தை மகளை வரவேற்போம்!

Published By: Ponmalar

13 Jan, 2023 | 11:08 AM
image

சூரியன் தனு ராசியில் இருந்து மகர ராசியில் நுழைவதன் மூலம் உத்தராயனத்தில் பகலவன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவேதான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர். வருடத்தில் அனைத்து நாட்களும் சூரியனுக்கு பூஜை செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலில் கண்களுக்கும் தோல்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், சூரிய பகவானை வழிபட வேண்டும். மனதில் உறுதி, பலம் மற்றும் தேக ஆரோக்கியத்திற்கும் சூரிய வழிபாடு மிகவும் இன்றியமையாத ஒன்று.

யோகாவில் சூரிய நமஸ்காரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு சூரியனுக்கு விழாவாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாளின் மகத்துவம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

‘போகி’யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு ‘போகி’ என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், ‘இந்திர விழா’வாகவும் அழைக்கப்படுகிறது. மழை பொழிய வைக்கும் கடவுள் வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை ‘போகி’யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது.

தற்போது, ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். இதன் மூலம் பழைய தீமைகள் நெருப்பில் அழிந்து  புதிய  நன்மைகள் ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை.

தை பிறந்தால் வழி பிறக்கும்

தரணியிலே ஒளி பிறக்கும்

தை மகளின் வருகையிலே

பரணி சொல்லும் வழி பிறக்கும்!

மார்கழி மாதக் குளிர் குறைய, தை மாதம் தன்னுடன் வசந்தத்தைக் கொண்டு வந்து, எல்லோரையும் மலர செய்கின்றது. தமிழர் திருநாளாக போகிக்கு அடுத்த நாள் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. புது நெல்லை புடைத்து அதில் பொங்கலிடுவது என்பதை நம் முன்னோர்கள் பாரம்பரியமாக கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இன்றும் கிராமத்தில் இதனை மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.

அறுப்புக் களத்தில் அறுத்த நெற்கதிர்களில் சிலவற்றை அழகாகப் பின்னி ஒரு அலங்காரம் போல் செய்து அதை வீட்டு முன் வாசலில் தோரணம் போன்று தொங்க விடுவார்கள். சிட்டுக் குருவிகள் அந்த நெற்கதிர்கள் மேல் அமர்ந்து கொத்தித் தின்னும்.

அப்போது அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும். இதனை குருவிகளுக்காகவேதான் பின்னி வாசலில் தொங்க விடுவார்கள். தனக்குக் கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மையினை இது எடுத்துக்காட்டுகிறது. உணவுச் சுழற்சி பற்றியும் சுற்றுச் சூழல் சமன்பாடு பற்றியும் இயற்கையைப் பற்றிய அறிவும் இதன் மூலம் உணரலாம்.

வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாகத்தான் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அதனையே பொங்கல் பொங்கி வரும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று வீட்டில் உள்ள அனைவரும் சொல்லி ஆரவாரம் செய்து மங்கல ஒலியாக குலவையிட்டு தைத்திருநாளை வரவேற்பது இயல்பு.

பொங்கல் வைக்கும் பானையின் கழுத்துப்பகுதியில் மாவிலை மற்றும் மஞ்சள் கிழங்கு கட்டி, அதனை விபூதி, சந்தனம் குங்குமம் கொண்டு அலங்கரித்து அதன் பிறகு தான் அதில் அரிசி, பால் மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி பானையிலுள்ள பாலும் நீரும் சேர்ந்து நுரைத்துப் பொங்கும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று சூரியனைப் பார்த்து வணங்கி நன்றி தெரிவிப்பது நம் பண்பாடு.

அந்த பொங்கற் தண்ணீரைச் சிலர் சேமித்து வைத்து, தங்கள் விளைநிலங்களுக்குத் தெளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பால் போல் மனமும் நீர் போல் தெளிவும் வார்த்தையில் இனிமையும் கொண்டு சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்பதற்காகவே இந்த பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

சூரியனில்லாத பூமி இருண்டு விடும். மழையோ, நீரோ இருக்காது. உயிர்கள் எதுவும் உற்பத்தியாகவோ, வாழவோ முடியாது. பூமியின் ஜீவாதாரமாக சூரியனின் இயக்கம் இருந்து வருகிறது. பொங்கல் என்பது லட்சுமி வீட்டிற்கு வரும் நாள் என்று எண்ணுவதால், அவளைத் தங்க வைப்பதற்காக அன்றைய தினம் வீட்டை விட்டு எதையும் வெளியேற்றக் கூடாது என்பது ஐதீகம். அதேபோல் பொங்கலன்று இறைவனுக்கு படைக்கப்படும் கரும்பும் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்துகிறது. கரும்பின் மேல் பகுதி உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிப்பாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு உழைத்தால், முதுமையில் சிரமமில்லாமல் இனிய வாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை கரும்பின் சுவை நமக்கு உணர்த்துகிறது.

பொங்கலின் மறுநாள் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் திருநாள். அன்று மாடுகளை நீராட்டி, மாட்டுத் தொழுவங்களுக்கு வண்ணம் தீட்டி, பச்சரிசி, புது வெல்லம், செங்கரும்பு, மஞ்சள், மாக்கோலம் இட்டு விவசாயம் செழிக்க உழைத்த கால்நடைகளை பூஜிக்கும் நாள்.தைத் திருநாளன்று விளைந்த புது நெல்லில் இருந்து எடுக்கப்படும் அரிசியைக் கொண்டே பொங்கலிடவேண்டும் என்பது சம்பிரதாயம்.

ஆனால் இன்று நகரங்களில் வசிப்போர்க்கு இது சாத்தியமானதல்ல. அவர்களால் புது நெல்லில் இருந்து எடுக்கப்படும் அரிசியினை கொண்டு பொங்கல் வைக்க முடியாது என்றாலும், கடையில் புதிதாக அரிசியினை வாங்கி அதனைக் கொண்டு பொங்கல் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

வீட்டில் அரிசி இருந்தாலும், பொங்கலன்று புது அரிசியினைதான் சூரிய தேவனுக்கு படைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். கரும்பு, மஞ்சள் படையலுடன் பழங்களையும் படைத்து வழிபடுவதும் நடைமுறையில் இன்றும் தொடர்ந்து வருகிறது. சிலர் பல்வேறு வகையான பலகார வகைகளையும் செய்து படைத்து உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அதனை பகிர்ந்து சமூக உணர்வோடு கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் விழாவின் நிறைவாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உற்றார், உறவினர்கள், நண்பர்களை கண்டு இனிப்புகள் வழங்கி சந்தோஷத்துடன் பொங்கல் விழாவை முடிப்பதே காணும் பொங்கலின் அம்சம்.தமிழர் திருநாளான தைப்பொங்கல் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியஸ் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று ஸ்ரீராம நவமி விரதம்

2023-03-30 21:40:01
news-image

பொகவந்தலாவையில் 35 ஆவது வருடமாக நிகழ்த்தப்படும்...

2023-02-19 19:06:52
news-image

மகத்துவங்கள் நிறைந்த மஹா சிவராத்திரி

2023-02-18 11:40:35
news-image

'மஹா சிவராத்திரி' காணும் திருக்கேதீச்சரத்தானே போற்றி! 

2023-02-16 16:56:52
news-image

சிவபெருமானின் சிவ ரூபங்கள்...

2023-02-15 17:15:22
news-image

கம்பளை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில்...

2023-02-08 21:08:52
news-image

ஆன்மிக பாதையில் அன்னதானத்தின் மகத்துவம்!

2023-02-07 17:28:48
news-image

இன்று தைப்பூசம்: முருக பக்தர்களின் போற்றுதற்குரிய...

2023-02-05 15:57:19
news-image

இலங்கையில் தமிழ் இசைக் கலைஞர்களுக்கோ தமிழ்...

2023-01-30 11:34:37
news-image

ஈமச் சடங்கு...!

2023-01-28 16:35:14
news-image

முன்னோர்களின் ஆசி கிடைக்க விரதம் இருந்து...

2023-01-20 21:35:30
news-image

கலை என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது -...

2023-01-20 11:08:18