12 ஆவது சென்னையில் திருவையாறு என்ற இசை நிகழ்ச்சி நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் தொடங்கியது. இதன் தொடக்கவிழாவில் நூற்றாண்டு காணும் மக்களின் அன்பிற்குரியவர்களான புரட்சி தலைவர் எம்ஜிஆர் மற்றும் இசை மேதை எம் எஸ் சுப்புலட்சுமி ஆகியோர்களின் மெழுகு சிலைகளை இயக்குநர் இமயம் பாரதிராஜா திறந்துவைத்தார். இதன் போது பேசிய அவர்,‘ திருவையாற்றில் நடைபெறும் கர்சாடக இசை நிகழ்ச்சியை இங்கு கொண்டு வந்திருப்பது பெருமைக்குரிய விடயம். நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் இசை மூலம் உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் எம் எஸ் சுப்புலட்சுமி. எம்ஜிஆர் ஒரு தேவதூதர்.அவர் ஒரு சகாப்தம். இன்னும் 100 ஆண்டுகள் சென்றாலும் இருவரும் இதே புகழுடன் இருப்பார்கள். அவர்களின் மெழுகு சிலை வைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது’ என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து நடைபெற்றநிகழ்வில் வயலின் இசை கலைஞர் எல் சுப்ரமணியத்திற்கு அவரின் இசை சேவையைப் பாராட்டி இசை ஆழ்வார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதையடுத்து அவரின் வயலினிசைக் கச்சேரி நடைபெற்றது. 

சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி நேற்றிலிருந்து தொடங்கி வரும் ஞாயிற்றுகிழமை வரை தொடர்ந்து நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணிக்குத் தொடங்கும் இசை நிகழ்ச்சிகள் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்