மலையகம் –200 ஐ ஏன் தேசிய நிகழ்வாக கொண்டாட முடியாது?

Published By: Digital Desk 5

16 Jan, 2023 | 11:19 AM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

மலையகம்–200  என்ற  சுலோகத்தின் கீழ்  பல நிகழ்வுகளை, அரசியல் பிரதிநிதிகளும் சிவில் சமூகத்தினரும் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் ஒரு நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் மலையக   தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மலையக பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகளும் தத்தமது பிரதேசங்களில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். பிரதான மலையக கட்சிகள் மற்றும் கூட்டணிகளும் மக்கள் கருத்துக்களை கேட்டறிந்து ,ஆலோசனைகளைப் பெற்று தமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளன. இந்நிலையில், தென்னிந்திய கிராமங்களிலிருந்து பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக அழைத்து  வரப்பட்ட  இந்த சமூகத்தினர்,  நாட்டில் காலடி எடுத்து வைத்து இருநூறு வருடங்கள் பூர்த்தி நிகழ்வை ஒரு தேசிய  நிகழ்வாக நடத்துவதற்கு ஏன் எந்த தரப்பும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

1823 ஆம் ஆண்டிலிருந்து கோப்பி, பின்னர் 1867 ஆம் ஆண்டிலிருந்து 155 வருடங்களை கடந்து இப்போது வரை தேயிலைப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு கடந்து இருநூறு வருடங்களாக தொடர்ச்சியாக நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களிப்பு செய்து வரும் இச்சமூகத்துக்கு அடிப்படை பிரச்சினைகள் பல இருந்தாலும் கூட, அவர்களை நினைவு கூர்ந்து கெளரவிப்பதற்கு இது ஒரு தேசிய  நிகழ்வாகவே இருத்தல் அவசியம்.

ஆனால் தற்போதைய அரசாங்கத்தில் எந்த மலையக பிரதிநிதிகளும் அமைச்சரவை பதவிகளில் இல்லை. ஒரு இராஜாங்க அமைச்சு மட்டுமே மலையக சமூகத்தையே பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளது. ஆனால் அதுவல்ல இங்கு பிரச்சினை. சமூகம் சார்பாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் ஜனாதிபதியை சந்திக்கலாம். இது குறித்து பேசலாம். ஆனால் அப்படி எதுவும் இடம்பெறவில்லை.

மலையக பெருந்தோட்ட சமூகத்துக்கு இந்த நாடு நன்றி கடன் பட்டுள்ளது. இதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஆனால் இந்த சமூகத்தை தோட்டம் (Estate)  என்ற பிரிவுக்குள் வைத்து ஆட்சி செய்து வரும் அரசாங்கங்கள், இந்த மக்களின் நலனில் தோட்ட நிர்வாகங்களும்,  தொழிற்சங்கங்களும் மாத்திரமே அக்கறை கொண்டுள்ள பிரிவினர் என முத்திரை குத்தியுள்ளன.

இதன் காரணமாகவே அரசாங்கத்தின் சலுகைகள், உரிமைகள் பலவற்றை நேரடியாக பெற்றுக்கொள்ள முடியாத அதே வேளை, தமது பெருந்தோட்டப்பகுதி குடியிருப்புகளுக்கு விலாசங்கள் கூட இல்லாத ஒரு சமூகத்தினராகவும் நிலவுரிமையற்றவர்களாகவும் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையை விட தேயிலை பெருந்தோட்டங்களை அதிக பரப்பளவில் கொண்டுள்ள சீனா, கென்யா, இந்தியா போன்ற நாடுகளில் கூட இப்படியான  தோட்டப்பிரிவுகள் இல்லை. அவை கிராமங்களாகவே  கணிக்கப்படுகின்றன.    இலங்கையில் மாத்திரமே கல்வி,சுகாதாரம்,பொருளாதாரம் போன்ற குறிகாட்டிகள், இவ்வாறு தோட்டப்புறங்களை அடிப்படையாகக்கொண்டு கணிக்கப்படுகின்றன. 

தேசிய அந்தஸ்த்தை எவ்வாறு கோருவது? 

இலங்கையின் தேசிய இனங்கள் என்ற வரிசையில் மலையகம் சமூகத்தினர் இல்லை.  காலங்காலமாக  இவர்களை  தோட்ட மக்கள் என்ற பிரிவில் வைத்து நோக்கும் போது எவ்வாறு இவர்கள் தேசிய அந்தஸ்த்தைப் பெறுவது? கிராமப்புற மக்கள் இன்று அனுபவிக்கும் நிலவுரிமை, அரச நிர்வாக கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டிருத்தல், அரச மானிய உதவிகள், வங்கிக்கடன்கள், சுயதொழில் வேலை வாய்ப்புகள், அரச தொழில்கள் போன்ற அனைத்திலிருந்தும் இந்த பெருந்தோட்ட சமூகம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இருநூறாவது ஆண்டு பூர்த்தி என்பது ஒரு கொண்டாட்டமல்ல….இந்த மக்களின் தியாகத்தையும் போராட்டங்களையும் நினைவு கூருவதாக இருக்க வேண்டும் என சில தொழிற்சங்கங்கள் ,அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் அடுத்த நூறாண்டுகளுக்கு இந்த சமூகம் இப்படியே இருக்க வேண்டுமா? இருநூறு வருடங்களாக இந்த சமூகத்தினர் நாட்டுக்கு செய்த பங்களிப்பு அரசாங்கம் என்ன கைம்மாறு செய்யப்போகின்றது என்பதை இந்த பிரதிநிதிகள் கேட்பார்களா?

தோட்ட மக்கள்  என்ற பிரிவிலிருந்து இவர்களை கிராம மக்களாக அங்கீகரிக்கும் அதே வேளை பெருந்தோட்டப்பகுதிகளையும் தேயிலை விவசாயப்பகுதி என்று அழைக்கும் வண்ணம், மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுமா? இதை முன்னெடுக்கப்போவது யார்?

தொழில் அமைச்சு என்ன செய்கின்றது? 

பெருந்தோட்டத்துறைக்கு ஒரு அமைச்சு இருந்தாலும் எப்போதும் அது பெரும்பான்மையின பிரதிநிதியின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வரும் இத்தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்வியல் எப்படியாக உள்ளது என்பதை நேரடியாக கண்டறிய இது வரை எந்த தொழில் அமைச்சரும் உத்தியோகபூர்வமாகவோ அல்லது தனிப்பட்ட முறையாகவோ பெருந்தோட்டப்பகுதிகளுக்கு விஜயம் செய்ததில்லை.

கடந்த காலங்களில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள பதவிகளை அலங்கரித்த மலையக பிரதிநிதிகளும் அதை செய்யவில்லை. நுவரெலியா மாவட்டத்திற்கு அந்த பதவி கிடைத்த காலகட்டத்தில் கூட இம்மாவட்ட மக்களின் பிரச்சினைகளைப் பற்றி ஆராய குறித்த அமைச்சர் எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. 

இப்போது மலையகம் –200 தொடர்பில் பலரும் பிரஸ்தாபித்து வருவதால் , தொழில் அமைச்சின் மூலம் இந்த நிகழ்வை எவ்வாறு கொண்டாடுவது அல்லது நினைவு கூர்வது போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடல்கள் அமைச்சு மட்டத்தில் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் புதிய தொழில் அமைச்சருக்கு மலையக பெருந்தோட்ட சமூகம் பற்றிய ஆழ்ந்த வரலாற்று அறிவும் அக்கறையும் இருக்கும் என எதிர்ப்பார்க்க முடியாது. மலையக தொழிற்சங்க மற்றும் அரசியல் பிரதிநிதிகள், தொழில் அமைச்சர்களை சந்திக்கும் போதெல்லாம் தொழிலாளர் சம்பள விவகாரத்தையும்,  கம்பனிகளின் அணுகுமுறைகளையும், நிர்வாகத்தினரின் அடக்குமுறைகளைப் பற்றி மட்டுமே கதைப்பர் என்பது அனைவரும் அறிந்த விடயம். அவர்களுக்கும் அதை விட்டால் இங்கு அரசியல் செய்ய முடியாது என்பது வேறு கதை.

