இலங்­கையில் இது­கா­ல­வ­ரையில் பத­வியில் இருந்த அர­சாங்­கங்­களில் முன்னாள்   ஜனா­தி­பதி   மகிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தைப் போன்று வேறு எந்­த­வொரு அர­சாங்­க­முமே படு­மோ­ச­மான ஊழல் மோச­டிகள், எதேச்­சா­தி­காரம், அதி­கார துஷ்­பி­ர­யோகம், சட்­டத்தின் ஆட்சி சீர் குலைவு, குடும்ப அர­சியல் ஆதிக்கம் மற்றும் உரிமை மீறல்­க­ளுடன் கூடு­த­லான அள­வுக்கு அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­ட­தில்லை.

அந்தக் கெடு­திகள் எல்­லா­வற்­றையும் இல்­லா­தொ­ழித்து ஜன­நா­ய­கத்தை மீட்­டெ­டுத்து புதி­ய­தொரு அர­சியல் கலா­சா­ரத்தை அறி­முகம் செய்து நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்தப் போவ­தாக நாட்டு மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­துக்­கொண்­டுதான் இன்­றைய தேசிய ஐக்­கிய அர­சாங்கம் பத­விக்கு வந்­தது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­னதும் தலை­மை­யி­லான இந்த அர­சாங்கம் அதன் இரு வரு­டங்­களைப் பூர்த்­தி­செய்­வ­தற்கு இன்­னமும் மூன்று வாரங்­களே இருக்கும் நிலையில், மக்கள் மத்­தியில் இருந்த நம்­பிக்­கை­களும் எதிர்­பார்ப்­பு­களும் மங்கிக் கொண்­டு­போ­கின்ற துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தொரு நிலை­மை­யையே காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது.

இந்த அர­சாங்கம் செய்­தி­ருக்­கக்­கூ­டிய காரி­யங்­க­ளி­னாலும் செய்­யாமல் விட்­டி­ருக்­கக்­கூ­டிய காரி­யங்­க­ளி­னாலும் நாட்டின் தற்­போ­தைய அர­சி­யலில் கவ­லைக்­கு­ரிய போக்­குகள் தலை­யெ­டுத்­தி­ருக்­கின்­றன. அதன் விளை­வாக அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வ­ளித்த வாக்­கா­ளர்­க­ளி­ட­மி­ருந்து அது கணி­ச­மான அள­வுக்கு தனி­மைப்­பட்­டுக்­கொண்டு போகின்­றது. ராஜபக் ஷ ஆத­ரவு சக்­திகள் மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வந்­து­வி­ட­மு­டி­யு­மென்ற நம்­பிக்­கை­யுடன் தங்கள் அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

ராஜபக் ஷாக்­களின் ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­மென்று நாட்டு மக்­க­ளுக்குக் கூறிய இன்­றைய அர­சாங்­கத்­துக்கு எதி­ராக அதே ராஜபக் ஷாக்­களும் அவர்­க­ளுக்கு ஆத­ர­வான அர­சி­யல்­சக்­தி­களும் பல ஊழல் முறை­கே­டுகள் தொடர்பில் குற்றச் சாட்­டுக்­களை சுமத்தத் தொடங்­கி­யி­ருக்­கின்­றனர். அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்தச் செயன்­மு­றை­க­ளிலும் அர­சாங்கத் தலை­வர்கள் மத்­தியில் தடு­மாற்­ற­மான போக்­கு­களே காணப்­ப­டு­கின்­றன.

இத்­த­கை­ய­தொரு பின்­பு­லத்­திலே நாட்டின் அர­சியல் நிகழ்வுப் போக்­கு­களின் திசை மார்க்­கத்தை மீண்டும் தீர்­மா­னிக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளாக ராஜபக் ஷாக்கள் துரி­த­மாக மாறிக்­கொண்டு வரு­கி­றார்கள். புதிய அர­சி­ய­ல­மைப்பை வரை­வ­தற்­கான செயன்­மு­றை­க­ளுக்கு முன்னாள் ஜனா­தி­ப­தியின் ஆத­ரவைக் கோரி­யி­ருப்­பதன் மூல­மாக அர­சாங்கத் தலை­வர்கள் ராஜபக் ஷ ஆத­ரவுச் சக்­தி­க­ளுக்கு இருக்­கக்­கூ­டிய அர­சி­யல்­வ­லுவை பகி­ரங்­க­மாக ஒத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

இலங்­கையின் இரு­பி­ர­தான அர­சியல் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும்  இணைந்து முன்­னொரு போதும் இல்­லாத வகையில் தேசிய ஐக்­கிய அர­சாங்­கத்தை அமைத்­தி­ருக்­கின்­ற­போ­திலும், சுதந்­திரக் கட்­சிக்குள் இருக்­கக்­கூ­டிய ராஜபக் ஷ ஆத­ரவு முகாம் அர­சாங்­கத்தில் பங்­கேற்­காமல் பாரா­ளு­மன்­றத்­திற்குள் தங்­களை 'கூட்டு எதி­ரணி"  என்று அழைத்துக் கொண்டு செயற்­பட்டு வரு­கின்­றது.

அதனால் இரு பிர­தான கட்­சி­க­ளையும் பங்­கா­ளிகளாகக் கொண்ட அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து எதிர்­பார்க்­கப்­ப­டக்­கூ­டிய பய­னு­று­தி­யு­டைய செயற்­பா­டுகள் பெரு­ம­ள­வுக்குச் சாத்­தி­ய­மற்­ற­வை­யாகிப் போய்க் கொண்­டி­ருக்­கின்­றன. ராஜபக் ஷாக்­களை மீண்டும் தலை­யெ­டுக்க விடக்­கூ­டாது என்ற நோக்கம் மாத்­தி­ரமே ஐக்­கிய தேசியக் கட்­சி­யையும் சுதந்­திரக் கட்­சியின் ஜனா­தி­பதி சிறி­சேன முகா­மையும் தொடர்ந்தும் ஐக்­கி­யப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கி­றது. அர­சாங்க நிரு­வாகச் செயற்­பா­டு­களில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஜனா­தி­பதி முகா­முக்கும் இடை­யி­லான பெரு­ம­ளவு முரண்­பா­டுகள் அடிக்­கடி வெளிப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன.

இத்­த­கை­ய­தொரு சூழ்­நி­லையில், முன்னாள் ஜனா­தி­பதி ராஜபக்ஷவின் அர­சியல் எதிர்­காலம் குறித்து பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்க இந்­தி­யாவின் பிர­பல ஆங்­கிலப் பத்­தி­ரி­கை­களில் ஒன்­றான 'த இந்து' வின் வெளி­யீட்­டா­ளர்­க­ளான கஸ்­தூரி குழு­மத்தின் தற்­போ­தைய தலை­வரும் முன்னாள் ஆசி­ரி­ய­ரு­மான என்.ராமுக்கு கொழும்பில் வைத்து கடந்த வாரம் அளித்­தி­ருக்கும் பேட்­டியில் தெரி­வித்த சில கருத்­துகள் எமது கவ­னத்தைப் பெரிதும் தூண்­டு­ப­வை­யாக இருக்­கின்­றன. 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் ராஜபக் ஷ ஆத­ரவு குழு­வுக்கும் சிறி­சேன ஆத­ரவுக் குழு­வுக்கும் இடை­யி­லான பிளவு குறித்து உங்கள் கருத்து என்ன? அப்­பி­ளவு உங்­க­ளது தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் ஐக்­கி­யத்தைப் பாதிக்­கி­றதா? மகிந்த ராஜபக் ஷ மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரக்­கூ­டிய சாத்­தியம் குறித்து கவ­லைப்­ப­டு­கி­றீர்­களா? என்று பிர­த­ம­ரிடம் கேட்­கப்­பட்­டது.

'மகிந்த ராஜபக் ஷவைச் சுற்­றி­யுள்ள குழு பாரா­ளு­மன்­றத்தில் எதி­ர­ணியில் இருக்­கி­றது. ஆனால், பாரா­ளு­மன்­றத்தில் செயற்­ப­டு­கின்ற மேற்­பார்வைக் குழுக்­களில் அவர்­களும் பங்­கேற்று இயங்­கு­கி­றார்கள். கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெ­று­கின்­றன. அதே­வேளை, ராஜபக் ஷவுடன் இருப்­ப­வர்­களில் சில முக்­கிய உறுப்­பி­னர்கள் சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுவின் கூட்­டங்­க­ளிலும் பங்­கேற்­கி­றார்கள்.

ராஜபக்ஷவினால் சுதந்­தி­ரக்­கட்­சியை விட்டு வெளியில் சென்று சமா­ளிக்க முடி­யாது. அவ்­வாறு சென்றால் அவர் தனது ஆத­ரவுத் தளத்தை இழப்பார். அவ­ருக்கு எதி­ராக அவர்கள் ஒழுங்கு நட­வ­டிக்­கை­யையும் எடுக்க முடியும். எனது அபிப்­பி­ரா­யப்­படி நாள­டைவில் அவர் தனக்கு இப்­போது இருக்கும் ஆத­ரவுக் தளத்தை இழப்பார்.

ஏனென்றால் காலம் மாறிக்­கொண்டு போகி­றது. இளம் வாக்­கா­ளர்கள் அவ­ருடன் இல்லை. அந்த வாக்­கா­ளர்­களை தம்­பக்கம் இழுக்க வேறு கட்­சிகள் முயற்­சிக்கும். எமது கொள்­கைகள் வெற்­றி­ய­டை­யும்­போது மகிந்த ராஜபக் ஷ ஒரு தோல்வி கண்ட தலைவர் என்­பதை மக்கள் புரிந்­து­கொள்­வார்கள். அவர் மீண்டும் ஆட்­சி­ய­தி­கா­ரத்­துக்கு வர­மு­டி­யு­மென்று என்னால் பார்க்க முடி­ய­வில்லை.

ஏனென்றால், மாற்­ற­மொன்றை மக்கள் செய்­யும்­போது பழைய நிலைக்கு அவர்கள் ஒரு­போதும் திரும்பிச் செல்­ல­மாட்­டார்கள். மக்கள் இன்­னொரு மாற்­றத்தை விரும்­பு­வார்­க­ளாக இருந்தால், புதி­தாக ஒன்றை நோக்­கியே அவர்கள் போவார்கள். ஆனால், அவ்­வாறு நடக்கும் என்று நான் நினைக்­க­வில்லை. ஏனென்றால் இரு பிர­தான கட்­சி­களும் சேர்ந்து செயற்­ப­டு­வதை மக்கள் விரும்­பு­கி­றார்கள்' என்று பிர­தமர் பதி­ல­ளித்­தி­ருக்­கிறார். 

ராஜபக் ஷ சுதந்­தி­ரக்­கட்­சியை விட்டு வெளியே போக­மாட்டார் என்று பிர­தமர் தெரி­வித்­தி­ருக்கும்     கருத்தை ராஜ பக் ஷ ஆத­ரவுச் சக்­திகள் ஸ்ரீலங்கா மக்கள் முன்­னணி (ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன) என்ற பெயரில் அண்­மையில் புதிய கட்­சி­யொன்றைத் தொடங்­கி­யி­ருப்­பதன் பின்­பு­லத்தில் வைத்தே நோக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. 

முன்னாள் வெளி­யு­றவு அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸை தலை­வ­ரா­கக்­கொண்டே அந்த மக்கள் முன்­னணி ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 

அவர் என்­னதான் பெரிய மேதை­யாக இருந்­தாலும் அவரின் அர­சியல் வர­லாற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோக்கும் போது அவர் தலை­மையில் கட்­சி­யொன்று நாட்டு  மக்­களின் ஆத­ரவைப் பெறக்­கூ­டி­ய­தாக இருக்கும் என்று எவரும் நினைத்துப் பார்க்­கவோ நம்­பவோ மாட்­டார்கள். மக்கள் முன்­ன­ணியின் தோற்­றத்தின் பின்­ன­ணியில் யார்யார் எல்லாம் இருக்­கி­றார்கள் என்­பது சொல்லித் தெரிய வேண்­டிய ஒன்­றல்ல.

தலை­நகர் கொழும்­புக்கு வெளியே பத்­த­ர­முல்­லையில் அமைந்­தி­ருக்கும் முன்னாள் ஜனா­தி­பதி ராஜபக் ஷவின் அர­சியல் அலு­வ­ல­கத்தில் தான் மக்கள் முன்­ன­ணியின் முதன் முத­லான முறைப்­ப­டி­யான செய்­தி­யாளர் மாநாடு  அவ­ரது பிறந்த தினத்­துக்கு முதல் நாள் (நவம்பர் 17) நடை­பெற்­றது.

சுதந்­தி­ரக்­கட்­சியின் முன்னாள் தேசிய அமைப்­பா­ள­ரான முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர்    பசில்  ராஜ பக் ஷ, பேரா­சி­ரியர் பீரிஸ் சகிதம் அந்தச் செய்­தி­யாளர் மாநாட்டில் தங்­க­ளது எதிர்­காலத் திட்­டங்கள் குறித்து விளக்­க­ம­ளித்த போது தனது மூத்த சகோ­த­ர­ரான முன்னாள் ஜனா­தி­ப­தியே தங்­க­ளது கட்­சியின் ''ஆன்­மீகத் தலைவர்'' என்று சொன்­னதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. மக்கள் முன்­ன­ணியின் தேசிய அமைப்­பாளர் போன்றே     பசில் ராஜ பக் ஷ கட்­சிக்கு நாடு­பூ­ராவும் உறுப்­பி­னர்­களைச் சேர்க்கும் பிர­சா­ரங்­க­ளையும் தீவி­ர­மாக முன்­னெ­டுத்­தி­ருந்தார். 

மகிந்த ராஜபக் ஷ மக்கள் முன்­ன­ணியின் உறுப்­பி­ன­ராக இன்­னமும் சேர்ந்­து­கொள்­ள­வில்லை. எனினும் அவரைக் கட்­சியில் இணைந்துக் கொள்ள இணங்க வைப்­பதில் வெற்­றி­பெற முடியும் என்­பதில் முழு­மை­யான நம்­பிக்கை இருக்­கி­றது என்றும் பசில் ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார். 

புதிய கட்­சி­யினால் சுதந்­திரக் கட்­சிக்கும் அதன் நீட்­சி­யாக தனது அர­சியல் அதி­கார இருப்­புக்கும் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்பை உணர்ந்து கொண்­ட­வ­ரா­கவே ஜனா­தி­பதி சிறி­சேன தனது அணு­கு­மு­றை­களை வகுக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. 

அண்­மையில் முன்னாள் ஜனா­தி­பதி ராஜபக் ஷவுடன் சீனா­வுக்கு விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருந்த பேரா­சி­ரியர் பீரிஸ் அங்கு மக்கள் முன்­ன­ணியின் முதன் முத­லான வெளி­நாட்டுக் கிளையை இலங்­கை­யர்கள் மத்­தியில் திறந்து வைத்­த­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன. அந்த கிளை திறக்­கப்­பட்ட நிகழ்வில் ராஜ­பக் ஷ பங்­கேற்­றாரா இல்­லையா என்­பது பற்றி தகவல் எதுவும் இல்லை. 

தற்­போ­தைய நிலையில் புதிய கட்­சியில் இருக்கக் கூடிய பிர­பல்­ய­மான அர­சி­யல்­வா­திகள் என்றால் அதன் தலைவர் என்று சொல்­லப்­ப­டு­கின்ற பேரா­சி­ரியர் பீரிஸும் பசில் ராஜபக் ஷவும் தான். கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் எவரும் இது­வ­ரையில் மக்கள் முன்­ன­ணியில் வந்து இணைந்து கொள்­ள­வில்லை. புதிய கட்­சியில் அவர்கள் இணைந்து கொள்­வார்­க­ளோ­யானால், பாரா­ளு­மன்ற ஆச­னங்­களை இழக்க வேண்­டி­யி­ருக்கும். ஆனால், அவ்­வாறு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருப்­ப­வர்கள் இப்­போ­தைக்கு புதிய கட்­சியில் இணைந்து கொள்­வார்கள் என்று எதிர்­பார்ப்­ப­தற்­கில்லை.  அதை எந்த ராஜபக் ஷவும் எதிர்­பார்க்­க­வு­மில்லை.

அடுத்த வருடம் நடை­பெ­ற­வி­ருக்கும் உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களில் சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றங்­கு­வ­தற்கு ராஜ பக் ஷ விசு­வா­சி­க­ளுக்கு வாய்ப்பு மறுக்­கப்­படும் என்­பது நிச்­சயம். அத்­த­கைய சூழ்­நி­லையில் அந்த விசு­வா­சி­க­ளுக்கு தேர்­தலில் தனி­யாகக் களம் இறங்­கு­வ­தற்கு வாய்ப்பைக் கொடுப்­பதே புதிய கட்சி அமைக்­கப்­பட்­டதன் பின்­ன­ணியில் இருக்­கக்­கூ­டிய உட­னடி வியூ­க­மாகும். மேலும் அக்­கட்­சியில் இப்­போது அதி­க­மாக இணைந்து கொள்­ப­வர்கள் உள்­ளூ­ராட்சி சபை­களின் முன்னாள் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி உறுப்­பி­னர்­களே.

கடந்த வருட முற்­ப­கு­தியில் ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற்ற பிறகு சிறி­சே­ன­வினால் சுதந்­திரக் கட்­சியின் தலை­மைத்­து­வத்தை தன் வச­மாக்கிக் கொள்ள முடிந்த போதிலும், கட்சி இன்­னமும் முழு­மை­யாக அவரின் கட்­டுப்­பாட்­டுக்குள் வர­வில்லை. ஜனா­தி­ப­தி­யாக ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் இருக்­கின்ற போதிலும் கூட அவரால் முன்னாள் ஜனா­தி­ப­தியின் விசு­வா­சிகள் கட்­சிக்குள் தனக்குத் தோற்­று­விக்­கின்ற சவால்­களைச் சமா­ளிக்க முடி­ய­வில்லை என்­பது உண்­மையே.

சுதந்­தி­ரக்­கட்­சியின் அடி­மட்டத் தொண்­டர்கள், ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் ராஜபக் ஷவுக்கு பெரு­ம­ளவு ஆத­ரவு இன்­னமும் தொட­ரவே செய்­கி­றது. இந்த ஆத­ர­வையே பிர­தான தள­மாகக் கொண்டு புதிய கட்சி செயற்­ப­டு­கி­றது. உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை ஒரு வரு­டத்­துக்கும் அதி­க­மான கால­மாக ஒத்­தி­வைத்துக் கொண்டு போவ­தற்கு வட்­டார எல்­லைகள் மீள் நிர்­ணயம் உட்­பட சில நடை­முறை சார்ந்த கார­ணங்­களை அர­சாங்கம் வெளியில் கூறிக்­கொண்­டி­ருக்­கின்ற போதிலும், அதன் பின்­ன­ணியில் இருக்­கக்­கூ­டிய அர­சி­யல்­கா­ர­ணங்­கள்­ஒன்றும் இர­க­சி­ய­மா­ன­வை­யல்ல.

தற்­போ­தைய சூழ் நிலையில் உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் நடத்­தப்­ப­டு­மானால் அதில் ராஜபக்   ஷஷ வி­சு­வா­சி­கள்­ பு­திய கட்­சியின் வேட்­பா­ளர்­க­ளா­க­போட்­டி­யிடும் பட்­சத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய பிர­தா­ன­மான மும்­முனைப் போட்­டியில்( ஐக்­கிய தேசியக் கட்சி – ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி– ஸ்ரீலங்கா மக்கள் முன்­னணி) சுதந்­தி­ரக்­கட்­சிக்கு கணி­ச­மான பின்­ன­டைவு ஏற்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் இருக்­கின்­றன. அத்­த­கைய பின்­ன­டைவு சுதந்­தி­ரக்­கட்­சிக்குள் ஜனா­தி­பதி சிறி­சே­னவின் தலை­மைத்­து­வத்­துக்கு பல­வீ­னத்தை ஏற்­ப­டுத்தும் என்­பதில் சந்­தே­க­மில்லை. அவ்­வா­றான சூழ்­நிலை ஏற்­ப­டு­வதைத் தவிர்க்கக் கூடி­ய­தான அணு­கு­மு­றையை வகுக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்தில் ஜனா­தி­பதி இருக்­கின்றார்.

இதே­வேளை, இது­வ­ரையில் சுதந்­தி­ரக்­கட்­சியை தனது முழு­மை­யான கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்டு வர முடி­யா­த­வ­ரா­க­இ­ருக்­கும் ­ஜ­னா­தி­ப­தியை தேர்தல் ஒன்றின் மூல­மாக பல­வீ­ன­மான கட்­சித்­த­லை­வ­ராகக் காண்­பிப்­ப­தற்­கான வாய்ப்­பொன்­றுக்­கா­கவே முன்னாள் ஜனா­தி­பதி காத்­துக்­கொண்­டி­ருக்­கின்றார். புதிய கட்­சி­யுடன் தன்னை முறைப்­ப­டி­யாக அடை­யாளம் காட்­டிக்­கொள்­வதில் மகிந்த ராஜபக் ஷவுக்கு எந்த அவ­ச­ரமும் இல்லை.

ஆனால், அதன் பின்­ன­ணியில் தானே இருக்­கின்­றார்­என்­பதை தென்­னி­லங்­கைக்கு குறிப்­பாக சுதந்­தி­ரக்­கட்சி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு உணர்த்­து­வதில் அவர் எந்­த­வி­த­மான தயக்­கத்­தையும் காட்­டு­வ­தாக இல்லை. அடிப்­ப­டையில் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தந்­தி­ரோ­பாயம் சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மைத்­து­வத்தை மீண்டும் கைப்­பற்­று­வ­தே­யாகும். தனக்கு சிங்­கள மக்கள் மத்­தியில் இருக்­கக்­ கூ­டிய ஆத­ரவு குறித்து அவர் மிகை­யான நம்­பிக்­கையைக் கொண்­டி­ருக்­கின்றார்.

தனது ஆசீர்­வா­தத்­து­ட­னான ஒரு கட்சி ஜனா­தி­பதி சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­தி­ரக்­கட்­சிக்கு பெரிய சவா­லாக அமை­வதை உறு­திப்­ப­டுத்­தினால் தன்­னையே மீண்டும் கட்­சியின் தலை­வ­ராக்­கு­மாறு வலி­யு­றுத்­து­வ­தற்கு உட்­கட்­சிக்­கி­ளர்ச்­சி­யொன்றை ஏற்­ப­டுத்த முடியும் என்­பதே அவரின் நம்­பிக்­கை­யாக இருக்­கின்­றது என்று நம்பலாம்

ஜனா­தி­பதி உண்­மையில் ஒரு திரி­சங்கு நிலையில் இருக்கின்றார். ஐக்கிய தேசியக்கட்சியுடன் சுதந்திரக்கட்சி சேர்ந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்திருக்கின்றபோதிலும்,  தேர்தல் அரசியல் என்று வரும்போது ஆட்சிப்பங்காளிகள் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்ள வேண்டியதொரு நிலைமை இருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதிக்கு விசுவாசமான சக்திகளுக்கு எதிராக மாத்திரமல்ல, தன்னுடன் சேர்ந்து ஆட்சி செய்துகொண்டிருக்கும் கட்சிக்கு எதிராகவும் வியூகத்தை வகுக்கவேண்டியவராக ஜனாதிபதி சிறிசேன இருக்கிறார்.

பிரதமர் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை சுதந்திரக் கட்சிக்குள் வளருகின்ற நெருக்கடி தனது கட்சியின் எதிர்காலத் தேர்தல் வாய்ப்புக்களைப் பிரகாசமாக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஆனால் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதனால் அதுவும் குறிப்பாக மக்கள் மத்தியில் பெரும் விரக்தியை ஏற்படுத்தக்கூடிய பல நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருக்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியும் செல்வாக்கை இழந்துகொண்டே போக வேண்டியிருக்கும்.

சிறுபான்மையினங்கள் மத்தியில் கொண்டிருந்த ஆதரவை எதிர்காலத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஜனாதிபதி சிறிசேனவோ மீண்டும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு நிலைவரங்கள் அவர்களின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. ஒட்டு மொத்தத்தில் நோக்கும்போது துணிச்சலுடனும் தூர நோக்குடனும் பயன்படுத்தியிருக்க வேண்டிய வாய்ப்புக்களை கடந்த இரு வருடங்களிலும் ஜனாதிபதியும் பிரதமரும் அவர்களின் தடுமாற்றமான அணுகுமுறைகளின் விளைவாக தவறவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இது இயல்பாகவே ராஜபக் ஷாக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் ஆட்சியதிகாரத்தில் இல்லாத போதிலும் இன்னொரு அதிகார மையம் போன்றே தங்களைக் காண்பித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது.