நடிகையாக அறிமுகமாகும் சின்னத்திரை நட்சத்திரம்

Published By: Digital Desk 2

03 Jan, 2023 | 12:06 PM
image

தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், 'ராஜா ராணி 2' எனும் சின்னத்திரையில் ஒளிபரப்பான நெடுந்தொடரில் நடிகையாகவும் அறிமுகமாகி வரவேற்பை பெற்ற அர்ச்சனா, நடிகர் அருள்நிதி நடிக்கும் 'டிமான்டி காலனி 2' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிறார்.

அறிமுக இயக்குநர் வெங்கி வேணுகோபால் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'டிமான்டி காலனி 2'. இயக்குநர் அஜய் ஞானமுத்து கதை, வசனம் எழுதி தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில் டிமான்டி காலனி படத்தின் முதல் பாகத்தில் கதையின் நாயகனாக நடித்த நடிகர் அருள்நிதி இதிலும் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இது தொடர்பாக நடிகை அர்ச்சனா பேசுகையில், '' ராஜா ராணி 2 தொடரிலிருந்து விலகினேன். எமது முடிவு குறித்து பலரும் வருத்தப்பட்டனர். ஆனால் பல விடயங்களை கற்றுக் கொண்டு, திரைப்படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்தினேன். தற்போது அஜய் ஞானமுத்து அவர்களின் குழுவில் இணைந்திருக்கிறேன். 'டிமான்டி காலனி 2 ' படத்தில் நாயகன் அருள்நிதிக்கு தங்கையாக நடிக்கிறேன். இம்மாதத்தில் படப்பிடிப்பில் பங்குபற்றுகிறேன். தொடர்ந்து திரை உலகில் எம்முடைய நடிகையாக சாதிக்க விரும்புகிறேன்.'' என்றார்.

இதனிடையே வி.ஜே. அர்ச்சனா, அண்மையில் இசையமைப்பாளர் தரண்குமார் இசையமைத்து நடித்த 'தம்மா துண்டு' எனும் ஒரு நிமிட வீடியோவில் அவருடன் இணைந்து நடனமாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right