சில அரசியல் தலைவர்களின் கொள்கைகளையும் அணுகு முறைகளையும் செயற்பாடுகளையும் எம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறதோ இல்லையோ அது வேறுவிடயம். ஆனால் தங்களைச் சுற்றியுள்ள நிலைவரங்களை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் தங்களால் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களின் விளைவாக தோன்றக்கூடிய புதிய சூழ்நிலைகளுக்கும் நிகழ்வுப் போக்குகளுக்கும் முகங்கொடுப்பதிலும் அவர்கள் வெளிக்காட்டுகின்ற துணிவாற்றல் எம்மைப் பிரமிக்கச் செய்துவிடுகின்றது. அத்தகைய ஆளுமையைக் கொண்டிருந்த ஒரு அரசியல் தலைவியாக கடந்தவாரம்  சென்னையில் காலமான தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் விளங்கினார் என்று நிச்சயமாகக் கூறமுடியும்.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தாலும், ஜெயலலிதாவின் பிரகாசமான அரசியல் வளர்ச்சி என்பது சுலபமானதாக இருக்கவில்லை. பிரபல திரைப்பட நடிகையாக கால்நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் விளங்கிய போதிலும் கூட, அவர் அரசியலில் ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான சவால்களுக்கு முகங்கொடுத்துப் போராட வேண்டியிருந்தது. அவரது வசீகரம் மிக்க ஆளுமை அரசியல்வாதிகளை அஞ்சவைத்தது. ஜெயலலிதாவை தனது அரசியல் வாரிசாக எம்.ஜி.ஆர். ஒரு போதுமே பகிரங்கமாக அறிவித்ததில்லை என்ற போதிலும்,  தனது திறமையாலும் துணிச்சலான செயற்பாடுகளினாலும் அவர் அந்த 'வாரிசு' அந்தஸ்தை வெகுதுரிதமாகவே அடையக்கூடியதாக இருந்தது. ‘என்னை அவர் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியிருந்தாலும்  கூட , அவரது வாரிசாக நான் வருவதற்குரிய பாதையை மிருதுவானதாக்கித் தரவில்லை. இந்திராகாந்தி தனது மகன் ராஜீவ் காந்தியை தனக்குப் பிறகு தலைவராவதற்கு ஏற்ற முறையில் வளர்த்தார். கட்சிக்குள் எனது நிலையை வலுப்படுத்துவதற்கு நான் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது’,  என்று  முதற் தடவையாக முதலமைச்சரான பிறகு ஜெயலலிதா நேர் காணாலொன்றில் தனது மனத்தாக்கங்களை வெளிப்படுத்தியிருந்தார். எம்.ஜி.ஆரினால் ஆரம்பிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர் காலத்தில் இருந்ததையும் விட பல மடங்கு கூடுதல் மக்கள் ஆதரவு கொண்டதாக ஜெயலலிதாவின் தலைமைத்துவத்தின் கீழ் பெருவளர்ச்சி கண்டிருந்தது.

1970 களின் முற்பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிளவு ஏற்பட்ட பிறகு அதன் தலைவர் கலைஞர் கருணாநிதியோ அல்லது எம்.ஜி.ஆரோ தேர்தல்களைத் தனித்துச் சந்திப்பதற்கு ஒரு போதுமே துணிச்சலைக் கொண்டிருந்ததில்லை. ஏதாவ தொரு தேசியக் கட்சியுடனும் மாநிலக் கட்சிகள் சிலவற்றுடனும் கூட்டுச் சேர்ந்தே அவர்கள் இருவரினதும் கழகங்கள் தேர்தல்களில் போட்டியிட்டு வந்தன. ஆனால், ஜெயலலிதாவோ இறுதியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் மாநில சட்டசபைத் தேர்தலிலும் வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேராமலேயே பெரு வெற்றி பெற்றதைக் காணக் கூடியதாக இருந்தது. அத்தகையதொரு பரீட்சார்த்தத்தைச் செய்வதற்கான  அரசியல் துணிச்சல் அவரிடம் இருந்தது. திராவிட இயக்கக் கட்சிகளில் எந்தவொரு கட்சியாவது தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற ஆசனங்களில் 37 ஆசனங்களை தனியாக கைப்பற்றியதாக இருந்தால் அது ஜெயலலிதாவின் அண்ணா தி.மு.க.தான். பழுத்த அரசியல் அனுபவமும் சாமர்த்தியமும் கொண்டவர் என்று வர்ணிக்கப்படுகின்ற  கலைஞரினாலோ எம்.ஜி.ஆரினாலோ அவ்வாறு சாதித்துக்காட்ட முடியவில்லை.

எம்.ஜி.ஆர். கட்சியை ஆரம்பித்த பிறகு அவர் மறையும் வரை கருணாநிதியினால் ஒரு போதும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. அவரின் மரணத்துக்குப் பிறகுதான் கலைஞரினால் தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் வரக்கூடியதாக இருந்தது. ஆனால், அண்ணா தி.மு.க ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் 1989 ஆம் ஆண்டு வந்த பிறகு இரு பிரதான திராவிட இயக்கக் கட்சிகளுமே மாறி மாறி 5 வருட பதவிக்காலத்துக்கு ஆட்சிக்கு வந்து கொண்டிருந்தன. ஜெயலலிதாவும் கலைஞரும் மாறி மாறி முதலமைச்சர் பதவிகளை வகித்து வந்தார்கள் எம்.ஜி.ஆருக்குப் பிறகு அடுத்தடுத்து இருதடவைகள் தமிழகத்தில் ஆட்சிக்கு (32 வருடங்களுக்குப் பிறகு) வந்த முதலமைச்சர் என்ற பெருமையையும் முதன் முதலாக இவ்வருடம் மே மாதத்தில் ஜெயலலிதா சாதித்துக் காட்டினார். தமிழகத்தில் மிகக் கூடுதலான வாக்கு வங்கியைக் கொண்ட கட்சியாக அண்ணா தி.மு.க.வே விளங்குகின்றது. எம்.ஜி.ஆரை விடவும் கூடுதலான அளவுக்கு ஜனரஞ்சகமான அரசியல் தலைவியாக ஜெயலலிதா தன்னை இறுதியில் நிலைநிறுத்திக் கொண்டதாக அவரின் மரணத்துக்குப் பிறகு கடந்த வாரம்  அரசியல் அவதானிகள் வர்ணித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இந்தியாவில் தனி நபர் வழிபாட்டு அரசியல் பரவலாக இருக்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை அந்த தனிநபர் வழிபாட்டு அரசியலை உச்ச பட்சத்துக்கு தன்னைச் சுற்றி வளர்த்துக்கொள்ளக்கூடிய வசீகரமும் ஆற்றலும் கொண்ட அரசியல் தலைவியாக ஜெயலலிதாவைக் காண முடிந்தது. இத்தனைக்கும் அவர் எம்.ஜி.ஆரைப் போன்று வயோதிபர்களையும் சிறுவர்களையும் வறியவர்களையும் பொது இடங்களில் கட்டியணைத்து பேசுகின்ற  வழக்கத்தைக் கொண்டவருமல்ல. அத்துடன் ஊடகங்களுடனான அவரின் உறவும் ஆரோக்கியமானதாக இருந்ததில்லை. உள்நாட்டுப் பத்திரிகைகளுக்கோ அல்லது இலத்திரனியல் ஊடகங்களுக்கோ அவர் நேர்காணல்களை வழங்குவதில்லை. தற்பெருமையுடன் மற்றவர்களிடமிருந்து விலகி நிற்கின்ற சுபாவத்தை கொண்டவராக அவர் இருந்தார். அவரைச் சந்திப்பதென்பது இலேசான காரியமுமல்ல. இப்படியான ஒருவர் தமிழக அரசியல் வரலாற்றிலேயே மிகவும் மக்கள் ஆதரவு கொண்ட ஜனரஞ்சக  தலைவியாக விளங்கக் கூடியதாக இருந்ததென்பது ஜெயலலிதாவைப் பற்றிய புதிர்களில் ஒன்று. 2014 செப்ெடம்பரில் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்ற போது தமிழகத்தில் பெரும் கலவரங்கள் மூண்டன. 200க்கும் அதிகமானவர்கள் வேதனை  தாங்காமல் அதிர்ச்சியிலும் தற்கொலை செய்தும் மரணத்தைத் தழுவிக் கொண்டார்கள். இப்போது அவரின் மரணச் செய்தியும்  பலரைப் பலியெடுத்திருக்கிறது

ஜெயலலிதாவின் வயதையும் விட கூடுதலான கால அரசியல் அனுபவத்தைக் கொண்ட கலைஞர் கருணாநிதி கூட இந்தியாவின் பிரதமராக வரவேண்டுமென்று ஒரு போதும் ஆசைப்பட்டதில்லை. 1996 பாராளுமன்றத் தேர்தலில் அன்று பி.வி.நரசிம்மராவ் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. காங்கிரஸ{க்கு எதிரான கட்சிகள் சேர்ந்து அமைத்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியில் இறங்கிய போது யாரைப் பிரதமராக்குவது என்று சர்ச்சை எழுந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ஜி.கே. மூப்பனார் பெயரும் செய்திகளில் அடிபட்டது. அப்போது கருணாநிதியிடம் பிரதமர் பதவி பற்றி செய்தியாளர்கள் அபிப்பிராயம் கேட்டபோது 'எனக்கு எனது உயரம் தெரியும்' என்று  பதிலளித்திருந்தார்.

