சவால்கள் நிறைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு

Published By: Nanthini

09 Jan, 2023 | 10:41 AM
image

(மீரா ஸ்ரீனிவாசன்)

ரு தசாப்தங்களாக இயங்கிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதில் பெரும்பாலான காலப்பகுதியில் நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு தென்னிலங்கை சிங்கள தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறது. 

அத்தகைய பேச்சுவார்த்தைகளின் மூலமாக தீர்வொன்றை கண்டுவிட முடியும் என்ற கூட்டமைப்பின் நம்பிக்கையுணர்வை போட்டி தமிழ்க்கட்சிகளும், புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் இருக்கக்கூடிய விமர்சகர்களும், தவறான மதிப்பீட்டின் அடிப்படையிலானதும் அப்பாவித்தனமானதும் என்று நோக்குகிறார்கள். 

அவர்களிடம் இருந்துவரும் கண்டனங்களுக்கும்  தென்னிலங்கை தலைவர்களின் அணுகுமுறைகளின் காரணமாக ஏற்படுகின்ற ஏமாற்றத்துக்கும் மத்தியில் கூட்டமைப்பு அதற்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்துவதில் நாட்டம் காட்டி வந்திருக்கிறது. 

கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனே பெருமளவு நம்பிக்கையை வெளிக்காட்டுகிறார். 'ஐக்கியப்பட்ட, பிளவுபடாத, பிரிக்க முடியாத' இலங்கையின் கட்டமைப்புக்குள் தீர்வொன்றை காண்பதில் அவர் உறுதிகொண்டவராக இருக்கிறார்.

"நாம் நம்பிக்கையை இழந்துவிட முடியாது. நாம் முயற்சிகளை கைவிட முடியாது" என்று 2018ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளில் கூட்டமைப்பு இணைந்துகொண்டபோது சம்பந்தன் 'த இந்து'வுக்கு கூறினார். ஆனால், அந்த செயன்முறைகள் நிறைவுறவில்லை.

கூட்டமைப்பு மீண்டும் இப்போது ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளில் இறங்கியிருக்கிறது. நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இனப்பிரச்சினைக்கு இலங்கை அதன் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2023 பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக தீர்வு காண்பதற்கு ஒன்றாக முன்வருமாறு பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகளுக்கு 2022 நவம்பரில் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். 

கடந்த மாதத்திலும் இந்த மாதத்திலும் இதுவரையில் ஜனாதிபதியுடன் மூன்று தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்திய கூட்டமைப்பு அதன் அதிருப்தியை வெளிப்படுத்தாமல் இருக்கவில்லை. 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தினாலும் இராணுவத்தினாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் நிலம், கொடுமையான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வருடக்கணக்காக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள், காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விவகாரங்கள் தொடர்பில் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட அவசரமான மூன்று கோரிக்கைகள் சம்பந்தமான விடயத்தில் விக்ரமசிங்க அரசாங்கம் இதுவரையில் எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஜனவரி 10 நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்கும் அடுத்த சுற்றுப்  பேச்சுவார்த்தையில் அரசியல் தீர்வொன்றின் கட்டமைப்பு குறித்து ஆராயப்படவிருக்கின்ற அதேவேளை, தமிழர்களின் உடனடி அக்கறைக்குரிய விடயங்களில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பது குறித்து கூட்டமைப்பு மறுபரிசீலனை செய்யவேண்டிவரும் என்று அதன் பேச்சாளரான யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

225 ஆசனங்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் கூட்டமைப்புக்கு பத்து  உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பிரதான அங்கத்துவக் கட்சியாக தமிழரசு கட்சியையும் ஆயுதமேந்திய தீவிரவாத பின்னணியைக் கொண்ட தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகியவற்றை ஏனைய அங்கத்துவக் கட்சிகளாகவும் கொண்டதாக கூட்டமைப்பு இப்போது விளங்குகிறது.

தமிழ் தேசியவாதிகளை ஐக்கியப்படுத்தும் ஒரு முயற்சியாக 2001ஆம் ஆண்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைக்கப்பட்டது. தமிழரசு கட்சியின் கூடுதல் செல்வாக்கின் கீழிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் செயற்பாட்டு இணக்கப்பாடொன்றை கண்டன.

விடுதலைப்புலிகள் கூட்டமைப்பை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்ற போதிலும், அவர்களின் வழிகாட்டலில் தமிழ் தேசியவாத இலட்சியத்தின் பாராளுமன்ற அல்லது தேர்தல் அரசியல் பிரிவாக கூட்டமைப்பு இயங்கும் என்பதே வெளியில் சொல்லப்படாத புரிந்துணர்வாக இருந்தது. ஏனைய தீவிரவாத குழுக்களும் எதிர்ப்பாளர்களும் அழிக்கப்பட்ட பிறகு அந்த நேரத்தில் தமிழ் மக்களின் 'ஏக பிரதிநிதிகளாக' விடுதலைப்புலிகள் தங்களை நிலைநிறுத்திக்கொண்டார்கள்.

