ஜூனியர் எம்ஜிஆரின் 'இரும்பன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Nanthini

09 Jan, 2023 | 02:01 PM
image

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பேரன் என்று அழைக்கப்படும் ஜூனியர் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்திருக்கும் 'இரும்பன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கான விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

'பச்சை என்கிற காத்து', 'மெர்லின்', 'எட்டுத்திக்கும் பற' ஆகிய படங்களின்  இயக்குநர் கீராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'இரும்பன்'. இதில் ஜூனியர் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, சென்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

லெனின் பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். 

கடலும், கடல் சார்ந்த பின்னணியிலும் வர்க்க பேத காதலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை லெமூரியா மூவிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தமிழ் பாலா மற்றும் ஆர். வினோத்குமார் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இயக்குநர் இப்படத்தை பற்றி பேசுகையில், 

''தேர்தலில் வாக்குரிமை இல்லாத நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கும், தமிழகத்தில் வாழும் வட இந்திய ஜெயின் சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் ஏற்படும் நட்பு காதலாக மாறுகிறது. ஆனால், நாயகி தான் துறவறம் பூண்டு சாமியாரிணியாக விரும்புவதாக தெரிவிக்கிறார். 

அவர் மீதான அதீத அன்பின் காரணமாகவும் தனக்கு கிடைக்க மாட்டாளோ என்ற பதற்றத்தின் காரணமாகவும் அவளை கடத்தி, நடுக்கடலுக்கு அழைத்துச் செல்கிறான், நாயகன். அதன் பிறகு அங்கு நடைபெறும் சம்பவங்கள் தான் படத்தின் கதை'' என்றார்.

ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட நடிகர் ஜூனியர் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்திருப்பதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right