கஞ்சா விவகாரம் : சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிலவை 7 நாள் தடுப்பில் வைத்து விசாரிக்கும் சி.ஐ.டி.

Published By: Digital Desk 3

11 Jan, 2023 | 09:39 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மொனராகலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசில குமார ஹேரத்தை 7 நாள் தடுப்புக் காவலில் வைத்து, சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவொன்று விசாரணை செய்து வருகின்றது. மொனராகலை நீதிவான் நீதிமன்றில் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய, சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான சிறப்புக் குழு இவ்விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.  அதன்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசில குமார உள்ளிட்ட 6 பேரும்  சி.ஐ.டி. பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படை கட்டளைத் தளபதிக்கு கிடைத்த புதையல் தோண்டுதல் குறித்த தகவல் ஒன்றுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கஞ்சாவுடன் மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளில்,  கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் எப்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசில குமாரவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வந்தது என்பது குறித்து ஊகிக்க முடியுமான தகவல்களை  சி.ஐ.டி.யினர் வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.

அத்துடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசில குமாரவுக்கு எதிராக பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவில் மட்டும் 15 விசாரணைகள் நிலுவையில் உள்ளமை குறித்தும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் படி,

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார ஹேரத் கடந்த 2022 டிசம்பர் 31 ஆம் திகதி அப்பகுதியின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு தொலைபேசிச் செய்தியொன்றை அனுப்பி,  மொனராகலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விசேட சுற்றிவளைப்பு  நடவடிக்கைக் கடமைகளுக்காக அதிகாரிகளை அழைத்துள்ளார். பின்னர் அப்பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் ஒருமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்கள் கடந்த ஜனவரி 3ம் திகதி காலை 9.00 மணிக்கு  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  அங்கு வைத்து சுற்றி வளைப்புக்களை முன்னெடுக்கவென 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் நிறுவப்பட்ட  முதலாவது சுற்றி வளைப்புக் குழுவில் சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தின்  உப பொலிஸ் பரிசோதகர்  ரி.எம்.எம்.ஐ.  பண்டார தலைமையில்  ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் , அம்பேகமுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள்  3 பேர், மொனராகலை பொலிஸ், வெல்லவாய பொலிஸ் உத்தியோகத்தர்கள்  ஒருவர் வீதம்  10 பேர் இருந்தனர்.

3 வாரங்களுக்கு செயற்பட இக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அதில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் செயற்பட வேண்டிய விதம் குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றிவளைப்பில் கைப்பற்றப்படும் எந்த வழக்குப் பொருளாக இருப்பினும் அதனை அண்மையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என இதன்போது ஆலோசனையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சியம்பலாண்டுவ பொலிஸ் பரிசோதகர் டி.எம்.எம்.ஐ.பண்டார தலைமையிலான முதலாவது சுற்றிவளைப்புக் குழுவினர் கபிலித்த காட்டுக்குச் சென்று  சில நாட்கள் தங்கியிருந்து,  சட்டவிரோத  கஞ்சா சேனை பற்றிய தகவல்களை சேகரித்துள்ளனர். கபிலித்த காட்டுப் பகுதியில் புபுர எனும் இடத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த கஞ்சா பயிர் செய்கை தொடர்பில் அனைத்து தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டு, அக்குழுவினரால்  கடந்த   6 ஆம் திகதி  சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அந்த சேனை சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதன்போது சுற்றிவளைப்புக்கு  சென்றவர்கள் இந்த கஞ்சா சேனை தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமாரவுக்கு  அறிவித்துள்ளனர்.

அதன் பின்னர், வழமையான மரபுக்கு அப்பால் சென்று இந்த சுற்றி வளைப்பு குறித்த விசாரணைகளை முன்னெடுத்து   வழக்குப் பொருட்களைக் கொண்டு வருமாறு மொனராகலைப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார அத்திமலை, பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.சஞ்சய் தர்மதாசவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, அத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றுமொரு குழுவினருடன் உரிய இடத்திற்குச் சென்றுள்ளதுடன்,  சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா சேனையிலிருந்த கஞ்சா செடிகளை உழவு இயந்திரத்தில் வழக்குப் பொருட்களாக ஏற்றிச் செல்லுமாறு  பணிப்புரை விடுத்துள்ளனர். நான்கு முதல் ஐந்து அடி உயரமுள்ள 25,000க்கும் மேற்பட்ட  கஞ்சா செடிகள் அத்தோட்டத்தில் இருந்து ஒரு உழவு இயந்திரமொன்றில் ஏற்றி அத்திமலை பொலிஸ் நிலையத்துக்கு இதன்போது எடுத்து செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில் அத்திமலை பொலிஸ் நிலையத்தில்  230 கஞ்சா செடிகள் மட்டுமே வழக்குப் பொருட்களாக ஆவணங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. எஞ்சிய கஞ்சா செடிகள்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமாரவுக்கு அனுப்பி வைப்பதற்காக அத்திமலை  பொலிஸில் மூட்டையாக கட்டப்பட்டு, பின்னர் அத்திமலை பொலிஸ் ஜீப் மூலம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு  கொண்டு செல்லப்பட்டதாக  தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த கஞ்சா செடிகள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், அத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் எந்த எழுத்து பூர்வ ஆவணத்தையும் பெறாது விடுமுறையில் செல்ல சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சிசில குமார அனுமதித்துள்ளார். அதன்படி வழக்குப் பொருட்களாக பொலிஸ் புத்தகத்தில் பதிவுச் செய்யப்பட்ட 230 கஞ்சா செடிகளை மட்டும்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அத்திமலை பொலிஸ் பொறுப்பதிகாரி விடுமுறையில் சென்றுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார  கைது செய்யப்பட்ட போதும், அத்திமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கடமைக்கு சமூகமளித்திருக்கவில்லை.  இது குறித்து தற்போது விசாரணையாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.  குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரியை அச்சுறுத்தி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பல்வேறு சட்ட விரோத செயல்களை செய்துகொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சி.ஐ.டி.யினர் அது குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சுற்றிவளைப்பு அதிகாரிகள் உழவு இயந்திரத்தில்  கஞ்சா செடிகளை அனுப்பியமை குறித்து தகவல்கள் உள்ள போதிலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 650  கஞ்சா செடிகளே காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அவை கிட்டத்தட்ட 22.2  கிலோ என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அவ்வாறாயின் எஞ்சிய கஞ்சா தொகை எங்கே, அவற்றுக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சி.ஐ.டி. உள்ளக தகவல்கள் தெரிவித்தன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53
news-image

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவன்...

2025-02-08 09:57:57
news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23
news-image

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க...

2025-02-07 20:28:48
news-image

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு...

2025-02-08 02:10:13
news-image

மலையக மக்களை 'மலையகத் தமிழர்கள்" என...

2025-02-07 20:05:32