(எம்.மனோசித்ரா)
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அரசியலமைப்பிற்கு முரணான நியாயமற்ற முறையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளார்.
அவர் இழைத்துள்ள தவறை சாதாரணமானதாகக் கருத முடியாது. இவருக்கு எதிராக அரசியலமைப்பிற்கமைய உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பொறுப்பேற்பதை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டு, பின்னர் அது இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே பெப்ரல் அமைப்பு இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
'தேர்தல் ஆணைக்குழு, அதற்கு அரசியலமைப்பு ரீதியாகவும், உள்ளுராட்சி மன்ற தேர்தல சட்டத்தின் ஊடாகவும் உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அறிப்பினை வெளியிட்டுள்ளது.
அத்தோடு அது தொடர்பான சட்டத்தின் உறுப்புரைக்கமைய தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 104 - 4 (ஆ) உறுப்புரைக்கமைய சகல அரச உத்தியோகத்தர்கள், சட்ட ரீதியான அரச கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அனைத்து அரச அதிகாரிகளும் தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய செயற்பட வேண்டும்.
எந்தவொரு நியாயமான காரணிகளும் இன்றி தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை உதாசீனப்படுத்துதல் , அதற்கமைய செயற்படாமலிருத்தல் என்பன 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு இலட்சம் ரூபாவிற்கு குறையாத தண்டப்பணம் அல்லது இவ்விரு தண்டனைகளுக்கும் உட்படக் கூடிய குற்றமாகும் என அரசியலமைப்பின் 104 உப பிரிவு 1 ஆ உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலுக்குள் பொது நிர்வாகத்தின் சிரேஷ்ட உயரதிகாரியான பொது நிர்வாகம், மாகாணசபை, உள்ளுராட்சிமன்ற அமைச்சின் செயலாளரினால் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பொறுப்பேற்க வேண்டாம் என சகல மாவட்ட செயலாளர்களுக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டமையானது அரசியலமைப்பு மீறலாகும்.
பொது நிர்வாக செயற்பாடுகளின் போது மாவட்ட செயலாளர்கள் , பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட சகல நிர்வாகங்களுக்கும் தலைமைத்துவத்தை வழங்கும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இவ்வாறானதொரு தவறை இழைத்துள்ளமையை இலகுவாகக் கருத முடியாது.
குறிப்பாக மக்களின் ஜனநாயக உரிமைகள் உபயோகிக்கப்படும் தேர்தலொன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் நிர்வாக அதிகாரியொருவர் இவ்வாறானதொரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளமையானது ஒட்டுமொத்த அரச சேவைக்கும் அவமரியாதையாகும் என்பதோடு, அது எதிர்காலத்திற்கு தவறானதொரு முன்னுதாரணமாக அமைகின்றது.
தமது உயர் அதிகாரிகள் தவறான ஆலோசனைகளை வழங்குகின்றனர் என்றால் அல்லது அரசியலமைப்பிற்கு முரணான ஆலோசனைகளை வழங்குகின்றனர் என்றால் அதற்கு எதிராக நிர்வாக சேவையில் உயர் அதிகாரி என்ற ரீதியில் அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்களது கட்டளைகளுக்கு எதிராக செயற்படுமாறு நியாயமான காரணிகள் இன்றி தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த குறித்த அமைச்சின் செயலாளர் தொடர்பில் அரசியலமைப்பிற்கமைய உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களிடம் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
எங்களின் இந்த வேண்டுகோள் தனிப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையது அல்ல என்றும், இந்த நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும், தேர்தல் ஆணையகத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், அரச அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்படுவதற்குத் தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவுமே என்பதை வலியுறுத்துகின்றோம். இது தொடர்பில் நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் இந்நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM