வவுனியா மன்னார் வீதி, குளுமாட்டுச்சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மதியம் 12 மணியளவில் மன்னார் வீதி குளுமாட்டுச்சந்தியிலிருந்து  வவுனியா நோக்கிச் சென்ற கனரக வாகனம், முச்சக்கரவண்டி மற்றும் இலக்கத்தகடு அற்ற சிறியரக லொறி ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கனரக வாகனம் மற்றும் முச்சக்கரவண்டிக்கு பின்னால் வந்துக்கொண்டிருந்த இலக்கத்தகடு அற்ற புதிய சிறியரக லொறியானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி மீது மோதியதில், முச்சக்கரவண்டி முன்னாள் சென்றுக்கொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில்  முச்சக்கரவண்டி  சாரதியான  தர்மராசா நந்தகுமார் (48) படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின்  அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் விபத்து தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.