(கோலாலம்பூரிலிருந்து ரொபட் அன்டனி)

மலேஷியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கோலாலம்பூரில் இரண்டு நாடுகளினதும் வர்த்தக பிரதிநிதிகளின் பங்கேற்புடனான  வர்த்தக மாநாடு இன்று நடைபெற்றது. 

இலங்கைக்கும் மலேஷியாவுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார வர்த்தக  உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில்  நடைபெற்ற இந்த மாநாட்டில் இரண்டு நாடுகளினதும் வர்த்தக பிரதிநிதிகள்  மற்றும் அரசாங்க அதிகாரிகள் பங்கேற்றனர். 

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பிரதி அமைச்சர்களான பாலித்த தெவரப்பெரும மனுஷ்ய நாணயக்கார   மற்றும்  இலங்கையின் வர்த்தக துறைசார்ந்த அரச நிறுவனங்களின்  பிரதிநிதிகள் வர்த்தக பிரமுகர்கள் இலங்கை சுற்றுலாத்துறை தொடர்பான நிறுவனங்களின் பிரதிநிகள்  உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

அத்துடன் மலேஷயாவின்  வர்த்தக பிரமுகர்கள் அரச நிறுவனங்களின்  பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்த வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டனர். 

இதன்போது  இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பொருளாதார உறவை எவ்வாறு முன்னேற்றுவது என்பது குறித்தும் இரண்டு நாடுகளுக்கு இடையில் வர்த்தக முதலீடுகளை அதிகரித்துக்கொள்வது  தொடர்பாகவும்  கலந்துரையாடல்கள் நடைபெற்றன.  

சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு,  முதலீடு,  உள்ளிட்ட விடயங்கள்  தொடர்பில் மலேஷிய வர்த்தக மாநாட்டில்  இரண்டு நாடுகளினதும் பிரதிநிதிகள் கலந்துரையாடினர். 

மேலும்  இந்த வர்த்தக மாநாட்டின்போது இரண்டு நாடுகளினதும் வர்த்தக பிரதிநிதிகள் மட்டத்திலான  நேருக்கு நேர் இருதரப்பு சந்திப்புக்களும் பேச்சுவார்த்தைகளும்  நடைபெற்றன.  

மலேஷியாவுக்கான  இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் உள்ளிட்ட தூதரக அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.