல் துறை பட்டதாரி நீங்கள்... உங்களது கனவு அரசியல் எது?

நான் பட்டம் பெற்றபோது ஒரு சகோதர மொழி ஆசிரியர் எனக்காக ஒரு பாடலையே எழுதியிருந்தார். இத்தகைய இனம், மதம் கடந்த ஐக்கியவாத ஜனநாயக முறையே (Consociational Democracy) எனது கனவு அரசியல்.

பல்லின சமூக அமைப்பில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ஆட்சி செயன்முறையில் பங்கெடுப்பதன் மூலமே மக்களிடத்தில் சமூக மூலதனம், பரஸ்பர அன்னியோன்யம் பாதுகாக்கப்படும்.

வெற்றி கண்ட பட்டதாரியாக நீங்கள் கூற விரும்புவது?

உலகினை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி மட்டுமே. நெல்சன் மண்டேலாவின் கருத்துக்கிணங்க, நாம் எந்த வயதினை உடையவராக இருந்தாலும், நாம் எப்போதும் மாணவர்களே.

கல்வி கற்க வயதெல்லை இல்லை. வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கலாம். அதற்கு கற்கும் ஆர்வமும் அவாவும் தான் தேவை.
தனது வகுப்பு மாணவர் நன்றாக கல்வி கற்றுள்ளார் என்பதில் ஆசிரியர் பெருமைப்பட வேண்டும். மாணவர்களுக்கு சிறந்த பெறுபேறு கிடைத்தால், அந்த பாடசாலை பெருமைப்பட வேண்டும். வகுப்பில் மிகச் சிறந்த மாணவர் என்பதில் பெற்றோர்கள் பெருமைப்பட வேண்டும்.

எனவே, அத்தகைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலைக்கு நாம் செய்யும் மிகச் சிறந்த உபகாரம், நாம் கல்வியில் சிறந்து விளங்குவதேயாகும். அவ்விதம் தரமான கல்வியை பெறுவதாலேயே தொழில்வாய்ப்பு, உயர்கல்வியை இலகுவில் பெற முடியும்.

அதுமட்டுமன்றி, ஒரு சமூக மாற்றத்துக்கு கல்வி மிக முக்கியமானது. அதுவே வாழ்க்கைப்பயணத்தின் முதல் படியென இந்த மலையக சமூகம் கருதினால், இங்கு நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
மலையக சமூகம் இப்போதைய நிலையை விட இன்னும் முன்னேற வேண்டுமாயின், கல்வியெனும் ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04