(ந.ஜெகதீஸ்)

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான முழுமையான சக்தியும் ஆளுமையும் சுதந்திரக் கட்சிக்கு இருக்கின்றது. இத்தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கான ஆளுமை சுதந்திரக்கட்சி தலைமையிடம் இல்லை என ஆரூடம் சொல்லும் கூட்டுஎதிரணியில், எவராவது பசிலின் தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட இதுவரையில் இணக்கம் தெரிவித்துள்ளனரா? எனவும் பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி கேள்வியெழுப்பியுள்ளார். 

கொழும்பில் அமைந்துள்ள பெற்றோலிய வள  அமைச்சில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் தேர்தலை சிறந்த முறையில் முகங்கொடுப்பதற்கான ஆளுமை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையிடம் இல்லை என கூட்டு எதிரணி உறுப்பினர்கள் ஆரூடம் கூறி வருகின்றனர். எனினும் அவர்களில் எவரேனும் பசில் ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சியில் செயற்படுவதாக ஊடகங்கள் வாயிலாக அறிவித்துள்ளனரா? அவ்வாறு அறிவித்தது கிடையாது. ஆகவே கட்சி மீது ஈடுபாடு கொண்டிருப்பவர்களுக்கும் எமது வேலைத்திட்டங்களில் கைக்கோர்க்க எண்ணுபவர்களுக்கும் சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படுமாறு பகிரங்க அழைப்பினை விடுக்கின்றோம். இதனையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விரும்புகின்றார் என்றார்.