எம்மில் சிலர் குறைவான உழைத்தாலும், நிறைவான செல்வத்தை சம்பாதித்து, மகிழ்ச்சியில் திளைப்பர். இவர் மீது பொறாமை கொள்வதை விட, இவரின் வெற்றிக்கான சூட்சுமத்தை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
துல்லியமாக தொடர்ந்து இவரை அவதானித்தால் அவரின் வெற்றிக்குரிய ரகசியத்தை கண்டறிய இயலும். இவர்களுக்கு சோதிட ரீதியாக சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ திசா புத்திகள் நடைபெற்றாலும், இவர்களது வருவாயிலும், வளர்ச்சியிலும் எந்தத் தடையும் இருப்பதில்லை. இதற்கு பிரதான காரணம் இவர்களுக்கு அவர்களுடைய குல தெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்து வருவது தான்.
இந்த புள்ளியில் எம்மில் பலரும் குறிப்பாக தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பிய மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் எம்மவர்கள், அங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொண்டாலும், கடுமையாக உழைத்து பொருளீட்டினாலும், மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத மனதுயரங்களுடன் தான் தங்களது வாழ்க்கையை கடத்திக் கொண்டிருப்பர்.
இதற்கு இவர்கள் தங்களின் குலதெய்வ வழிபாட்டை மறந்திருப்பது அல்லது தொடராதிருப்பது தான் காரணம் என எளிதாக அவதானிக்க இயலும்.
குலதெய்வ வழிபாடு என்பது, எம்முடைய முன்னோர்கள் சுய ஒழுக்கத்துடனும் ஆன்மீக கட்டுப்பாடுகளுடனும் வழி வழியாக சேமித்து வைத்த சூட்சுமமான ( நேர்நிலையான ஆரா வடிவிலான) ஆன்மீக சொத்து. இதனை வழிபாடுகளின் மூலம் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது எம்முடைய கடமை.
ஆனால் எம்முடைய தந்தைமார்களோ அல்லது அப்பப்பாவோ அல்லது அவர்களுடைய தந்தையோ வாழும் காலத்தில் ஏதேனும் சில தவறுதலான வழிகாட்டலால், குலதெய்வ வழிபாட்டிலிருந்து திசை மாறி பயணித்திருக்கலாம் அல்லது குலதெய்வம் எது? என்பதை அறிந்து கொள்ளாது, தற்காலிக பலனை அள்ளித் தந்த இஷ்ட தெய்வம் மீதான ஈடுபாட்டை தொடர்ச்சியாக பின்பற்றி இருக்கலாம்.
இதன் காரணமாக அடுத்து வரும் தலைமுறையினர் தங்களது தந்தையின் இஷ்ட தெய்வத்தை, குல தெய்வமாக கருதி அதனை வழிபடக்கூடும்.
குலதெய்வ வழிபாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் குடும்பத்தில் துயர சம்பவங்கள் நடந்தாலும், அவர்களால் மிக விரைவாக அதிலிருந்து மீண்டு, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி, வளர்ச்சியை நோக்கி பயணிக்க இயலும்.
அதே தருணத்தில் குல தெய்வ வழிபாட்டை தவறவிட்டவர்கள் அல்லது தெரிந்தும் தொடராதவர்கள், கோடி கோடியாய் சம்பாதித்தாலும் மன கவலையுடனும், சஞ்சலமான மனதுடனும், வெளியில் பகிர்ந்து கொள்ள இயலாத நோயுடனும் தங்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு செல்வர்.
தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் சிலருக்கு, அவர்களின் மனதில் உடனடியாக எம்முடைய குலதெய்வத்தை கண்டறிவது எப்படி? என்ற வினா சந்தேகமாக எழக் கூடும். இதற்கு ஆன்மீக பெரியவர்கள் சில உபாயங்களை முன் வைக்கிறார்கள்.
வேறு சிலர், தங்களது ஜாதகத்தை சோதிடர்களிடம் காட்டி குலதெய்வத்தை கண்டறிந்து தருமாறு கேட்கிறார்கள். ஜோதிடர்களும் சில ஜோதிட கணக்கை துல்லியமாக அவதானித்து குலதெய்வத்தை கண்டறிந்து தெரிவிக்கிறார்கள். ஆனால் அனைத்து சோதிடர்களும் ஒரே குலதெய்வத்தை சுட்டிக்காட்டுவதில்லை.
இதனால் எம்மில் பலருக்கு குலதெய்வம் எது? என்பதில் குழப்பமும், கவலையும் ஏற்படுகிறது. வேறு சிலர் ஜாதகத்தை தவிர்த்து ஜீவநாடி முறையிலும், அருள்வாக்கு முறையிலும் குலதெய்வத்தை கண்டறிய முயற்சிக்கிறார்கள். இவர்களுக்கும் முழுமையான வெற்றி கிடைப்பதில்லை.
இந்நிலையில் குலதெய்வத்தை கண்டறிய வேண்டும் என்றால், ஆன்மீக பெரியவர்கள் தானம், தவம் என இரண்டு விடயங்களை முன்னிறுத்துகிறார்கள்.
அதாவது அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று குறிப்பாக அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய இரண்டு திகதிகளில் ஏதேனும் ஒரு தினத்தில் சென்று, தீபம் ஏற்றி மனமுருக பிரார்த்திக்க வேண்டும்.
'பிரபஞ்சமே ..! ஏதேனும் சில காரணங்களால் எம்முடைய முன்னோர்கள் எம்முடைய குலதெய்வ வழிபாட்டை தொடரவில்லை.
அதற்காக எங்கள் மீது கோபம் கொள்ளாமல், கருணை காட்டி, உங்களை எங்களால் உணர வைக்க வேண்டும் அல்லது நீங்கள் எங்கு குடி கொண்டிருக்கிறீர்கள்? என்பதனை வெளிப்படுத்த வேண்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும்.
இந்த பிரார்த்தனையுடன் நில்லாது உங்களது பொருளாதார சக்திக்கு ஏற்ற வகையில் ஏதேனும் ஒரு தினத்தை தெரிவு செய்து அன்றைய நாளில் ஐந்து பேருக்காவது அன்னதானத்தை செய்ய வேண்டும்.
இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் அல்லது தொடர்ந்து 48 நாட்கள் பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய பிரார்த்தனைக்கு இந்த பிரபஞ்சம் பதிலளிக்கும்.
உங்களது கனவிலோ அல்லது உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மூலமாகவோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாகவோ, குறிப்பாக குலதெய்வம் இங்கு இருக்கிறது என்பது தெரியவரும்.
அதன் பிறகு குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால், உங்களது எண்ணம் செயலாகி, வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
உங்கள் முன்னோர்கள் செய்த தவறினை நீங்கள் செய்யாமல், குலதெய்வ வழிபாட்டை உங்களுடைய வாரிசுகளுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் பின்பற்ற வைக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.
சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM