எண்ணிய எண்ணங்கள் ஈடேற இறைவனை வழிபடவேண்டிய முறை

Published By: Ponmalar

28 Dec, 2022 | 03:00 PM
image

இன்றைய சூழலில் எம்மில் பலரும் சுய ஒழுக்கம் என்பது குறித்த பாரம்பரியமான மரபுகளை புறக்கணித்து, தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாழ்க்கை நடைமுறை மாற்றத்திற்கு ஏற்ப, பல விடயங்களை மறுபரிசீலனை செய்து கொண்டு வாழ பழகிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எம்முடைய மரபணுகளில் விதைக்கப்பட்டிருக்கும் சுய ஒழுக்கம் எனும் காரணி, எம்மையும் அறியாமல் நாற்பது வயதைக் கடந்த பிறகு ஆன்மீகத்தின் பக்கம் திசை திருப்புகிறது. 

கடந்த தசாப்தங்களின் 70 வயதிற்கு மேல் ஆன்மீகத்தின் மீது இயல்பான ஆர்வம் ஒரு முகமாக ஏற்படும். ஆனால் தற்போது நாற்பது வயதிலேயே தொடங்கி விடுகிறது. இது தொடர்பாக தர்க்க ரீதியாக விவாதங்களை முன்மொழிபவர்கள் இருக்கிறார்கள்.

இருப்பினும் இன்றைய சூழலிலும் வாழ்க்கையை வாழத் தொடங்கும் புது தம்பதிகள், தங்களின் வாழ்க்கையில் எண்ணிய எண்ணங்களை ஈடேற்றுவதற்கு இறை வழிபாடுதான் பிரதானம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இவர்களை ஆற்றுப்படுத்தும் வகையிலும், ஒருங்கிணைக்கும் வகையிலும் எம்மாதிரியான பாதையில் பயணித்தால் இறையருளை முழுமையாக பெற இயலும் என்பதனை இங்கு சுட்டிக்காட்டி இருக்கிறோம். இவை அனைத்தும் அனுபவஸ்தர்களும், முன்னோர்களும் அருளிச்சென்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

• ஒவ்வொரு நாளின் தொடக்கத்தையும் இறைவனின் நாமத்தை அல்லது மந்திரத்தை உச்சரித்தபடி தொடங்குவது நல்லது. அதாவது, காலையில் படுக்கை விட்டெழும்போதே ஒரு மந்திரத்தை உச்சரிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ‘ஸ்ரீ ராமா’,  ‘ நமச்சிவாய’, ‘ ஓம் முருகா’,  ‘ஓம் சக்தி’, ‘ஓம் நமோ நாராயணா..’. அதன்போது, கையில் ஒரு குவளை நீரை வைத்துக்கொண்டு தண்ணீரைப் பார்த்தப்படி பிரார்த்தியுங்கள். பிறகு, பல்துலக்கியபின், அந்த நீரை அருந்துங்கள். சிலர் இந்த தருணத்தில் அவர்களின் காரியச்சித்திக்குரிய எண்ணை மனதில் தியானித்தும் அருந்துவார்கள். காரணம், காலையில் எழும்போது மனதில் நினைவுகள் பெருகுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. மனமும் புத்துணர்வுடன் இருக்கும். அந்த வேளையில், ஒருமுகத் தன்மையாக நீங்கள் உச்சரிக்கும் மந்திரத்தின் சக்தி, அந்த நீரில் ஏறியிருக்கும். அதை அருந்துவதன் மூலம், இறையுணர்வு எப்போதும் உங்களுடனேயே இருக்கும். மேலும் நீங்கள் உச்சரிக்கும் மந்திரத்தின் மகிமையும் உடனடியாக உங்களுக்குக் கிடைக்கும்.

• சனிக்கிழமை தோறும் நவதானியங்களுடனான உணவை - உதாரணமாக நவதானிய தோசை - நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டு வருவதால், நவகிரகங்களின் அருள் பரிபூரணமாகக் கிடைப்பதுடன், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி தாக்கம் குறையும்.சிலர் எள்ளுருண்டையை ஒன்றோ அல்லது இரண்டோ சாப்பிடுவதுண்டு. இதனாலும் பலன் கிட்டும்.

• அன்னதானம் அளிப்பது மிகவும் சிறப்பானது. அது, நமது கர்மாவையே மாற்றும் வல்லமைப் படைத்தது. எனவே, உங்களின் பொருளாதார சக்திக்கேற்ப அன்னதானம் செய்யுங்கள். குறிப்பாக, வீடு, வாசல், சொந்தம், பந்தம், தொழில் என்பவற்றை இழந்தவருக்கு அன்னதானம் அளிப்பது மிகச் சிறந்தது. சிலர் ஆதரவற்றோர், மாற்று திறனாளிகள் குறிப்பாக கால் ஊனமுற்றவர்கள், விதவைகள், முதியோர்கள் ஆகியோர்களுக்கு அன்னதானம் அளிப்பது சாலச்சிறந்தது.

• நீங்கள் எந்தக் குறையும் இன்றி நல்ல நிலையில் இருக்கலாம். ஆனால் உங்கள் பிரச்சினை, உங்களைப் பார்த்து மற்றவர்கள் பெருமூச்செறிவதாக இருக்கலாம். இதனால் உங்கள் சுபிட்சம் குலைந்து விடுமோ..! என்ற அச்சம் உங்களுக்கு இருக்கலாம். அப்படியிருந்தால், உங்களது வீட்டிற்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அந்திசாயும் நேரம் அல்லது மாலை நேரங்களில் சாம்பிராணி புகை போடுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களைச்சுற்றியுள்ள எதிர்நிலை ஆற்றல் மறைந்துவிடும். 

• பொதுவாக செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணத்தை வெளியில் கொடுக்கக்கூடாது என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது தவறு. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அரிசி, நெல், கோதுமை போன்ற தானிய வகைகளைத்தான் இலவசமாகவோ, கடனாகவோ யாருக்கும் கொடுக்கக்கூடாது. அதே போல், புதன்கிழமைகளில் உங்களது வீட்டிலிருந்து ஆடை, ஆபரணங்கள், பொன்பொருள் என்பவற்றை யாருக்கும் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால் உங்கள் கையில் இருக்கும் மகாலட்சுமி அடுத்தவரிடம் சென்றுவிடுவாள் என்பது ஐதீகம். மேலும் சுவாதி நட்சத்திரத்தன்று பொன், பொருள், பணம் என்பவற்றைக் கடனாகக் கொடுப்பதைத் தவிருங்கள்.

• உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் சிக்கலிலிருந்து விடுபட, சோதிடர்கள் பரிகாரங்கள் செய்யவேண்டும் என வலியுறுத்துவார்கள். இதன் போது தோலால் செய்யப்பட்ட பணப்பை, இடுப்புப்பட்டி போன்றவற்றை அணிவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், இவற்றை அணிந்துகொண்டு நீங்கள் செய்யும் பரிகாரங்கள் எப்போதும் முழுமையான பலனை அளிப்பதில்லை.

• கழுத்தை நெறிக்குமளவிற்கு கடன் பிரச்சனை உள்ளவர்கள், தொடர்ந்து, பதினாறு நாட்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செய்ய வேண்டும். அது உங்களுடைய ஜென்ம நட்சத்திர தினத்தன்று தொடங்குவதாகவோ அல்லது நிறைவு பெறும் வகையிலோ அமைத்துக்கொள்ளவேண்டும்.  மேலும் தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டில் தெளித்து வந்தால் பீடை எனப்படும் அசுபத்தன்மை நீங்கும்.

• கணவனின் அன்பை முழுமையாக பெற வேண்டுமென்றால், மனைவியானவர், விசாக நட்சத்திரத்தில் விரதமிருந்து, முருகப் பெருமானையும் வள்ளியையும் வழிபட வேண்டும். ஆறு அல்லது பதிமூன்று வாரங்களுக்கு பிறகு உங்களுடைய கோரிக்கை நிறைவேறுவதை அனுபவத்தில் உணரலாம். 

• திருவோண நட்சத்திர தினத்தன்று விஷ்ணுவை துளசியால் அர்ச்சனை செய்து, துவரம் பருப்பு பாயாசத்தை நைவேத்தியமாக படைத்து,, அதனை அனைவருக்கும் தானமாக வழங்கினால்.., சொத்து வாங்கும் யோகம் அமையும். சிலருக்கு மனை வாங்குவதற்கான வழி பிறக்கும். 

• மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவியையும் சுலபமாக பெற, மிருகசீரிஷ நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வழிபட்டுவிட்டு உதவி கேட்டால் கட்டாயம் உதவி கிடைக்கும்.

தொகுப்பு: வெலியமுனை குருசாமி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்