(எம்.ஆர்.எம்.வஸீம்)

மக்களின் ஜனநாயக போராட்டங்களை அரச பயங்கரவாதம் மூலம் அரசாங்கம் தடுக்க முற்பட்டால்  அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறுவதை தடுக்க முடியாது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

அரசாங்கம் பாரிய நிதி பிரச்சினைக்கு ஆளாகியுள்ளது. அதனால்தான் மக்கள் மீது பாரியளவில்  சுமைகளை ஏற்றிவருகின்றது. இன்று வங்கிகளில் டொலர் இல்லை. அதனால் 30இலட்சம் டொலர் சிங்கப்பூரிடம் இருந்து கடனுக்கு பெற்றுக்கொள்ள அரசாங்கம்  நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினையை தீர்த்துக்கொள்ள அரச வளங்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை தவிர வேறு திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை.

அத்துடன் எமது நாடு பொருளாதாரம்,  தொழில், உணவு தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்த நாடாகும். என்றாலும் விவசாயத்துறை சிறந்த முறையில் செயற்பட்டமையால் கஷ்டத்துடன் தலைதூக்க முடியுமாகியது. ஆனால் அரசாங்கம் தற்போது விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதாக தெரிவித்து விவசாயிகளின் உரமாணியத்துக்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் விவசாயிகள் வெறுப்படைந்துள்ளனர். இதனால் சிறு விவசாய செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் தொழிலை விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் இவ்வாறு நாளா பக்கத்தாலும் மக்களை தாக்கும்போது அவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கிறங்குவதை தடுக்க முடியாது. அம்பந்தொட்ட முறைமுகத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணமும் அதுவாகும். அவர்களின் தொழிலுக்கு உத்தரவாதம் வழங்குமாறு தெரிவித்தே அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இவ்வாறு பல துறைகளைச்சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் போது அவர்களை தடுப்பதற்கு பொலிஸ் அதிகாரத்தை பிரயோகிப்பதைத்தவிர அரசாங்கத்துக்கு வேறு வழியில்லை.

எனவே மக்கள் தங்கள் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக போராட்டங்களை மேற்கொள்வது அவர்களின் ஜனநாயக உரிமை. அதனை தடுப்பதற்கு யாராலும் முடியாது. அரசாங்கம் மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அரச பயங்கரவாதம் மூலம்  தடுக்க முற்பட்டால்  அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறுவதை ஒருபோதும் தடுக்க முடியாது என்றார்.