புலி அடையாளம்

கூட்டமைப்பினர் பிரிவினைவாத விடுதலைப்புலிகளின் அரசியல் பதிலாட்களாகவே தென்னிலங்கையில் நீண்டகாலமாக நோக்கப்பட்டனர். 2009 போர் முடிவுக்கு வந்த பிறகு பிரிவினைவாதத்தை கூட்டமைப்பு திட்டவட்டமாக கைவிட்டபோதிலும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் உட்பட சிங்கள அரசியல் சமுதாயத்தில் உள்ள கடும்போக்குவாதிகள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புலி முத்திரை குத்தி தொடர்ந்து அவதூறு செய்துகொண்டேயிருந்தனர்.

அரசின் தொடர்ச்சியான பாரபட்சம் மற்றும் இனவாதக் கொள்கைகளை அனுபவிக்கின்ற தமிழர்கள் மத்தியில் பெரும்பாலானவர்களிடையே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தொடருகின்ற நிலையில், அந்த இயக்கத்திடம் இருந்து முற்றுமுழுதாக துண்டித்துக்கொள்வதென்பது கூட்டமைப்பை பொறுத்தவரை இயலாத ஒன்றாகவே இருந்தது. 

கூட்டமைப்பில் உள்ள சிலர் தங்களை விடுதலைப்புலிகளிடம் இருந்தும் அவர்களின் கொள்கைகளில் இருந்தும் தூர விலக்கிக்கொள்கின்ற அதேவேளை, மற்றையவர்கள் தேர்தல்களுக்கு முன்னதாக பிரசாரங்களின்போது புலிகளுக்கு ஆதரவாக பேசுவது வழக்கம். ஆனால், பரந்தளவில் நோக்குகையில், போரின் முடிவுக்குப் பின்னரான வருடங்களில் புறக்கணிப்பை கைவிட்டு பேச்சுவார்த்தை அரசியலை முன்னெடுத்த கூட்டமைப்பு, கடந்த 21 வருடங்களில் அதன் அங்கத்துவ கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும், வடக்கு, கிழக்கில் பரந்த ஆதரவுடன் தமிழ் தேசியவாத அரசியல் பரப்பில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.

கூட்டமைப்பு ஒரு பிராந்தியக் கட்சியாக இருக்கின்ற போதிலும், குறிப்பாக, தென்னிலங்கை கட்சிகளிடையே நெருக்கமான போட்டி என்று வருகின்றபோது தேசிய தேர்தல்களில் கணிசமான செல்வாக்கை கொண்டிருக்கிறது. 

ஒவ்வொரு தேசிய தேர்தலிலும் 'ஒரு ராஜபக்ஷவைத் தவிர வேறு எவரும்' என்ற அணுகுமுறையை கடைப்பிடித்திருக்கும் கூட்டமைப்பு 2010ஆம் ஆண்டில் எதிரணியின் பொதுவேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவையும் 2015ஆம் ஆண்டில் மைத்திரபால சிறிசேனவையும் 2019ஆம் ஆண்டில் சஜித் பிரேமதாஸவையும் ஆதரித்தது.

சிறிசேன தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் ஆதரவுடன் தேர்தலில் வென்ற போதிலும், அவரது அரசாங்கம் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பெரிதாக நிறைவேற்றவில்லை. இதனால் கூட்டமைப்புக்கு அரசியல் ரீதியில்  பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 

2020 பொதுத் தேர்தலில் அது ஆறு ஆசனங்களை இழந்தது. இந்த தேர்தல் இழப்புக்கு மத்தியிலும் சிறுபான்மைச் சமூகம் ஒன்றைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தனியொரு பெரிய குழுவாக கூட்டமைப்பே இன்னமும் விளங்குகிறது. 

தமிழர்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துகின்ற நம்பிக்கைக்குரிய குரலாக கூட்டமைப்பையே மேற்குலக அரசுகளும் இந்தியாவும் நோக்குகின்றன. உள்நாட்டு அரசியல் பரப்பில் போர்க்காலக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதிலும் விட அரசியலமைப்பு அடிப்படையிலான இணக்கத் தீர்வொன்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூட்டமைப்பு மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான தீர்மானங்களுக்கு ஆதரவு திரட்டுவதில் கூட்டமைப்பும் அதன் வெளிநாடுகளில் உள்ள ஆதரவாளர்களும் தீவிரமாக செயற்பட்டே வந்திருக்கிறார்கள்.

பல வருடகால எதிரணி அரசியலை தொடர்ந்து 2013 வட மாகாண சபை தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதன் மூலம் முதல் தடவையாக கூட்டமைப்பு ஆட்சி செய்வதற்கு அரிதான ஒரு வாய்ப்பை பெற்றது. ஆனால், கூட்டமைப்பும் அதன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் ஐந்து வருட பதவிக்காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அந்த மாகாணத்தின் நன்மைக்காக பயனுறுதியுடைய கொள்கை முன்னெடுப்புக்களையோ அல்லது பொருளாதார மீட்சித் திட்டங்களையோ செய்யவில்லை.

அதேவேளை, மாகாண சபை முறைமையை உறுதியாக ஆதரிக்கும் கூட்டமைப்பு நீண்ட காலமாக தாமதிக்கப்படும் மாகாண சபை தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. 

1987 இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் அரசியல் அதிகாரத்தை பரவலாக்குவதற்கான ஒரு ஏற்பாடாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாகாண சபைகளினதும் பதவிக்காலம் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் முடிவடைந்துவிட்டது.

சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து இலங்கை அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் அர்த்தமுடைய அதிகாரப் பரவலாக்கத்துக்கு போதுமான ஒரு கட்டமைப்பு அல்ல என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருக்கின்றது. ஆனால், அதை பயனுடைய 'ஆரம்பப்புள்ளியாக' கருதுகிறது. போட்டிக் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

நிகழ்காலமும் எதிர்காலமும்

தமிழ் தேசியவாத அரசியல் சிதைவுறுவதை தடுப்பதற்காக அன்று அமைக்கப்பட்ட கூட்டமைப்பு இன்றுள்ளதைப் போன்று முன்னர் ஒருபோதும் சிதைவடைந்ததில்லை. அதன் அங்கத்துவக் கட்சிகளிடம் பொதுவான நோக்கம் இல்லை. அவை ஒரு குரலில் பேசுவதாகவும் இல்லை. கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்துக்காக பகிரங்கமாக வாக்குவாதங்களில் ஈடுபடவும் செய்கிறார்கள். கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுகின்றன.

முரண்பாடுகளுக்கு மத்தியிலும் அங்கத்துவக் கட்சிகளை சம்பந்தனே இதுவரையில்  ஒன்றுபடுத்தி வைத்திருக்கிறார். அவருக்குப் பிறகு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே தலைமைத்துவத்துக்கு வரக்கூடியவர் என்று பரவலாக நோக்கப்படுகின்ற போதிலும், கூட்டமைப்புக்குள் இருக்கும் சிலர் எதிர்க்கிறார்கள்.

கூட்டமைப்பின் தவறுகள் காரணமாக ராஜபக்ஷக்களுடன் அணிசேர்ந்து நிற்கும் தமிழ் அரசியல்வாதிகள் பயனடைந்ததை 2020 தேர்தலில் காணக்கூடியதாக இருந்தது. 

தற்போது பாராளுமன்றத்தில் இரு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அதன் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்குடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

அரசியல் தீர்வினை காண்பதற்கான அதன் முயற்சியை தொடர்ந்துகொண்டிருக்கின்ற அதேவேளை, கூட்டமைப்பு அதன் கட்டமைப்புக்களை ஜனநாயகப்படுத்துவதற்கோ, ஏனைய தமிழ் பேசும் சிறுபான்மை இனத்தவர்களின் பிரச்சினைகள் உட்பட  வடக்கு, கிழக்கின் பொருளாதார அபிவிருத்திக்கான தந்திரோபாயம் எதையும் வகுப்பதற்கோ அல்லது பெண்களுக்கு கணிசமான வாய்ப்புக்களை கொடுப்பதற்கோ செயற்பாடு எதையும் அக்கறையுடன் முன்னெடுப்பதாக சான்று எதையும் காணவில்லை. கூட்டமைப்பின் எதிர்காலம் நிச்சயமற்றது. ஆனால், அதற்கான மாற்று ஒன்றை தமிழ் அரசியல் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.

(த இந்து)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலம்பெயர்வில் புதுத்திறன் வளர்த்து உள்நாட்டில் தொழில்...

2023-09-29 18:57:24
news-image

இலங்கை சுற்றுலாத்துறையின் முதுகெலும்பான தேசிய விமான...

2023-09-29 17:50:38
news-image

பொருளாதார நெருக்கடி நூல் விற்பனையிலும் தாக்கம்...

2023-09-29 14:00:32
news-image

38 நிபந்தனைகளை மாத்திரம் நிறைவேற்றியுள்ள இலங்கை...

2023-09-27 14:40:25
news-image

ஒடுக்குமுறை நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு தெரிவு...

2023-09-27 13:42:35
news-image

நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுச் சட்டமூலம் “ஜனாதிபதியின்...

2023-09-27 11:41:14
news-image

சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள் ;...

2023-09-26 19:45:02
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுலா தினநிகழ்வுகள் 

2023-09-26 17:30:26
news-image

எதிர்கால இயற்கை பாதுகாப்பை சிதைக்கும் அபிவிருத்தி...

2023-09-26 15:00:53
news-image

இத்தாலியின் வெளியேற்றத்தால் தகர்ந்து போகும் சீனாவின்...

2023-09-26 11:09:20
news-image

இணையத்தை வேகமெடுக்க வைக்கும் எலனின் திட்டத்திற்காக...

2023-09-25 21:57:42
news-image

நீதிக்கான மன்றாட்டமும்  வாயால் வடை சுடுதலும்

2023-09-25 12:30:48