கொழும்பு போன்ற பெரிய நகரங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் சொரியாஸிஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஓர் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கின்றன. 

இந்த நோய் ஆண், பெண் என்ற பாலின பாகுபாடின்றி சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கின்றது. இந்த நோய் பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது.  அதிலும் 15 வயது முதல் 40 வயது வரையுள்ளவர்களையே இது அதிகம் பாதிக்கின்றது. உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் சிறு புள்ளிகள் போல் தொடங்கி நாளடைவில் வட்ட வடிவ திட்டுகள் போல் உடல் முழுவதும் காணப்படும். இதனை உரிய தருணத்தில் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாவிடில் நகங்கள் அழுகுதல், மூட்டுகளில் வலி வீக்கம் ஆகியவை உண்டாகும். அதே தருணத்தில் இந்நோய் உயிர்கொல்லி நோயல்ல. இதனால் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.

பொடுகு போல் தோன்றி தலையை மட்டும் பாதிக்கும் ஸ்கால்ப் சொரியாஸிஸ், பித்தவெடிப்பு போல் தோன்றும் பிளாண்டர் சொரியாஸிஸ், நகச்சொத்தைப் போல் தோற்றமளிக்கும் நெயில் சொரியாஸிஸ் என பல வகையான சொரியாஸிஸ்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, நீண்ட காலம் ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது, ஏதேனும் ஓர் உடலியல் சிக்கலுக்காக நீண்ட நாள்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை சாப்பிடுவதால ஏற்படும் பக்கவிளைவு, தீடிரென்று ஏற்பட்ட விபத்துகளால் பாதிக்கப்படும் மன அழுத்தம் மற்றும் மனகவலை, ஆகியவற்றால் தான் சொரியாஸிஸ் உருவாகிறது.

உடலில் உள்ள முழங்கை, முழங்கால், காதின் பின்புறம், தலை இவற்றில் உலர்ந்த வட்ட வடிவத் திட்டுகள் அதிலிருந்து உதிரும் வெண்ணிற பொடுகு உதிர்தல், அரிப்பு, சொறிந்தால் இரத்தக்கசிவு, அக்குளில் அல்லது மார்பகங்களுக்கு கீழே அல்லது இடுப்பில் அல்லது தொடையின் மேல்பகுதியில் கருப்பு நிற படை தோல் உரிதல், அரிப்பு, உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் வெடிப்பு ஆகியவை அறிகுறிகளாக காணப்படும். இவை நாளடைவில் நகச் சொத்தை, நகம் அழுகுதல், மூட்டுகளில் வலியும் வீக்கமும் அதிகரித்து மூட்டு கோணலாகுதல், மூட்டுகளை மடக்க இயலாமை போன்றவையும் உருவாக்கிவிடும்.

இத்தகைய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் கூட அவை சொரியாஸிஸாக இருக்கலாம். இந்நிலையில் இதனை தடுக்க தேயிலை மரத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் நல்லதொரு தீர்வை தருவதாக கண்டறிந்திருக்கிறார்கள். இது ஒரு வெளிப்பூச்சு மருந்து என்றும், இதனை சிறிளதவு தண்ணீரில் கலந்து சொரியஸிஸால் பாதிக்கப்பட்ட இடத்தில் இரவில் தடவி விட்டு பின்னர் காலையில் நல்ல தண்ணீரில் அலசினால் விரைவில் உரிய நிவாரணம் கிடைக்கும். ஒரு சிலர் இதனை ஓலீவ் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். ஒரு சிலர் நீங்கள் குளிக்கும் குளியல்தொட்டியில் சிறிதளவு இந்த எண்ணெயை விட்டுக் கொண்டு தொடர்ந்து குளித்து வருவதாலும் கூட இத்தகைய பாதிப்பு குறைந்துவிடும் என்கிறார்கள்.

டொக்டர் சித்திக் அலி M.D., 

தொகுப்பு அனுஷா

தகவல் : சென்னை அலுவலகம்