( மூப்பானருக்கு இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்ற  ஆசை வரக்கூடாது. அதற்குரிய  தகுதி  அவருக்கு இல்லை என்பதைக் குத்திக் காட்டுவதற்குத் தான் கலைஞர் அவ்வாறு தனக்கே இயல்பான பாணியில்  கிண்டலாக் கூறியதாகவும் அப்போது அர்த்தம் கற்பிக்கப்பட்டது.)  

ஆனால், ஜெயலலிதாவோ இறுதியாக நடைபெற்ற 2014 பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு தேசியக் கட்சிக்குமே அறுதிப் பெரும்பான்மைப் பலம் கிடைப்பது சாத்தியமில்லை என்று தவறாக மதிப்பிடப்பட்டிருந்த சூழ்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற ஆசனங்களையும் தனது கட்சி கைப்பற்றக்கூடியதாக இருக்குமானால், பல கட்சிகள் சேர்ந்து மத்தியில் அரசாங்கத்தை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் பிரதமராகத் தன்னை முன்னிறுத்துமாறு  கேட்கலாம்  என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார்.

பிரதமராக வருவதற்கான வாய்ப்பு தாராளமாக இருந்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பாத காமராஜர் கூட தமிழக மக்கள் மத்தியில் பேசத் துணியாத விடயத்தை ஜெயலலிதா பேசுவதற்கு  துணிச்சலை வரவழைத்துக் கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.. 'அம்மாவைப் பிரதமராக்குவோம்' என்ற சுலோகத்தையே அண்ணா தி.மு.க. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் முன்னிலைப்படுத்தியது. வேறு கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதைத் தவிர்ப்பதற்காக எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராமல் தனியாக போட்டியிட்ட ஜெயலலிதாவின் கட்சி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்றத்தின்  லோக் சபாவில் அறுதிப் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றதையடுத்து நரேந்திர மோடி பிரதமரானார். அது வேறு விடயம். ஆனால் சாத்தியமில்லாததை சாதிக்க முயற்சிப்பதற்குக் கூட தனக்குப் பின்னால் நிற்பவர்களை தூண்டுவதற்கு  அசாதாரணத் துணிச்சல் வேண்டும். அது ஜெயலலிதாவிடம் தாராளமாக இருந்தது. .

அவரது அரசியல் எதிரிகள் குறிப்பாக கலைஞரும் கூட, 'துணிச்சலான பெண்மணி' என்று புகழஞ்சலி செய்ய வைத்துவிட்டார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அண்ணா தி.மு.க. இறுதியில்   அம்மா தி.மு.க.. வாகியிருந்தது என்பதே உண்மை.

அண்ணா தி.மு.க.வின் அரசியல் பிரதானமாக கருணாநிதி எதிர்ப்பு நிலைப்பாடு என்பதையே அடியாதாரமாகக் கொண்டதாகும். எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் இடையிலான அரசியல் பகைமையே அதற்குக் காரணம். அதே பகைமையை மேலும் கூடுதல் வன்மத்துடன் வளர்த்துத்தான்  ஜெயலலிதா தனது அரசியலை முன்னெடுத்தார். கருணாநிதியை நேருக்கு நேர் பார்ப்பதைக் கூட ஜெயலலிதா தவிர்த்தார். இறுதிவரை அது தொடர்ந்தது. இப்போது ஜெயலலிதா இல்லாத நிலையில் அண்ணா தி.மு.க.வின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி விஸ்வரூபம் எடுக்கிறது.

தனக்கு மிகவும் விசுவாசமானவர் என்று ஜெயலலிதா கழகத்தவர்களுக்கும் தமிழகத்துக்கும் அடையாளம் காட்டிய ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முதலமைச்சராகியிருக்கிறார் என்ற போதிலும், கட்சியின் தலைமைத்துவத்தை  தன்வசமாக்கி நிலைவரங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் அவரால் கொண்டுவர முடியுமா என்பது முக்கியமான இன்னொரு கேள்வி. எம்.ஜி.ஆர்.  மறைவை  அடுத்து அவரின் விதவை மனைவி ஜானகியையும் ஜெயலிதாவையும் மையப்படுத்தி கழகம் இரண்டாகப் பிளவுண்டது. ஆனால், தனது அணிக்கே மக்கள் செல்வாக்கு இருக்கின்றதென்பதை தேர்தலொன்றில்  நிரூபித்த ஜெயலலிதாவிடம் கழகம் தானாகவே வந்து சேர்ந்தது. அதேபோன்றதொரு பிளவு அல்லது அதையும் விட கூடுதலான சிதறல் இன்று கழகத்தில் ஏற்படுமா? தனது அரசியல்  வாரிசு என்று எம்.ஜி.ஆர்.தன்னை அடையாளம் காட்டிவிட்டுச் செல்லவில்லை என்று பகிரங்கமாகவே ஆதங்கப்பட்ட ஜெயலலிதா தனக்குப் பிறகு கழகத்திற்குள் இரண்டாம் நிலை தலைமைத்துவத்தை வளர்ப்பதில் அறவே அக்கறை காட்டவில்லை என்பது அவரிடமிருந்த குறைபாடுகளில் முக்கியமானது.

தமிழக அரசியலில் மாத்திரமல்ல, மாநில அரசியல் செல்வாக்கின் நீட்சியாக தேசிய அரசியலிலும் ஒரு தகுநிலையைத் தனக்கென உருவாக்கிக் கொண்ட ஜெயலலிதாவின் மறைவையடுத்து அண்ணா தி.மு.க. ஆளுமை கொண்ட ஜனரஞ்சகம் மிக்க  அடுத்த தலைவர் இல்லாத கட்சியாக நிற்கிறது. இத்தகையதொரு நிலை தமிழக அரசியலின் போக்கிலும் பல மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய சாத்தியமும் இருக்கிறது.

இறுதியாக, ஜெயலலிதாவுக்கு எதிராகப் பயன்படுத்த முடியுமென்றால் எந்தவொரு   விவகாரத்தையும்  .அதன் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் பயன்படுத்துவதற்கு கலைஞர் கருணாநிதி தவறியதில்லை. அதே போன்றே கருணாநிதிக்கு எதிராகப் பயன்படுத்த முடியுமென்றால் எந்த விவகாரத்தையும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பயன்படுத்துவதற்கு ஜெயலலிதாவும் தவறியதில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையும் கூட இது விடயத்தில் விதிவிலக்கானதாக இருக்கவி ல்லை. அது தமிழக திராவிட இயக்க அரசியலில் எழுதப்படாத ஒரு விதியாக  இது வரையில் இருந்துவந்துள்ளது..

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆரம்பக் கட்டங்களில் இலங்கைப் பிரச்சினையில் எதிரும் புதிருமான நிலைப்பாடுகளை எடுத்திருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வாறு செயற்படமுடியாத அளவுக்கு இலங்கைத் தமிழர்களின் அவலங்கள் படுமோசமானவையாகிப்போயிருந்தன. என்றாலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இலங்கைத் தமிழர்களுக்காக ஓரணியில் நின்று செயற்படமுடியாதவர்களாக அவர்களுக்கிடையிலான கட்சி அரசியல் வக்கிரத்தின் இலட்சணம் இருந்தது.

இறுதிக் காலத்தில் ஜெயலலிதா இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய எந்தவொரு கட்சியுமோ இயக்கமுமோ தன்னை விடவும் மேம்பட்ட நிலைக்குச் சென்று விடாதிருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் தீவிரமான நிலைப்பாடுகளுடன் கூடிய தீர்மானங்களை எடுத்ததைச் காணக்கூடியதாக இருந்தது. அந்தத் தீர்மானங்களை ஆதரிப்பதைத் தவிர ஏனைய கட்சிகளினால் வேறு எதையும் செய்ய முடியாத அளவுக்கு தன்னை உச்சிச்செல்ல முடியாத அளவுக்கு கட்டிப்போட்டிருந்தார் ஜெயலலிதா. அவர் இல்லாத  தமிழக அரசியல் அரங்கில்  இனிமேல் இலங்கைத்தமிழர் பிரச்சினையில் அணுகுமுறைகள் எவ்வாறு அமையுமோ?

அண்ணா என்றால் அது அறிஞர் அண்ணாத்துரைதான் இன்று தமிழக அரசியலில் அம்மா என்றால் அது ஜெயலலிதா என்றாகிவிட்டது.