37 வருட ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார் திருமதி. அருள்மொழி பத்மநாதன்

Published By: Nanthini

28 Dec, 2022 | 12:35 PM
image

ண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நாவலப்பிட்டி என்னும் பிரதேசத்தில் 1962 ஜூலை 25ஆம் திகதி முத்தையா - அமராவதி தம்பதியின் மூன்றாவது புதல்வியாக திருமதி. அருள்மொழி பத்மநாதன் பிறந்தார். 

இவர் தனது ஆரம்பக்கல்வியை நாவலப்பிட்டி நகரிலுள்ள கனிஷ்ட மகளிர் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை பரி. அந்திரேயர் மகளிர் மகா வித்தியாலயத்திலும் கற்றார். 

தமது உயர்கல்வியை கம்பளை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சாஹிரா கல்லூரியில் கணித பிரிவில் கற்று சித்தி பெற்றார்.

மேலும், நாவலப்பிட்டி நகருக்கு அண்மையில் உள்ள வெஸ்ட்ஹோல் எனும் இடத்தில் உள்ள கண்டி/கட்டபூலா/வெஸ்ட்ஹோல் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ள பாடசாலையாகும். இது 1980களில் வெறும் தமிழ் வித்தியாலயமாக இருந்தது. அந்த பாடசாலைக்கு இவர் 1986 மே 25ஆம் திகதி நியமனம் பெற்றுச் சென்றார். 

இந்தப் பாடசாலையின் அமைவிடம் அக்காலகட்டத்தில் அதிகஷ்ட பிரதேசமாக காணப்பட்டது. போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைந்த அந்நாட்களில் பாடசாலைக்கு செல்வதற்கு ஒரேயொரு பேருந்து மட்டுமே இருந்தது. 

ஆகையால், நாவலப்பிட்டி நகரிலிருந்து செல்லும் பேருந்தில் சென்று, கடியன்லேன எனும் நகரில் இறங்கி, அங்கிருந்து பாடசாலைக்கு 4 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. இந்த நிலைமையே 2 வருடங்கள் தொடர்ந்தது.

அப்பாடசாலையில் 1986இல் அதிபர் திருமதி. இந்திராணி சிவசாமி அவர்களும் மூன்று  தொண்டர் ஆசிரியர்களும் மட்டுமே கடமையாற்றினர். இங்கு தரம் 1இலிருந்து 5 வரை மட்டுமே காணப்பட்டது. கண்டி கல்வி காரியாலயத்தில் கல்வி அதிகாரியாக கடமையாற்றிய கௌரவ இராசையா அவர்களுடைய முயற்சியினால் அடுத்தடுத்த வருடங்களில் ஏனைய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

மேலும், அருள்மொழி பத்மநாதன் அவர்களது கடமையுணர்வு, இரக்க குணம், இறைபக்தி என்பன சமூகத்தில் மிகுந்த நன்மையை ஏற்படுத்தின. இவர் கற்பித்தல் மட்டுமன்றி இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின் 1989, 90 ஆகிய இரண்டு வருடங்கள் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கல்விப் பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட கணித ஆசிரியராக வெளிவந்தார்.

அதன் பின்னர் நாவலப்பிட்டியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையான தற்போதைய கதிரேசன் தேசிய கல்லூரியில் பயிற்றப்பட்ட கணித ஆசிரியராக 1991 ஜனவரியில் நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு 1991 செப்டெம்பர் மாதத்தில் மீண்டும் க/க/ வெஸ்ட்ஹோல் தேசிய கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இக்காலத்தில் ஆசிரியராக மட்டுமல்லாமல், சகல அபிவிருத்தி செயற்பாடுகளிலும் கல்விசார் செயற்பாடுகளிலும் தனது பூரண ஈடுபாட்டை வெளிக்காட்டி பாடசாலையின் முன்னேற்றத்துக்கு முன்னின்று உழைத்தார். இக்காலகட்டத்தில் ஒரே அதிபரின் கீழ் நெடுங்காலம் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 1997 மார்ச் மாதத்தில் கொழும்பு கொம்பனி தெருவிலுள்ள தற்போதைய கொ/ டீ.பி. ஜாயா சாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார்.

அங்கும் கல்விசார் மற்றும் கல்விசாரா நடவடிக்கைகளில் தனது முழு ஈடுபாட்டைக் காட்டி, பாடசாலையின் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தார். அதில் விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்கமைத்தல், கணித பாடத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்தல், கலாசார நிகழ்வுகளுக்கு பங்களிப்பு செய்தல் என்பன குறிப்பிடத்தக்கவை. இந்தப் பாடசாலையில் மூன்று அதிபர்களின் கீழ் கடமையாற்றியுள்ளார்.

தொடர்ந்து, திருமதி. நஸீரா ஹசனாரின் தலைமையில் பல நிர்வாகப் பொறுப்புக்களில் ஈடுபட்டார்.

இதற்காக பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்று, இங்கு 16 ஆண்டுகள் கடமை புரிந்தார்.

அதன் பின்னர் 2013ஆம் ஆண்டு, ஆசிரியர் இடமாற்றத்தின்போது கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு இடமாற்றம் பெற்று வந்தார். இவர் அருட்சகோதரி அமிர்தராணி சேவியற், திருமதி. ஜெ. அரியரட்ணம், திருமதி. பி.திலகநாதன் ஆகிய அதிபர்களின் கீழ் கடமையாற்றியதோடு, அதிபர் திரு.அ.ஹேமானந் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் கடமையாற்றிய நிலையில் ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலையில் இவர் பல முக்கிய பொறுப்புக்களை வகித்தார். குறிப்பாக, முகாமைத்துவக்குழு அங்கத்தவராக செயற்பட்டதோடு, பாடசாலை அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளிலும் உறுதுணையாக இருந்தார். நேரம் தவறாமல் கடமைக்கு சமுகமளிப்பதோடு மாணவர்களின் நலனுக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். அதுமட்டுமன்றி, கணித பாடத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுக்க உதவினார். 

மேலும், இவர் தனது அனைத்து கல்விசார், கல்விசாரா நடவடிக்கைகளையும் பூரணமாக செய்து முடிக்கக்கூடியவர். அனைவருடனும் அன்பாக பழகக்கூடியவர்.

எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வுபெறவிருக்கும் ஆசிரியை திருமதி. அருள்மொழி பத்மநாதனை பற்றி பாடசாலை அதிபரும் ஆங்கில ஆசிரியருமான திரு.அ. ஹேமானந் கூறுகையில், 

இவர் பாடசாலை செயற்பாடுகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்படும் ஆசிரியை. இவர் ஓய்வு பெறுவதற்கு வேண்டிய சகல ஒத்துழைப்புகளையும் வழங்கியதோடு, பாடசாலையில் கற்பிக்கும் காலத்தில் இவருக்கு பல வழிகளிலும் நிர்வாக ரீதியான உதவிகளை வழங்கியுள்ளேன். 

எனது நிர்வாக காலத்தில் இவர் ஆசிரியையாக கடமையாற்றி ஓய்வு பெறுவதையிட்டு பெரும் சந்தோஷமடைகின்றேன்.

இவரது வேண்டுகோளுக்கிணங்க, எனது அதிபர் கடமையை நான் மென்மேலும் சிறப்பாக நிறைவேற்றுவேன்.

எனது காலத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தர, க.பொ.த. உயர்தர பரீட்சைகளில் எமது பாடசாலை மாணவர்கள் இருவர் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியெய்தி, பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் சென்றுள்ளனர்.

அதேவேளை, இந்தப் பாடசாலை சகல பௌதீக வளங்களையும் பெற்று, தன்னிறைவுடைய பாடசாலையாக கொழும்பு நகரில் திகழ வேண்டும். எதிர்காலத்தில் புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயம் ஒரு தேசிய கல்லூரியாக மிளிர வேண்டும். அதற்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அருளும் கிடைக்க வேண்டும். 

எமது பாடசாலையின் முன்னேற்றங்களில் பங்கெடுத்த ஆசிரியையின் தொழில் வளர்ச்சிக்கு இவரது கணவரும் மகனும் கூட உறுதுணையாக உள்ளனர். அதனால்தான் இவரால் தனது கடமைகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக இருந்துள்ளது என கூறினார்.

மேலும், சிறப்புற கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் திருமதி. அருள்மொழி பத்மநாதன் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் சகல சௌபாக்கியங்களுடனும் சீரும் சிறப்பும் பெற்று வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் என கொ/ புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் பெருமரியாதையோடு தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்