வவுனியா குருமன்காடு, காளிகோவில் வீதியில் கடந்த பல நாட்களாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 70 வயதுடைய வயோதிபத்தாய் நேற்று மாலை 5.30 மணியளவில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியா குருமன்காடு, காளிகோவில் வீதியிலுள்ள தனது வீட்டில் வசித்து வந்த 70 வயதுடைய பெண் வயோதிபரின் கணவன் கடந்த 7நாட்களுக்கு முன்னர் உறவினருடைய வீட்டிற்கு கொழும்பு சென்றுள்ளார். 

குறித்த வயோதிப தாய் கடந்த சில தினங்களாக அருகிலுள்ள கடையில் சாப்பாடு எடுத்துச்சாப்பிட்டு வந்துள்ளார்.  எனினும் நேற்று முன்தினமும், நேற்றும் குறித்த வயோதிபர் வெளியே செல்லாததால் சந்தேகம் ஏற்பட்ட பக்கத்து வீட்டு உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியடையடுத்து நேற்று மாலை 5.30 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் பெண்பொலிஸாரின் உதவியுடன் பூட்டியிருந்த வீட்டிற்குள் சென்றபோது குறித்த வயோதிப தாய் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில்  அவசர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.