-சுவஸ்திகா ராஜ்பிரகாஷ்
50, 60களில் மெல்லிசை மன்னர், 70, 80களில் இசைஞானி. அந்த வரிசையில் 90கள் தொடங்கி 2K கிட்ஸ் வரை அன்றும் இன்றும் என்றும் நாம் கேட்கும் டொப் பாடல்களுக்கு சொந்தக்காரர் நம் இசைப்புயல் தான்.
ஹொலிவுட் கலைஞர்களை பெருமைப்படுத்தும் உயர் விருதான ஒஸ்கர் விருதுகளை அசால்டாக வென்றெடுத்த தமிழக மண் போற்றும் இசைக்கலைஞன்.
எத்தனை விருதுகள்! எத்தனை மொழிகள்! எத்தனை படங்கள்! எத்தனை பாடல்கள்! எத்தனை பின்னணி குரல்கள்! எத்தனை இசைக்கருவிகள்! எண்ணிப் பார்க்கவே பூரித்துப்போகிறது.

4 வயதில் வாசிக்கத் தொடங்கிய அந்த பியானோ 4 தசாப்தங்களை கடந்தும் கூட ஒலித்துக்கொண்டிருக்கிறது என்றால் அவரின் இசைப்பயணமென்பது உண்மையில் புயல் போன்றது.
'சின்ன சின்ன ஆசை...' என்று 'ரோஜா' படத்தின் இசையில் தொடங்கி இன்று 'பொன்னி நதி பார்க்கணுமே...' என்ற 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் இசை வரை நதியாய் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது, இசைப்புயலின் இசைப்பயணம்.
'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று வானளவும் உயர்ந்த தம் புகழை இறைவனுக்கே அர்ப்பணிக்கும் அந்த சரித்திரப் புயலின் பெயர்தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
ரஹ்மானிய இசைக்கு அடிமையாகாமல் ஒருவரும் இருந்திருக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
உங்கள் வாழ்நாளில் ஒரு நாளேனும் இசைப்புயலின் பாடலை கேட்காமல் கடந்திருக்க முடியாது.

இசைக்கு உயிரும் உணர்ச்சியும் உள்ளதை மெல்லிசை மன்னரது இசையை தொடர்ந்து நமக்கு உணர்த்துகிறது, ரஹ்மானின் இசை.
வீணை, கிட்டார், பியானோ, ஆர்மோனியம் என வீட்டை சுற்றி பார்க்குமிடமெல்லாம் இசைக்கருவிகள் இசைக்கும் சத்தம் கேட்குமொரு சூழலிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தார்.
ஆம். 1967 ஜனவரி 6 அன்று இசையமைப்பாளர் ஆர்.கே. சேகரின் வீட்டில் பிறந்த இசைத்தென்றலின் பெயர்தான் திலீப் குமார். அந்த தென்றல் தான் இன்று ஏ.ஆர்.ரஹ்மான் எனும் இசைப்புயலாய் உருவெடுத்துள்ளது.
சிறு வயதிலேயே புத்தகத்தை படிப்பதை விட இசையை படிப்பதே ரஹ்மானுக்கு பிடிக்கும். இசையின் மீது ரஹ்மான் கொண்டிருந்த பிடிப்பு அசைக்க முடியாத ஆணிவேராய் மனதில் நிலைகொண்டிருந்தது.
தன்ராஜ் என்ற இசை வல்லுநரிடம் ரஹ்மான் இசை கற்க சென்றார். மகனின் இசையார்வத்தை கண்டு மகிழ்ச்சியுற்ற தந்தை அவரது நெருங்கிய நண்பரான மலையாள இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனிடம் அழைத்துச் சென்று இசை கற்க வைத்தார்.
அவரிடமே கீ போர்ட், கிடார் போன்ற கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார், ரஹ்மான்.
புதிதாக வரும் மேல்நாட்டு இசைக்கருவிகளின் ஒலி ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஆகவே, புதிய கருவிகளையெல்லாம் வாங்கி இசைப்பது ரஹ்மானின் தந்தைக்கு வாடிக்கையாகிவிட்டது. அதை ரஹ்மானும் வேடிக்கையாக நித்தம் பார்த்த வண்ணமிருப்பார். தந்தை வாசிக்கும் மின்னனு கருவிகளை அவரின் ஒத்துழைப்போடு ரஹ்மானும் எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிடுவார்.
எட்டு வயதிலேயே தனியாக இசையமைக்கும் ரஹ்மானின் திறமை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது என்றால், அதைக் கொண்டு அவர் இன்று இசைப்புயலாக இருப்பதன் பின்னணியையும் உழைப்பையும் திறமையையும் எம்மால் உணரமுடியும்.
ரஹ்மானின் 9 வயதில் அவரது தந்தை நிரந்தரமாக கண்ணயர்ந்தார். உடன் பிறந்த மூன்று சகோதரிகளுக்கு மத்தியில் வீட்டுக்கு ஒரே மகன் என்ற ஆதரவு இருந்தாலும், தந்தையின் இழப்பின் சுமை ரஹ்மானின் தலையில் இறங்கியது.
குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளுக்காக தம் வீட்டிலிருந்த இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு காசாக்கினார்.
சில இசைக்குழுக்கள் இவரை கிடார், பியானோ போன்ற கருவிகளை வாசிக்க அழைத்தன. என்ன நடந்தாலும், இதுபோன்ற சிறு வாய்ப்புகளை அவர் தவறவிடவே இல்லை. யார் இசைக்கருவிகளை இசைக்க அழைத்தாலும், உடனே அவ்விடத்துக்கு சென்று வாசித்து பணமும் பெற்றுவருவார்.
உண்ணும் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களிலெல்லாம் இசை அலாரம் அடித்துக்கொண்டேயிருக்கும், ரஹ்மானின் மனதுக்குள்.
ஓய்வு நேரமின்றி வீட்டில் இசைப்பயிற்சியை பெற்று வந்தார், ரஹ்மான். அந்த சமயத்திலேயே எட்வின் மாஸ்டரிடம் கிடார், கீ போர்ட் வாசிக்க கற்றுக்கொண்டார்.
11 வயதில் இசைஞானி இளையராஜாவின் குழுவில் கீ போர்ட் வாசித்து வந்தார். 12 வயதில் தமிழ், மலையாளம், தெலுங்கு இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றி குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.
புத்தகத்தை படிக்கும் வயதில் ரஹ்மான் இசையெனும் புத்தகத்தையே ஆர்வமாய் படித்தார். இசையின் மீது அவர் கொண்ட ஆர்வம் லண்டன் டிரினிட்டி கல்லூரியில் கிடார் இசைக்கருவிப் பயிற்சியை நான்காம் தரம் வரை கற்று, தன் இசைத்திறமையை உயர்த்திக்கொண்டார்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி ரமேஷ் நாயுடு, ராஜ்கோட்டி, குன்னக்குடி வைத்தியநாதன், இளையராஜா என எல்லோருடைய இசைக்குழுக்களிலும் வாசித்துள்ளார், ரஹ்மான்.
உள்நாட்டை கடந்து அயல்நாட்டு, மேல்நாட்டு பாணி இசைக்குழுக்களிலும் ரஹ்மான் மெட்டு போட்டார்.
மெஜிக், நெமிசிஸ் போன்ற ரோக் இசைக்குழுக்களிலும், டொப் இசைக்குழுக்களிலும் தன் இசைத் திறமையை வெளிப்படுத்தினார்.
இவரோடு சேர்ந்தே ட்ரம்ஸ் சிவமணி, ரஞ்சித் பாரோட் போன்றவர்களும் இசைக்கருவிகளை வாசித்தனர். இதற்கிடையில் பிர்ஷேக் அப்துல் காதர் ஜீலானி (பிர்காதர்) என்பவர் தன் பிரார்த்தனையினாலும் அருளாசியினாலும் ரஹ்மானின் குடும்பத்துக்கு பல நன்மைகள் செய்துள்ளார். அவரை பின்பற்ற முடிவு செய்ததன் விளைவாகவே திலீப் குமாராக இருந்த ரஹ்மான், அல்லா ரக்கா ரஹ்மான் என்ற பெயரில் இஸ்லாமிய மதத்தை தழுவினார்.

இசைக்கலைஞர்களுக்கு பின்னணியில் இசைக் கருவிகளை வாசித்துக்கொண்டிருந்த ரஹ்மானுக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. 1987இல் ஆல்வின் கைக்கடிகார விளம்பரப் படத்தில் அவர் தயாரித்த ஜிங்கில்ஸ் இசை பலரையும் கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து பல விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தார்.
1992ஆம் ஆண்டு ‘பஞ்சதன் ரெக்கார்ட் இன்’ என்ற ஒலிப்பதிவு கூடத்தை தொடங்கினார். புதிய ஒலிகளைத் தொகுத்து வழங்கும் சோனிக் லைப்ரரியை உருவாக்கினார். பின்னர் சச்சின் டெண்டுல்கர் நடித்த பூஸ்ட் விளம்பரம், ஏசியன் பெயிண்ட்ஸ், எம்.ஆர்.எஃப் டயர்ஸ், டைட்டன், ஹீரோ பைக்ஸ் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களினது தயாரிப்புகளின் விளம்பரங்களுக்கு இசையமைத்தார்.
ஏசியன் பெயிண்ட்ஸ், லியோ கோஃபி போன்ற விளம்பரங்களுக்கு இசையமைத்தமைக்காக ரஹ்மானுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அந்த விருது விழாவில் இயக்குநர் மணிரத்னமும் கலந்துகொண்டார். அங்கு தான் ரஹ்மானுக்கும் மணிரத்னத்துக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இந்த அறிமுகம் தான் 'ரோஜா' மலர் துளிர்விட காரணமானது.
மணிரத்னத்தின் அழைப்பு தனக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு என்பதை உணர்ந்து புதிய புதிய ராகங்களை அமைத்து இரவு பகலாக உழைத்து 'ரோஜா' திரைப்படத்தின் பாடல்களை அமைத்தார்.
தன்னுடைய 25ஆவது வயதிலேயே திரைப்படத்துக்கு இசையமைக்கும் இந்த வாய்ப்பு ரஹ்மானுக்கு கிடைத்திருந்தாலும், கடந்த 20 வருடங்களில் அவர் இதற்காக உழைக்காத நாளேயில்லை என்று கூறவேண்டும்.
ஒரு வகையில் மணிரத்னம் கதைக்களத்துக்கு உயிர்கொடுத்தது ரஹ்மானின் இசையென்றாலும் மிகையாகாது. அந்த படம் வெளிவந்த ஓரிரு நாட்களிலேயே 'ரோஜா' பட கேசட்கள் லட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்தன. அந்த இசை ரஹ்மானின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது.

ரஹ்மானின் இசை தமிழகத்தை கடந்து இந்தியா முழுவதும் ஒலிக்க ஆரம்பித்தது. பல இயக்குநர்களை தன் பக்கம் ஈர்க்க வைத்தது.
'ரோஜா' திரைப்படத்தில் ரஹ்மான் அமைத்த இசை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுக்கொடுத்தது. முதல் திரைப்படமே ஹிட்டானதோடு, அதற்கு தேசிய விருதும் கிடைத்தமை, ரஹ்மான் மனம் விரும்பும் இசையமைப்பாளராய் மாற வழிவகுத்தது.
பாரம்பரிய இசை, ஹிந்துஸ்தானி இசை, மேல்நாட்டு ரொக், பொப் மற்றும் பலவிதமான இசைகள் ரஹ்மானின் விரல் போக்கிலேயே தென்றலோடு கலந்தது. மேற்கத்தேய இசையை தமிழ்ப் பாடல்களில் அறிமுகப்படுத்தி இசையோடு இளைஞர்களையும் ஆடவைத்தார்.
'ரோஜா' திரைப்படத்தில் ஆரம்பித்த மணிரத்னம் - ரஹ்மான் கூட்டணி இன்று 'பொன்னியின் செல்வன்' வரை ஹிட் அடித்துள்ளது.
'ரோஜா' திரைப்படத்தை தொடர்ந்து 'ஜென்டில் மேன்', 'கிழக்கு சீமையிலே', 'பம்பாய்', 'திருடா திருடா', 'முதல்வன்', 'இந்திரா', 'உயிரே', 'காதலர் தினம்' இப்படி தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என 100க்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்திய திரையுலகமே எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் ஒஸ்கர் விருதை இலகுவாக எட்டிப் பிடித்தார், ரஹ்மான்.
2008ஆம் ஆண்டு 'ஸ்லம்டாக் மில்லினர்' என்ற ஆங்கில திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக ரஹ்மானுக்கு இரு ஒஸ்கர் விருதுகள் கிடைத்தன. உலகமே கண்டு வியக்கும் ஒஸ்கர் விருது மேடையில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே..." என்று தன் தாய்மொழியான தமிழில் சொன்னது பூரிக்க வைக்கிறது.
ரஹ்மானின் இசையில் பாடி உயர்ந்த குரல்கள் அதிகம். ஹரிஹரன், சாகுல் அமீது, உன்னிமேனன், சுரேஷ் பம்மர், நித்தியஸ்ரீ, அனுபமா, கார்த்திக், ஷோபா சங்கர், உன்னிகிருஷ்ணன், சக்வீந்தர்சிங், சங்கர் மகாதேவன், சுஜாதா, ஹரிணி, உதித் நாராயணன், சாதனா சர்கம், கேர்லின் இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ பாடகர்கள் ரஹ்மானின் இசையில் மிதந்து வாழ்ந்தவர்கள். அவர்களின் குரலுக்கு அங்கீகாரம் கொடுத்து, அவர்களை உலகறியச் செய்தது ரஹ்மானின் இசையென்றால், மிகையாகாது.
பத்ம ஸ்ரீ, பத்மபூஷன், தேசிய விருதுகள், ஃபிலிம் பேர் விருதுகள், டாக்டர் பட்டம், தமிழக திரைப்பட விருதுகள் என இவர் பெற்ற விருதுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
50க்கும் மேற்பட்ட உயரிய விருதுகளையெல்லாம் தன்னகத்தே கொண்டிருந்தாலும், ரஹ்மானின் அடக்கமும் பணிவும் அமைதியும் இன்று வரை தளம்பல் அடையவில்லை.
ரசிகர்கள் கொண்டாடும் ஒஸ்கர் நாயகனை இந்திய மண்ணே மரியாதை செய்கிறது. உலகமே கொண்டாடும் இசைப்புயலை நாமும் கொண்டாடுவோம்!
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM