களிமண்ணில்... கலைவண்ணம் செய்யும் யாழினி

Published By: Digital Desk 3

26 Dec, 2022 | 03:36 PM
image

பலரது வாழ்க்கையை முடக்கிபோட்ட கொரோனா பெருந்தொற்று பரவல் காலம் பத்தனையைச் சேர்ந்த ஒரு யுவதியின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கைகளை விதைத்து அவரது வாழ்க்கைக்கு புதிய வெளிச்சத்தினை காண்பித்துள்ளது.

கொரோனாவால் வீட்டினுள் முடங்க வேண்டிய நிலையேற்பட்ட போதிலும் எதிர்காலம் குறித்து புதிய கனவொன்றை கண்டு அதனை சாத்தியமாக்கி ஒரு வெற்றியாளராக மாறியுள்ளார் பவித்திரா யாழினி ரவிச்சந்திரகுமார்.

திம்புள்ளை பத்தனை பகுதியைச் சேர்ந்த யாழினி தனது கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தை படித்து முடித்து வீட்டிலிருந்த வேளை, கொரோனாவும் ஊரடங்கும் வாட்டி வதைத்து கொண்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா விடுமுறை காலத்தை எவ்வாறு பயனுள்ள வகையில் கழிப்பது என்றும், அதேசமயம் ஒரு சிறிய தொழில் முயற்சியை தொடங்கி பெற்றோருக்கு உதவலாம் என்றும் சிந்தித்துள்ளார் யாழினி.

அப்போது அது சம்பந்தமான தேடல்களை தொடங்கினார். இந்நிலையில் களிமண்ணால் செய்யப்படும் டெரக்கோட்டா நகைகள் தொடர்பில் அவரது பார்வை திரும்பியது.

சாதாரண களிமண்ணில் செய்வதுதான் இந்த டெரக்கோட்டா நகைகள் (Teracotta Jewellery) ஆகும்.

டெரக்கோட்டா நகைகள் வடிவமைப்பு குறித்து தனது கவனத்தை முழுமையாக திருப்பி அவர் அதில் ஈடுபட தொடங்கினார். இன்று அந்த துறையில் ஒரு வெற்றியாளராக மாறியுள்ளார். யாழினி கலைநுட்பம் நிறைந்த ஆபரணங்களை உருவாக்கும்போது, கைகளால் மிக பொறுமையாக வடிவமைக்கிறார்.

ஒரு ஆடையில் உள்ள டிசைன்களையும் பயன்படுத்தி நகை செய்து கொடுப்பது இவர் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க விடயம். இதுவரை காதணி, மோதிரம், வளையல், நெக்ளஸ் போன்றவற்றை வடிவமைத்துள்ளார். 

மேலும் திருமணத்திற்காக பிரத்தியோகமாக வடிவமைப்புகளை செய்கின்றார். யாழினி கடந்த இரண்டு வருடங்களாக இந்த தொழிலை செய்து வருகிறார்.

தனது நகை வடிவமைப்பு தொடர்பில் அவர் கூறுகையில்,

நகை வடிவமைப்பு முயற்சியை ஆரம்பித்தது எப்படி? இதற்கு எத்தகைய ஆதரவினை பெற்றீர்கள்?

களிமண் நகைகள் செய்ய என்னை தூண்டியது கொரோனா தான். நீண்ட விடுமுறை காலம் என்பதால் நிறைய நேரத்தை வீட்டில் செலவிடக்கூடியதாக இருந்தது. அவ்வேளைகளில் வீட்டிலிருந்து ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது.

அத்தோடு, நான் வெளியே வேறு வேலைத்தளங்களுக்கு சென்று, தொழில் செய்து சம்பாதிக்க விரும்பவில்லை.

அதனாலேயே சுயமாக ஒரு தொழிலை ஆரம்பிக்க என்ன செய்யலாம் என யோசித்தேன். ஏதேனும் புதுமையாக செய்ய நினைத்தேன். ஏனென்றால், எப்போதும் புதுமையாக, வித்தியாசமாக எதையேனும் செய்வதையே அதிகம் விரும்புகிறேன்.

