இவ்வாண்டின் முற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிட்டும் - இலங்கை மத்திய வங்கி எதிர்வுகூறல்

Published By: Digital Desk 3

10 Jan, 2023 | 12:50 PM
image

(நா.தனுஜா)

இவ்வாண்டின் முற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்தகால நிதியுதவி கிட்டுமென எதிர்பார்ப்பு வெளியிட்டிருக்கும் இலங்கை மத்திய வங்கி, ஆண்டின் முன்னரைப்பாகத்தில் பணவீக்கம் குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்வுகூறியுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், இவ்வாண்டில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் நடவடிக்கைகளையும் உள்ளடக்கி வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மத்திய வங்கி மேற்குறிப்பிட்டவாறு எதிர்வுகூறியுள்ளது. 

அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

பேரண்டப்பொருளாதார சமநிலையை மீட்டெடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டு மிகவும் கடினமானதும் தவிர்க்கமுடியாததுமான கொள்கை வழிமுறைகளை நடைமுறைப்படுத்தவேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கும் மத்திய வங்கிக்கும் ஏற்பட்டது. அதன்விளைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட குறுங்கால பொருளாதார உறுதிப்பாட்டு வழிமுறைகளுக்கு இணையாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதை முன்னிறுத்திய பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டு செப்டம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடும் எட்டப்பட்டது. அதுமாத்திரமன்றி கடன்வழங்குனர்களிடமிருந்து கடன் ஸ்திரத்தன்மை தொடர்பான உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அப்பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இவ்வாண்டின் முற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிட்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னெப்போதுமில்லாத வகையிலான குறுங்கால பொருளாதார உறுதிப்பாட்டு வழிமுறைகளே இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இக்காலப்பகுதியில் தனிநபர்களினாலும், வியாபாரங்களினாலும் மேற்கொள்ளப்பட்ட தியாகமானது பொருளாதார உறுதிப்பாடு நடுத்தர காலத்திலிருந்து நீண்டகாலத்திற்கு மீட்டெடுக்கப்படும் பட்சத்திலேயே அர்த்தமுள்ளதாக அமையும். எனவே நீண்டகாலப் பொருளாதார உறுதிப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

அதேவேளை இவ்வாண்டின் முன்னரைப்பாகத்தில் முதன்மைப்பணவீக்கமானது குறிப்பிடத்தக்களவிலான வீழ்ச்சிப்பாதையொன்றில் நகர்ந்து, ஆண்டின் இறுதியில் விரும்பத்தக்க மட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக எதிர்வருங்காலத்தில் பணவீக்கத்தில் ஏதேனும் மேல்நோக்கிய நகர்வுகள் அவதானிக்கப்படின், அவை பொருத்தமான கொள்கை வழிமுறைகளின் ஊடாகக் கட்டுப்படுத்தப்படு;ம். மேலும் இவ்வாண்டின் பின்னரைப்பகுதியிலிருந்து நாட்டின் பொருளாதாரமானது படிப்படியான மீட்சியைப் பதிவுசெய்யுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்ததாக நாட்டின் பொருளாதாரத்தோற்றப்பாடு குறித்து மக்களுக்கு நன்கு தெளிவுபடுத்தும் நோக்கிலான செயற்திறன்மிக்க நாணயக்கொள்கை அறிக்கையொன்றை வெளியிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதனூடாக நாணயக்கொள்கை செயற்பாடுகளின் வெளிப்படைத்தன்மை மேலும் மேம்படுத்தப்படும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்