புதிய ஆண்டு மலரும் போது நமக்கு ஒரு வயது அதிகமாகும். அந்த ஆண்டு முழுவதும் நமது வாழ்வியல் நெறிமுறைகளை நவகிரகங்கள் வரையறை செய்து வழி நடத்துகின்றன. எனவே நாம் எவ்வளவு திட்டம் போட்டு செயற்பட்டாலும் எம்மையும் மீறி எமது செயற்பாடுகளில் நன்மை, தீமை என பலன்கள் அமைகின்றன.
இவற்றை அனுசரித்தே நாமும் செயற்படும் கட்டாயத்திற்குள் வந்து விடுகின்றோம். 2023ஆம் ஆண்டில் 29.03.2023 அன்று சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி பெறுகின்றார். அதேபோல் 22.04.2023 குருபகவான் மீன ராசியில் இருந்து மேடராசிக்கு சஞ்சரிக்கின்றார். 09.10.2023 சாயக்கிரகங்கள் ராகு, கேது பெயர்ச்சி மேடராசியில் இருந்து மீனராசிக்கு ராகுவும் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு கேதுவும் சஞ்சாரம் செய்கின்றனர். இந்த நான்கு கிரகங்களின் பெயர்ச்சியானது பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் அமைவன. இதன்மூலம் 2023ஆம் ஆண்டில் பன்னிரு ராசிகளின் பலாபலன்களும் மாறுபடும். அவற்றை தெரிந்து அதற்கேற்ப நமது நடைமுறை செயல்பாடுகளை அமைத்து அனுகூலங்களை பெற்றுக் கொள்வோம். அனைவருக்கும் 2023ஆம் ஆண்டு சிறப்பானவற்றை கொடுக்க இறைவன் அருள் பொழியட்டும்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்)
எதையும் முகத்திற்கு நேரே பேசிவிடும் குண இயல்புதனை கொண்ட மேஷராசி அன்பர்களே! உங்களின் ராசிக்கு 2023ஆம் ஆண்டு எப்படி அமையும்? உங்களின் ராசிக்கு 29.03.2023 இலிருந்து சனிபகவான இலாபஸ்தானம் எனப்படும் 11ஆம் இடம் அமைகின்றார். இதன் மூலமாக தொழில்மேன்மை, பணவரவு, எதிர்பாராத நன்மைகள் என்பன அமையும். 22.04.2023 அன்று குருபகவான் உங்களின் ஜென்மராசியான 1ஆம் இடத்திற்கு அமைகின்றார். இதன்மூலம் மனச்சஞ்சலம், யோசனைகள், உடல் உபாதைகள் என்பன இடையிடையே ஏற்பட்டு மறையும். தேவையில்லாமல் கோபம், எரிச்சல் என்பன ஏற்படும். இதனால் குடும்பத்தில், தொழில் நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். முக்கியமாக பொறுமையும், நிதானமும் உங்களுக்கு மிகவும் நல்லது. 09.10.2023. ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்கு முறையே ராகு 12ஆம் இடம், கேது 6ஆம் இடம் என அமைவது வழக்கு விவகாரங்களில் வெற்றிகளும் பூர்விக சொத்து சேர்க்கையும் அமையும். சனீஸ்வரனின் 11ஆம் இட சஞ்சாரம் ராகு, கேது சஞ்சாரம். இவைகளின் மூலம் எதிர்பாராத நன்மைகளும் அதிஷ்ட பலன்களும் அமையும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபகாரிய நிலை அமையும். மாணவர்களுக்கு கல்வி நிலையில் முன்னேற்றம் இருக்கும். எனவே 2023ஆம் ஆண்டில் பெரும்பாலும் நற்பலன்கள் அதிகமாகவே அமையும். குருவின் ஜென்ம சஞ்சாரம் இடையிடையே சிறு சிறு பிரச்சினைகளை கொடுக்கும். அதற்கேற்ப நிதானமாக, பொறுமையாக செயல்பட்டு உடல் ஆரோக்கியத்திலும் கவனம் எடுப்பது மிகவும் நல்லது. நூற்றுக்கு 75 வீதம் இந்த ஆண்டு நன்மையுண்டு.
ரிஷபம்
(கார்த்திகை 2, 3, 4ஆம் பாதம், ரோகினி, மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்)
எதிலும் தன் போக்கான முடிவுகளை எடுத்துக்கொண்டு அதனால் வெற்றி, தோல்வி என இரண்டையும் எதிர்கொள்ளும் ரிஷபராசி அன்பர்களே! உங்களுக்கு 29.03.2023 அன்று சனீஸ்வரன் 10ஆம் இடம் எனும் தொழில் நிலை ஸ்தானம் அமைகின்றார். தொழில் சார்ந்த அலைச்சல் அதிகமாக இருக்கும். எதிர்பார்க்கும் தொழில் நிலைக்கு முயற்சி அதிகம் வேண்டும். தொழில் மாற்றம், தொழில் சார்ந்த பிரயாணம் என்பன அமையும். எனவே அதற்கேற்ப நிதானமாக செயற்பட வேண்டும். உங்கள் ராசிக்கு குருபகவான் 22.04.2023 அன்று விரயஸ்தானமாகிய 12ஆம் இடம் அமைகின்றார். இந்த அமைப்பின் படி எதிர்பாராத சுப நன்மைகள் அமையவும் வழி ஏற்படும். சனீஸ்வரனின் சஞ்சாரம் வெளிநாட்டு பிரயாணங்களையும் ஏற்படுத்தும். குருவின் சஞ்சாரம் சுப பலாபலன்களுக்கு உரிய வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கும். 09.10.2023 அன்று சாயக் கிரகங்களான ராகு, கேது முறையே ராகு 11ஆம் இடம், கேது 5ஆம் இடம் என அமைகின்றன. ராகுவின் 11ஆம் இட சஞ்சாரமானது எதிர்பாராத நன்மைகளைக் கொடுக்கும். பொதுவாக இந்த 2023ஆம் ஆண்டிலே முயற்சி அதிகம் வேண்டும். நியாயமாக நீங்கள் முன்னெடுக்கும் விடயங்களில் அனுகூலமான வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு சற்று சஞ்சலமான நிலைகள் இடையிடையே ஏற்பட்டு மறையும். மாணவர்கள் கூடுதலாக முயற்சி எடுப்பது மிகவும் நல்லது. பொதுவாக போராட்டமான நிலை, அலைச்சல் நிலை அமைந்தாலும் நியாயமான வெற்றி அமையும் பலன் உண்டு. உங்களின் செயற்பாட்டின் மூலம் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 2023ஆம் ஆண்டில் உங்களுக்கு நூற்றுக்கு 60 வீதம் நன்மையுண்டு.
மிதுனம்
(மிருகசீரிடம் 3,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம் பாதங்கள்)
மிக நிதானமாகவும் உங்களின் வெற்றிக்கு சாணக்கியமாகவும் செயற்படும் மிதுனராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த 2023ஆம் ஆண்டில் அனுகூலமான நன்மைகள் அமையும். கடந்த இரண்டரை ஆண்டுகள் அட்டமத்துச்சனி சஞ்சாரம் மூலமாக பலவித சிக்கல் நிலைகளையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்ட உங்களுக்கு 29.03.2023 முதல் சனி பகவான் பாக்கியஸ்தானமாகிய 9ஆம் இடம் அமைகிறார். எனவே எல்லாவகையிலும் மிகவும் சிறப்பான நற்பலன் அமையும் . தொழில் சார்ந்த நன்மைகள், குடும்ப நிலையில் அனுகூலங்கள் என்பன அமையும். 22.04.2023 முதலாக அமையும் குரு பெயர்ச்சி லாபஸ்தானமாகிய 11ஆம் இடம் அமைவது எதிர்பார்ப்புகளில் நல்ல வெற்றி அமையும். திருமணம் போன்ற சுபகாரியத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அப்பலன் நிறைவாக அமையும் பலன் உண்டு. கடன் பிரச்சினைகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சுமுகமான பலன் அமையும். 09.10.2023 அன்று சாயா கிரகங்களாகிய ராகு 10ஆம் இடமும் கேது 4ஆம் இடமும் என உங்களின் ராசிக்கு அமைவதன் மூலம் தொழில் சார்ந்த சிக்கல் நிலைகளும் உடல் நிலையில் சிறு சிறு சுகயீனமும் இடையிடையே அமைகின்ற நிலைகள் இருக்கும். இருந்த போதும் குருவும் சனீஸ்வரனும் மிகச் சிறந்த நிலையில் கோசரம் பெற்று அமைந்திருப்பது அதிகமான நற்பலன்களைக் கொடுக்கும் . உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடிய நிலை மிகவும் சிறப்பாக அமையும். எல்லா வகையிலும் உங்களுக்கு சிறப்பான நற்பலன்கள் அமையும். பெண்களுக்கு நன்மையும் சிறப்பும் அமையும். மாணவர்களுக்கு அனுகூலமான நன்மைகள் ஏற்படும். எல்லா வகையிலும் 2023ஆம் ஆண்டிலே சிறப்புகள் அமையும். நூற்றுக்கு 85 வீதம் நன்மைகள், சிறப்புக்கள் ஏற்படும்.
கடகம்
(புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயிலியம்)
எந்த விதத்தில் தோல்வி வந்தாலும் சோர்வு அடையாமல் எழுந்து நிற்கும் ஆற்றல் கொண்ட கடகராசி அன்பர்களே! உங்களுக்கு 2023ஆம் ஆண்டில் சற்று சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைகள் இருக்கும். மிகவும் பொறுமை, நிதானமுடன் செயற்பட வேண்டும். 29.03.2023 முதல் அட்டமத்து சனி சஞ்சாரம் ஆரம்பமாகின்றது. இதன்மூலமாக திடீர் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலைகள் ஏற்படும். தொழில் நிலையில் சிக்கல் நிலை, குடும்ப நிலையில் பிரச்சினை, உடல் நிலையில் உபாதைகள் என அமையும். எனவே மிகவும் நிதானமாக செயற்பட வேண்டும். 22.04.2023இல் குருவின் சஞ்சாரம் ஜீவஸ்தானமாகிய 10ஆம் இடம் அமைவதால் தொழில் நிலை சார்ந்த அலைச்சல் மிகவும் அதிகமாக அமையும். இடமாற்றம், பிரயாணங்கள் அமையும். எந்த விடயத்திலும் மிகவும் சிந்தித்து செயல்படுவது நன்மைகளை கொடுக்கும். மற்றும் கடன் பிரச்சினைகள், கொடுக்கல், வாங்கல்களில் சிக்கல்கள் இருக்கும். புதிய முயற்சிகளில் மிகவும் நிதானம் வேண்டும். 09.10.2023 சாயக் கிரகங்களின் பெயர்ச்சியானது ராகு 9ஆம் இடம், கேது 3ஆம் இடம் அமைகின்றன. இதன்மூலமாக தந்தை வழி சொத்துப் பிரச்சினைகள் அமையும். சகோதரர்களின் மூலமாக பிரச்சினைகள் ஏற்படலாம். எந்த விடயமாயினும் சற்று போராட்ட நிலைகளும் இழுபறி நிலைகளும் அமையும். பெண்களுக்கு சற்று சிக்கலான நிலைகள், மனச் சஞ்சலங்கள் அமையும். மாணவர்கள் கல்வி நிலையில் அதிகமான முயற்சிகள் எடுக்க வேண்டும். கல்வியில் மந்த நிலைகள் அமையும். பொதுவாகவே இந்த ஆண்டில் நீங்கள் மிகவும் நிதான செயல்பாடு கொண்டு இருப்பதை கொண்டு இயங்குவதே மிகவும் நல்லது. பொதுவாக 2023ஆம் ஆண்டிலே பலவிதமான சிரமங்களை எதிர்கொண்டு செயற்பட வேண்டும். நூற்றிற்கு 75 வீதம் அனுகூலமான பலன் உண்டு.
சிம்மம்
(மகம், பூரம், உத்தரம் 1ஆம் பாதம்)
தன்னம்பிக்கையோடு எதிலும் துணிந்து செயற்படும் நீங்கள் நியாயபூர்வமாக செயற்பட்டால் நல்ல உயர்வை பெறலாம். உங்களின் ராசிக்கு 29.03.2023 அன்று சனிப்பெயர்ச்சி களத்திரஸ்தானமாகிய 7ஆம் இடம் அமைவதால் குடும்ப நிலை சார்ந்த சிறு சிறு குழப்பங்கள், பிரச்சினைகள் அமையும். மிகவும் பொறுமை, நிதானமுடன் செயற்பட வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமத நிலைகள் இருக்கும். மற்றும் 22.04.2023 அமையும் குருப்பெயர்ச்சி பாக்கியஸ்தானமாகிய 4ஆம் இடம் அமைவது சிறப்பான நிலையாகும். எதையும் சமாளித்து வெற்றி காணும் நிலையிலிருக்கும். குடும்ப நிலையில் சுபகாரிய நிலைகள் அமையும். தொழில் நிலையில் நல்ல முன்னேற்றம் இலாபங்கள் என்பன அமையும். புதிய முயற்சிகளில் அனுகூலமான வெற்றிகள் ஏற்படும். சனீஸ்வரனின் சஞ்சாரம் இடையிடையே சிரமங்களை கொடுத்தாலும் குருவின் சஞ்சாரம் ஓரளவிற்கு அனுகூல பலன்களைக் கொடுக்கும். 09.10.2023 அமைகின்ற ராகு, கேது, பெயர்ச்சியில் ராகு 8ஆம் இடமும் கேது 2ஆம் இடமும் அமைவது பலவிதமான சிரமங்களை கொடுக்கும். உடல் நிலையில் உபாதைகள், குடும்பத்தில் பிரச்சினைகள், கடன் சிக்கல்கள், எதிர்பாராத செலவுகள் என அமையும். எனவே ஆண்டின் பிற்பகுதியில் மிகவும் பொறுமை, நிதானமாக செயற்பட வேண்டும். பெண்களுக்கு சிறு சிறு நன்மைகளும் இடையிடையே சற்று பிரச்சினை, மனச்சஞ்சலங்களும் ஏற்படும் .அதற்கு ஏற்ப செயற்பட வேண்டும். மாணவர்கள் கல்வியில் அதிகமான முயற்சிகளோடு செயற்பட வேண்டும். எனவே இந்த 2023ஆம் ஆண்டிலே ஏற்றம், இறக்கம் சமனாக இருக்கும். எதிலும் மிகவும் சாதுரியமாக இருக்கவும். நூற்றுக்கு 60 வீதம் நன்மைகள் உண்டு.
கன்னி
(உத்தரம் 2,3,4ஆம் பாதம், சித்திரை 1, 2ஆம் பாதம்)
எல்லா நிலைகளிலும் தமக்கான சுயத்தை தனித்துவத்தை தேடிக்கொண்டு சாதுரியமான செயற்பாடு கொண்ட கன்னிராசி அன்பர்களே! உங்களுக்கு 2023ஆம் ஆண்டில் சற்றுப் போராட்டமான நிலைகள் அதிகமாக அமைந்திருக்கும். எந்த விடயமாயினும் சற்றுப் பொறுமை, நிதானமுடன் செயற்பட வேண்டும். 29.03.2023 இல் அமைகின்ற சனிப்பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலமான நற்பலனை கொடுக்கும். எதிர்பாராத வெற்றிகளும், அதிர்ஷ்ட பலன்களும் அமையும். தொழில் நிலையில் திடீர் நன்மைகள் ஏற்படும். 22.04.2023 அமையும் குரு பெயர்ச்சி அஷ்டமக் குருவாக அமைவதால் எதிர்பாராத பிரச்சினைகள் வரும். தொழில் சார்ந்த சிக்கல் நிலை, வேலைப்பளு என்பன அமையும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை இருக்கும். குடும்ப நிலையிலே சிறுசிறு பிரச்சினை, சிக்கல் நிலைகள் அமைந்திருக்கும். கடன் பிரச்சினைகள் சற்று சிரமங்களைக் கொடுக்கும். 09.10.2023 அன்று சாயக் கிரகங்கள் ராகு 7ஆம் இடம், கேது உங்கள் ராசியில் 1ஆம் இடம் என பெயர்ச்சி பெற்று அமைகின்றனர். குடும்ப ரீதியில் சற்று சிக்கல் நிலைகள் இருக்கும். உறவினர்களுடன் மனச்சஞ்சல நிலை அமையும். எந்த விடயத்தை எடுத்தாலும் இழுபறி, தாமத நிலைகள் அமையும். எனவே, மிகவும் நிதானத்துடன் செயற்பட வேண்டும். உடல் நிலை சார்ந்த உபாதைகளும் ஏற்படும். பெண்களுக்கு குடும்ப நிலையில் சஞ்சலம், யோசனை, சற்று அதிகமாக அமையும். மாணவர்கள் கல்வி நிலையிலே கூடுதலான முயற்சியும் கவனமும் எடுக்க வேண்டும். எந்த விடயத்திலும் ஏதோ ஒரு வகை சிக்கல் இருக்கும். பொதுவாக இந்த 2023ஆம் ஆண்டில் அனுகூலமான பலன் ஓரளவிற்கு அமைந்தாலும் சிரமங்கள் அதிகமிருக்கும். நூற்றுக்கு 55 வீதம் நன்மைகள் அமையும்.
துலாம்
(சித்திரை 3, 4ஆம் பாதம், சுவாதி, விசாகம், 1,2, 3ஆம் பாதம்)
சோர்வு இல்லாமல் உழைத்துக்கொண்டு நேர்மை தவறாது செயல்படும் துலா ராசி அன்பர்களே! 2023ஆம் ஆண்டில் ஓரளவுக்கு அனுகூலமான பலாபலன்களை அடையலாம். கடந்த இரண்டரை வருடமாக அமைந்து வரும் அஷ்டார்ந்த சனி எனும் 4ஆம் இட சனியின் சஞ்சாரம் 29.03.2023 அன்று நீங்கி விடுகின்றது. அதன் பின்னரான சனீஸ்வரனின் சஞ்சாரம் 5ஆம் இடம் அமைகின்றார். பூர்வ புன்னிய நிலை பூர்வீக சொத்து சேர்க்கை, புத்திரர்களின் மூலமாக நன்மை, மனநிலையில் அமைதி என ஓரளவிற்கு அனுகூலமான நற்பலன்களை எதிர்கொள்ளக் கூடிய நிலைகள் அமையும். 22.04.2023 அன்று குருபகவான் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் அமைவதால் குடும்ப நிலை சார்ந்த நன்மைகள் அமையும். மனைவி வழி சொத்துகள் சேரும். குடும்ப நிலையில் சுபகாரிய நிகழ்வுகள் ஏற்படும். திருமணம், எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவானதாக அமையும். எதிர்பார்ப்புகளில் அனுகூலமான நன்மைகள் அமையும். பொதுவாக உங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக் கூடியதாக இருக்கும். 09.10.2023இல் உங்கள் ராசிக்கு ராகு 6ஆம் இடமும் கேது 12ஆம் இடமும் அமைவது எதிர்பாராத திடீர் நன்மைகள், அனுகூல பலன்களைக் கொடுக்கும். பகைவர்களை வெல்லும் நிலை அமையும். பண வரவு தேவைகளைப் பூர்த்தி செய்யும் . நீண்டநாள் எண்ணங்கள், திட்டங்கள் நிறைவேறுகின்ற நிலை அமையும். பொதுவாக அமைதியாக,மிகவும் பொறுமையாக ,அடக்கமாக உங்களின் செயல்பாடுகளை தொடருங்கள். இடையூறுகளை களைந்து வெற்றி அமையும். பெண்களுக்கும் மாணவர்களுக்கும் நற்பலன்கள் அமையும். நூற்றுக்கு 70 வீதம் நன்மைகள் அமையும்.
விருச்சிகம்
(விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
காரியங்களை மிகவும் கச்சிதமாக செயற்படுத்தும் ஆற்றலும் எளிதில் யாரையும் நம்பாத தன்மையும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! உங்களின் ராசிக்கு 2023ஆம் ஆண்டில் சற்று போராட்டமான நிலைகள் இருக்கும். அதற்கு ஏற்ப பொறுமை, நிதானமுடன் செயற்படுவது மிகவும் நல்லது. 29.03.2023 அன்று அமையும் சனிப் பெயர்ச்சியானது உங்களின் ராசிக்கு ‘கண்டார்த்த சனி’ எனும் 4ஆம் இடம் அமைகின்றது. எனவே, எடுக்கும் முயற்சிகளிலே மிகவும் நிதானத்துடன் செயற்பட வேண்டும். குடும்ப நிலையில் சிக்கல், இழுபறி நிலைகள் தொடரும். பண வரவு சற்று மத்திமமானதாகவே அமையும். தொழில் சார்ந்த வேலைப்பளு அதிகமாக இருக்கும். கடன் பிரச்சினைகளில் சிக்கல் இழுபறிகள் அமையும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை தொடரும். 22.04.2023 அன்று அமையும் குருப் பெயர்ச்சியானது உங்களின் ராசி நிலைக்கு ரோகஸ்தானமாகிய 6ஆம் இடம் அமைவது தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை அமையும். தொழில் நிலையில் மறைமுகமான எதிர்ப்புகள், பிரச்சினைகள் சூழும். உறவினர்களுடன் மனஸ்தாப நிலைகள் ஏற்படும். 09.10.2023 அன்று அமையும் ராகு, கேது பெயர்ச்சி ராகு 5ஆம் இடத்திலும் கேது 11ஆம் இடத்திலும் அமைகின்றன. ராகுவின் சஞ்சாரம், பிள்ளைகளின் மூலமாக சிக்கல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். கேதுவின் சாரத்தினால் ஓரளவிற்கு சிறு சிறு நன்மை அமையும். பெண்களுக்கு மனச்சஞ்சல நிலைகளும் சிக்கல் நிலைகளும் இருக்கும். மாணவர்கள் தங்களின் கல்வி நிலையில் கூடுதலான கவனம் எடுக்க வேண்டும். பொதுவாகவே இந்த 2023ஆம் ஆண்டினிலே பலவிதமான சிறு சிறு பிரச்சினை இடையிடையே ஏற்பட்டு மறையும். நூற்றுக்கு 45 வீதம் நன்மைகள் உண்டு.
தனுசு
(மூலம், பூராடம், உத்தராடம் 1ஆம் பாதம்)
தன் போக்கான பிடிவாதம் கொண்டு செயல்படும் நீங்கள் பல விடயங்களில் போராடியே ஜெயிப்பீர்கள். உங்களின் ராசி நிலைக்கு 2023ஆம் ஆண்டு பல விதத்திலும் மிகவும் அனுகூலமான நன்மைகள் கொடுக்கும்.‘ஏழரைச்சனி’ எனும் தொடர் பிரச்சினைகளில் இருந்து அனுகூலம் பெறும் ஆண்டாக இவ்வாண்டு உங்களுக்கு அமையப் போகின்றது. 29.03.2023 முதலாக ஏழரைச் சனி நீங்கி 3ஆம் இடம் சனி பகவானின் சஞ்சாரம் அமையப் போகின்றது. எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அனுகூல பலன்கள் ஏற்படும். தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் சிறப்பாக அமையும். பண வரவு மிகவும் திருப்திகரமானதாக அமையும் . குடும்பத்தில் அனுகூலமான நன்மைகள் அமையும். அத்தோடு 22.04.2023 அன்று குருபகவான் சஞ்சாரம் பஞ்சமஸ்தானமாகிய 5ஆம் இடம் அமைவதால் பூர்வீக சொத்து வழங்குகள் சுமுகமாக அமையும் . திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் நிறைவாக அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விடயங்களில் வெற்றியும் நன்மையும் அமையும். கடன் நிலைகளில் சுமுகமான பலன்கள் ஏற்படும். 09.10.2023 அன்று பெயர்ச்சி பெறுகின்ற சாயக்கிரகங்கள் உங்கள் ராசிக்கு ராகு 4ஆம் இடமும் கேது 10ஆம் இடமும் அமைகின்றன. இதன்மூலம் ராகு எதிர்பாராத திடீர் நன்மைகளை கொடுக்கும். கேது தொழில் சார்ந்த முன்னேற்றத்தை கொடுக்கும். எல்லா வகையிலுமே இந்த 2023ஆம் ஆண்டிலே பலவிதமான நற்பலன்களையும் பெற முடியும். பெண்களுக்கு மிகவும் மகிழ்வான நிலையும், சுபகாரிய நிலையும் அமையும். மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் அமைந்திருக்கும். எதிர்பார்க்கும் விடயம் கைகூடி வரும். இந்த ஆண்டு நூற்றுக்கு 85 வீதம் நற்பலன்கள் உண்டு.
மகரம்
உத்தராடம் 2, 3, 4ஆம் பாதம், திருகோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதம்)
மனதிலே அதிகமான தைரியம், எதையும் நிர்வகிக்கும் திறன்கொண்ட மகரராசி அன்பர்களே! உங்களின் ராசி நிலைக்கு 2023ஆம் ஆண்டு சற்று இழுபறியான நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் பொறுமையும் நிதானமும் வேண்டும். 29.03.2023 அன்று அமையும் சனிப் பெயர்ச்சி உங்களின் ராசிக்கு ஏழரைச் சனி சஞ்சாரம் கடைக்கூற்று சஞ்சாரமாக 2ஆம் இடத்திலே அமையும் எனவே, எடுக்கும் முயற்சிகளில் சற்று காரியத்தடைகள் இருக்கும். தொழில் சார்ந்த வேலைப் பளு அதிகமாக இருக்கும். எதிர்பாராத செலவீனம் ஏற்படும். கடன் நிலைகளில் சற்று இழுபறியான நிலைகள் அமையும். உடல் நிலை சார்ந்த உபாதைகள் இருக்கும். எதிலும் நிதானமான செயல்பாடு வேண்டும். உங்களின் ராசிக்கு 22.04.2023 அன்று சனிப்பெயர்ச்சி அமையும். பொதுவாக மனச்சஞ்சலம், யோசனை என்பன சற்று அதிகமாக இருக்கும். தாயார் வழியில் செலவீனம் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை இருக்கும். எல்லா விடயங்களிலும் மிகவும் நிதானத்துடன் தெளிவாக செயல்பட வேண்டும். எந்த விடயத்திலும் போராட்டமான நிலை இருக்கும். 09.10.2023 அமையும் ராகு, கேது பெயர்ச்சி உங்களின் ராசிக்கு ராகு 3ஆம் இடம், கேது 9ஆம் இடம் அமைகின்றன. இந்த பெயர்ச்சி இடையிடையே சிறு சிறு நன்மைகள் அனுகூல பலன்களைக் கொடுக்கும். பெண்களுக்கு சற்று மனச்சஞ்சலம், போராட்ட நிலை என்பன அமைந்திருக்கும். குடும்ப உறவினர்களுடன் சிக்கல், இழுபறிகள் ஏற்படும். மாணவர்கள் கல்வி நிலையில் கூடுதலான முயற்சி எடுக்க வேண்டும். போராட்டம், தொடரும் நிலையுண்டு. நூற்றுக்கு 45 வீதம் நன்மைகள் உண்டு.
கும்பம்
(அவிட்டம் 3,4ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்)
எல்லா விடயங்களும் மிக சுலபமாக உங்களை தேடி வரும். அதிஷ்டம் பெற்ற நீங்கள் உங்கள் நலத்தில் அதிக அக்கறை கொண்டு செயற்படும் குணம் கொண்ட கும்பராசி அன்பர்களே! உங்களின் ராசிக்கு 2023ஆம் ஆண்டு சற்று சிரமங்களைக் கொடுக்கும். 29.03.2023 அன்று அமையும் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஏழரைச் சனி சஞ்சாரத்தின் ‘ஜென்மச்சனி’ எனும் நடுக்கூற்றில் அமைகின்றது. எதிர்பாராத திடீர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை அமைந்திருக்கும். தொழில் நிலையில் வேலைப்பளு பிரச்சினைகள், தொழிலில் மாற்றம் அல்லது தொழில் நிறுத்தம் போன்ற பலாபலன்கள் அமையும். அதற்கு ஏற்ப மிகவும் நிதானமாக அனைத்தும் வந்தடையும். குடும்ப நிலையில் குழப்ப நிலைகள் வாக்கு வாதம், மனநிலை சஞ்சலம், உடல் நிலையில் திடீர் சுகயீனம் போன்ற பலன்கள் அமையும். அதற்கு ஏற்ப உங்களின் செயற்பாடுகளைக் கொண்டு செல்ல வேண்டும். 22.04.2023 அன்று அமையும் குருப்பெயர்ச்சி 3ஆம் இடம் அமைவதால் காரியத் தடைகள் அமையும். சகோதரர்களுடன் சிறு சிறு பிரச்சினை அமையும். புதிய முயற்சிகளில் சிக்கல், இழுபறி, தடைகள் இருக்கும். நேர்மையாக, அமைதியாக அடக்கமாக உங்களின் பணிகளை தொடர்வதே உங்களுக்கு மிக மிக நல்லது. கடன் பிரச்சினை சிக்கல் ,இழுபறி நிலைகளைக் கொடுக்கும். 09.10.2023 அன்று அமையும் ராகு, கேது பெயர்ச்சியானது உங்களின் ராசிக்கு ராகு 2ஆம் இடமும், கேது 8ஆம் இடமும் அமைவது மத்திமமான பலன்களையே கொடுக்கும். அதற்கு ஏற்ப மிக நிதானமாக செயற்பட வேண்டும். பொதுவாக உடல் நிலையில் கவனம் வேண்டும். பெண்களுக்கு மனச் சஞ்சலம், உறவினர்களுடன் பிரச்சினை, தேவையற்ற அலைச்சல் என்பன அமைந்திருக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் அதிகமான முயற்சியும் ஊக்கமும் எடுத்து செயற்பட வேண்டும். எனவே கும்ப ராசி அன்பர்கள் தங்களின் சாதுர்யமான செயல்பாட்டின் மூலமாக மிகவும் நிதானமாக காரியங்களை நகர்த்த வேண்டும். உங்களுக்கு நூற்றுக்கு 40 வீதம் அனுகூல பலன்கள் உண்டு.
மீனம்
(பூரட்டாதி 4ஆம் பாதம், உத்தரட்டாதி ரேவதி)
மிகவும் முன்னிலையாக எல்லா விடயங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் குண இயல்புடைய மீனராசி அன்பர்களே! உங்களின் ராசிக்கு 2023ஆம் ஆண்டில் போராட்ட நிலை இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களை எதிர்கொள்ள நேரிடும். 29.03.2023 இல் அமைகின்ற சனிப் பெயர்ச்சி 12ஆம் இடம் அமைந்து, உங்களின் ராசிக்கு ‘ஏழரைச்சனி’ ஆரம்பிக்கும் நிலையாக முதற்கூறு அமைகின்றது. எதிர்பாராத திடீர் பிரச்சினைகள், சிக்கல் நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கும். குடும்ப நிலையில் மனச்சஞ்சலங்களும் பண விரயங்களும் அமையும். 22.04.2023 அன்று அமைகின்ற குருப்பெயர்ச்சி தனஸ்தானமாகிய 2ஆம் இடம் அமைவது ஓரளவுக்கு அனுகூலமான நற்பலன்களைக் கொடுக்கும். எதையும் சமாளித்து வெற்றி கொள்ளக்கூடிய நிலைகள் இருக்கும். உறவினர்களின் மூலம் அனுகூலம் அமையும். திருமணம் போன்ற சுபகாரியம் 09.10.2023 அன்று அமையும். ராகு, கேது பெயர்ச்சி, ராகு உங்கள் ஜென்மராசிக்கும் கேது 7ஆம் இடமும் அமைகின்றன. எனவே சற்று பிரச்சினைகள், காரியத் தடைகள் இருக்கும். அதற்கு அமைய நிதானமாக செயற்பட வேண்டும். பெண்களுக்கு மனச்சஞ்சல நிலைகள் இடையிடையே அமையும். எதிர்பாராத நற்பலனும் அமையும். மாணவர்கள் கல்வி நிலையில் ஓரளவுக்கு அனுகூலமான நற்பலன்கள் அமையும் நிலையுண்டு. பொதுவாக குருவின் பலன் சிறு சிறு நன்மைகளைக் கொடுக்கும். ஏழரைச் சனி சஞ்சாரம் சற்று பிரச்சினைகளையும் இழுபறி நிலைகளையும் கொடுக்கும். அதற்கு ஏற்ப செயற்படவும். நூற்றுக்கு 50 வீதம் நன்மைகள் அமையும்.
-துன்னையூர் கலாநிதி ராம். தேவலோகேஸ்வரக் குருக்கள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM