குழந்தை நட்சத்திரம், நடிகர், பின்னணி பாடகர், கதாசிரியர், திரைக்கதையாசிரியர், நடன இயக்குநர், பாடலாசிரியர், டப்பிங் கலைஞர் என பன்முகம் காட்டிய சிலம்பரசன் தற்போது இசையமைப்பாளராகவும் பணியாற்றவிருப்பதால் அஷ்டவதானியாக உயர்ந்திருக்கிறார்  சிம்பு என்கிற சிலம்பரசன்.

சந்தானம் கதையின் நாயகனாக நடித்து வரும் சக்கபோடுபோடு ராஜா படத்திற்காக இசையமைக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சிம்பு. இவர் ஏற்கனவே தனியாக இசை அல்பங்களை வெளியிட்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். முழு நீள படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டிருப்பது சந்தோஷத்தை அளிக்கிறது. அதிலும் தான் அறிமுகப்படுத்திய சந்தானம் படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமாவது வரவேற்புக்குரியதே. இந்த படத்தை சிம்புவின் நண்பரான நடிகர் விடிவி கணேஷ் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது நம்ம ஆளு படத்தின் மூலம் இவரது இளைய சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராகியிருக்கிறார். தற்போது அவருக்கு போட்டியாக இவர் உருவெடுப்பாரா? என்பது குறித்து தற்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தகவல் : சென்னை அலுவலகம்