அவ்வாறே களிமண் நகைகளை வடிவமைக்க ஆரம்பித்தேன்.

அதற்கு முன் இந்த நகைகள் குறித்து நிறைய தேடி ஆராய்ந்தேன். அப்போது இந்தியாவில் இந்த நகை மிகவும் பிரபல்யமாக இருந்தது.

நானும் டெரக்கோட்டா நகைகள் செய்யப்போவதாக பெற்றோரிடம் சொன்னேன். அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் மேலும் என்னை ஊக்குவித்தனர்.

அத்தோடு, எனது அக்காவும் நான் வடிவமைத்து கொடுக்கும் நகைகளை அணிந்து அதன் தேவையை, அழகினை எனக்கு உணர்த்தினார்.

உங்களது நகைகளுக்கு சமூகத்தில் தற்போதைய வரவேற்பு?

ஆரம்பத்தில் எனது நகைகளை யாஷ் கிரியேஷன் (yaz_creations) என்ற எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தேன். பின்பு இது மக்களுக்கு பிடித்திருக்கிறதா? வரவேற்பு இருக்கிறதா? என பார்த்தேன். நினைத்தபடி, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு தான் நகைகளை விற்பனை செய்ய ஆரம்பித்தேன். நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள்.

தீபாவளி பண்டிகை நாட்களில் விற்பனை  களைகட்டியது. அதில் நான் இரண்டு இலட்சம் வரை சம்பாதித்தேன். அத்தோடு, வாடிக்கையாளரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததோடு, மிகவும் நல்ல கருத்துக்கள் பாராட்டுக்கள் கிடைத்தது.

தற்போது என்னுடைய நகைகள் சமூகத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

முதல் நகையை விற்பனை செய்த அனுபவம்?

முதன் முதலில் நான் ஒரு ஜோடி காதணியை 100  ரூபாவுக்கு தபால் மூலம் விற்பனை செய்தேன். காதணியை வாங்கியவர் அதை அணிந்து, ஃபேஸ்புக் பக்கத்தில் மற்றவர்களுக்கும் எனது நகைகளை பரிந்துரைப்பது போல் பதிவிட்டார்.

அதன் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, சிறந்த கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறக்கூடியதாக இருந்தது. அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.

எனவே, எதிர்காலத்தில் களிமண் நகைகளை நானே வடிவமைத்து, விற்பனை நிலையமொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளேன்.

நகை விற்பனை குறித்த உங்கள் மன உணர்வு...?

எந்தவொரு வேலையாக இருந்தாலும், எத்தனை பேர் 'இதை செய்யுங்கள்' என சொன்னாலும், நம் மனம் உறுதியாக இருந்தால் மட்டுமே நம்மால் அந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க முடியும். அப்படித்தான் எனது மனமும்.

இதை என்னால் செய்யமுடியும்; இதை செய்தால் சிறப்பாக இருக்கும் என நான் உறுதியாக நம்பினேன். எவ்வளவோ எதிர்மறையான கருத்துக்கள் வந்தாலும், 'என்னால் முடியும்' என நாம் நம்மை நம்ப வேண்டும்.

நான் யாரையும் தங்கி வாழக்கூடாது என்று நான் மனதில் நினைத்தேன். பெண்கள் எப்போதும் யாரையும் தங்கி வாழக்கூடாது. நம்மிடம் உள்ள திறமைகளை வெளியில் கொண்டுவந்து  இலக்கை அடைந்து வெற்றி பெற வேண்டும்.

இந்த சுயதொழில் முயற்சியில் நீங்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள்?

பொருட்கள் பற்றாக்குறை, எதிர்மறை வார்த்தைகள் முதலியன இலக்கை நோக்கி செல்லவிடாமல் தடுத்தது.

தபால் கட்டணங்கள் அதிகரிப்பு மற்றும் இணைய சேவைகளுக்கான கட்டணங்களின் அதிகரிப்பால் சமூக வலைத்தளங்களில் நகைகள் தொடர்பான விடயங்களை பதிவிடுவதற்கு அதிகமான பணத்தொகையை செலவிட வேண்டியிருக்கிறது.

த.சரண்யா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right