இதன் காரணமாகவே தொழிலாளர்களின் பிரச்சினைகள் வேதன விவகாரத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே இந்த மக்களின் உண்மையான வாழ்வியலையும் அவர்கள் கடந்த 200 வருடங்களாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளையும் பற்றி தொழில் அமைச்சருக்கு எடுத்துக் கூறுவதற்கு தொழிற்சங்க தரப்பில் எவரும் இல்லாத நிலைமைகளே உள்ளன. தொழில் அமைச்சரிடம் அரசியல் கதைப்பதில் அர்த்தமில்லை என்பது இவர்களுக்குப் புரிவதில்லை.

மலையகம் என்றால் தேயிலை பெருந்தோட்டங்களே அனைவரினதும் கண்களுக்கு முன்னே வருகின்றன. மலையகம்–200 நிகழ்வுகளை இந்த அரசியல்வாதிகள் ஒரு தோட்ட நிகழ்வாக (Estate Ceremony)  நடத்துவதற்குத் தான் விரும்புகின்றார்களே ஒழிய இதை ஒரு  தேசிய நிகழ்வாக (State Ceremony)  ஏன் நடத்த முடியாது என்ற கேள்வி இன்னும் அவர்களின் மனதில் உருவாகவில்லை.

அப்படியே உருவாகினாலும் அது குறித்து ஜனாதிபதியுடன் பேசுவதற்கு அவர்களுக்கு இங்கு எவருக்குமே தைரியமில்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இந்த மக்களின் நிலைமைகளுக்கு கடந்த அரசாங்கங்கள் மாத்திரமல்ல…..அதிகாரங்கள் இருந்த காலகட்டங்களில் இந்த மக்களுக்கு ஒன்றுமே செய்யாத பிரதிநிதிகளும் காரணகர்த்தாக்களாக இருக்கின்றனரே! 

ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தலாமா? 

1948 ஆம் ஆண்டு எந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இந்த மக்களின் பிரஜா உரிமையைப் பறித்தாரோ அதே கட்சியின் தற்போதைய தலைவர் தான் ஜனாதிபதியாக இருக்கின்றார்.

ஆகவே இந்த சமூகத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி இழைத்த மாபெரும் துரோகத்துக்கு தற்போதைய அக்கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் உள்ள ரணில் விக்ரமசிங்க, இக்காலகட்டத்தில்  பாரிய பொறுப்பு கூற வேண்டியவராக இருக்கின்றார்.

இதை அவருக்கு எடுத்துக் கூறப்போவது யார்? இருநூறு வருட பூர்த்தியில் இந்த மக்களின் பங்களிப்பு பற்றி ஆராய கூறியிருக்கும் ஜனாதிபதி, அதற்கான பதில்கள் கிடைத்ததும் இந்த மக்களுக்கு என்ன பங்களிப்பை செய்யப்போகின்றார்? 

மலையக சமூகத்தை தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும், அவர்களை இந்நாட்டின் தேசிய மக்களாக அறிவிக்க வேண்டும், நாட்டின் ஏனைய இன மக்களுக்குக் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இவர்களுக்கும் கிடைக்கச்செய்ய வேண்டும், இவர்களை ‘தோட்டம்’ என்ற பிரிவுக்குள் அடக்காமல் கிராம மக்களாக அங்கீகரிப்பதற்குரிய வழிவகைகளை ஆராய வேண்டும் போன்ற தேசிய ரீதியான  கோரிக்கைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்கு முன்பதாக , மலையகம்–200  என்ற அம்சத்தை  தேசிய நிகழ்வாக அனுஷ்டிக்கவாவது  இந்த அரசாங்கம் முன் வருமா? 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13