(எம்.மனோசித்ரா)
இலங்கை மின்சாரசபையின் முன்மொழிவுகளுக்கமைய ஜனவரி முதலாம் திகதி முதல் மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்கு அமைச்சரவையை தவிர்த்து வேறு எந்த தரப்பினரதும் அனுமதி அவசியமற்றது. முன்மொழிவுகளில் திருத்தங்கள் காணப்படின் அவற்றை பெப்ரவரி 15 க்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (ஜன 10)செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது நிலவுகின்ற நிதிநிலைமையின் கீழ் மின்சார சபைக்குத் தேவையான நிதியை வழங்குவதற்கு திறைசேரிக்கு இயலாமையால், நாட்டில் தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக மின்பாவனையாளர்களுக்கு ஏற்படுகின்ற தாக்கங்களை இயன்றவரை குறைத்து மின்விநியோகத்தை மேற்கொள்வதற்கான செலவை மாத்திரம் ஈடுசெய்து கொள்ளும் வகையில் தற்போதுள்ள மின்கட்டணத்தை திருத்தம் செய்வதைத் தவிர்ந்த வேறெந்த மாற்று வழிகள் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்திக்கான நிலக்கரி மற்றும் எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு விஜயம் செய்தாலும் , அவற்றுக்கு செலுத்துவதற்கான பணம் அரசாங்கத்திடம் இல்லை. இதற்காக அரச வங்கிகளிடம் கடன் பெற முயற்சித்த போதிலும் , அந்த கோரிக்கை வங்கிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளன. கட்டண திருத்தம் இன்மையால் மின்சார சபைக்கு தொடர்ச்சியாக கடன் வழங்கும் பட்சத்தில் , அந்தக் கடனை மீளப் பெற முடியாத நிலைமை ஏற்பட்டால் அரச வங்கி கட்டமைப்புக்கள் வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கட்டண அதிகரிப்பின்றி இந்த பிரச்சினைக் வேறெந்த மாற்று வழிகளும் கிடையாது. எனவே இவ்வாண்டு எந்தவொரு காரணத்திற்காகவும் மின் விநியோகம் துண்டிக்கப்படக் கூடாது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச மின்கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறித்த தரப்பினர்களிடம் கேட்டறிந்து ஆராய்ந்துள்ள ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த திருத்தங்களை முன்வைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
அதுவரை மின்சக்தி தொழிற்றுறை தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள பொதுக் கொள்கை வழிகாட்டல் திருத்தங்களுக்கமைய இடைக்காலப் படிமுறைகளாக, இம்மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மின்சார சபையின் உத்தேச மின்கட்டணத்தைத் திருத்தம் செய்வதற்காக இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் திருத்தங்கள் எதுவும் சமர்ப்பிக்காவிடின், குறித்த திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை மின்சார சபை படிமுறைகளை மேற்கொண்டு தொடர்ந்துவரும் மாதாந்த மின்கட்டணப் பட்டியலில் தேவையான இணக்கங்களை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இம்மாதம் முதலாம் திகதி முதல் மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்.
மின் கட்டண அதிகரிப்பிற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி அவசியமற்றது. எனினும் கட்டண அதிகரிப்பிற்கு பதிலாக மாற்று வழிகள் இருப்பின் அல்லது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதனை ஆணைக்குழுவினால் முன்வைக்க முடியும். அதற்கமைய ஏதேனுமொரு வகையில் கட்டணத்தை குறைக்க முடியுமெனில் அடுத்த மின் கட்டண பட்டியலில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
எத்தனை சதவீதத்தினால் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது என்பது தொடர்பில் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இது தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெளிவுபடுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM