இந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது இலங்கை

05 Jan, 2023 | 11:44 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிராக புனே விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (05) நடைபெற்ற 2ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 16 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் 1 - 1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.

தசுன் ஷானக்க குவித்த இலங்கைக்கான அதிவேக அரைச் சதம் மற்றும் சாதுரியமான பந்துவீச்சு,  குசல் மெண்டிஸின் அபார அரைச் சதம், டில்ஷான் மதுஷன்க, கசுன் ராஜித்த ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தன.
பெத்தும் நிஸ்ஸன்க, சரித் அசலன்க ஆகியோரும் துடுப்பாட்டத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்றது.
குசல் பெரேரா, அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆகிய இருவரும் அரைச் சதம் குவித்ததன் பலனாக இந்தியாவுக்கு எதிரான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கையை இலங்கை குவித்தது.

நாக்பூரில் 2009இல் நடைபெற்ற சர்வதேச இருபது 20 போட்டியில் 5 விக்கெட்களை இழந்து பெற்ற 215 ஓட்டங்களே இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

அத்துடன் அப் போட்டியில் 20 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த தசுன் ஷானக்க, இலங்கைக்கான அதிவேக சர்வதேச இருபது 20 அரைச் சதத்தைப் பெற்று சாதனை படைத்தார்.

மஹேல ஜயவர்தன 2007இல் கென்யாவுக்கு எதிராக ஜொஹானெஸ்பேர்கிலும் குமார் சங்கக்கார 2009இல் இந்தியாவுக்கு எதிராக நாக்பூரிலும் 21 பந்துகளில் பூர்த்தி செய்த அரைச் சதங்களே இதற்கு முன்னர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை சார்பாக பெறப்பட்ட அதிவேக அரைச் சதங்களாக இருந்தன.

இன்றைய இரண்டாவது போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 50 பந்துகளில் 80 ஓட்டங்களைக் குவித்து இலங்கைக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தனது 51ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் குசல் மெண்டிஸ் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 11ஆவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். 31 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 4 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் அடங்களாக 52 ஓட்டங்களைக் குவித்தார்.

அவரைத் தொடர்ந்து பானுக்க ராஜபக்ஷ (2), பெத்தும் நிஸ்ஸன்க (33), தனஞ்சய டி சில்வா (3) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

19 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸ்களுடன் 37 ஓட்டங்களைக் குவித்த சரித் அசலன்க அணிக்கு சற்று உற்சாகத்தைக் கொடுத்தார்.
ஆனால், அவரும் வனிந்து ஹசரங்கவும் (0) அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். (138 - 6 விக்.)

எனினும் அணித் தலைவர் தசுன் ஷானக்க அற்புதமாகத் துடுப்பெடுத்தாடி 22 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களை விளாசி அணியின் மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடக்க உதவினார்.
அவரும் சாமிக்க கருணாரட்னவும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 24 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். சாமிக்க கருணாரட்ன 11 ஓட்டங்களுடன் ஆட்மிழக்காதிருந்தார்.

இந்திய பந்துவீச்சில் உம்ரன் மாலிக் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 207 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா, 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.துடுப்பாட்டத்தில் அபார ஆற்றலை வெளிப்படுத்திய தசுன் ஷானக்க கடைசி ஓவரை மிகவும் சாதுரியமாக வீசி 4 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றி இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

இஷான் கிஷான் (2), ஷுப்மான் கில் (5), ராகுல் த்ரிபதி (5), ஹார்திக் பாண்டியா (12), தீப்பக் ஹூடா (9) ஆகிய ஐவரும் ஆட்டமிழக்க 10ஆவது ஓவரில் இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 57 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், அதன் பின்னர் சூரியகுமார் யாதவ், அக்சார் பட்டேல் ஆகிய இருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 40 பந்துகளில் 91 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு தெம்பூட்டினர்.

சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். (148 - 6 விக்.)
அதனைத் தொடர்ந்து அக்சார் பட்டேல், ஷிவம் மாவி ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது அக்சார் பட்டேல் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இந்தியாவை அண்மித்து வந்த வெற்றி வெகுதூரத்துக்கு சென்றுவிட்டது.

அக்சார் பட்டேல் 31 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 65 ஓட்டங்களைப் பெற்றார்.

ஷிவம் மாவியும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 26 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார்.

இலங்கை பந்துவீச்சில் தசுன் ஷானக்கவைவிட கசுன் ராஜித்த 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டில்ஷான் மதுஷன்க 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10
news-image

நியூட்டனின் சகலதுறை ஆட்டத்தால் 2ஆம் அடுக்கு...

2025-03-14 14:08:12
news-image

அவிஷ்க, கவின், அசலன்க ஆகியோரின் அபார...

2025-03-13 19:45:02