(சத்ரியன்)
21ஆவது அரசியலமைப்புத் திருத்தம், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள போதும், அதனை நடைமுறைப்படுத்துவதில் இன்னமும் குழப்பங்கள் நீடித்து வருகின்றன.
21 ஆவது திருத்தத்தில், சுயாதீன ஆணைக்குழுக்களின் நியமனங்கள், செயற்பாடுகள் கூடுதல் சுதந்திரம் கொண்டதாக மாற்றப்பட்டன. ஆனால், 21ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும், சுதந்திர ஆணைக்குழுக்கள் இன்னமும் மாற்றியமைக்கப்படவில்லை.
இதனால் ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் தான் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆணைக்குழுக்கள் செயற்படுவதற்கு, முடிவுகளை எடுப்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் உள்ளதா என்ற விவாதங்களும் இடம்பெறுகின்றன.
அரசாங்கத்துக்குள் நிலவுகின்ற குழப்பங்களும், இனவாதப்போக்கும், புதிய ஆணைக்குழு நியமனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
சுதந்திர ஆணைக்குழுக்களின் நியமனம் மாத்திரமல்ல, சுதந்திர ஆணைக்குழுக்களின் நியமனங்கள் மற்றும் அதனைக் கண்காணிப்பதற்கான பொறுப்பை வகிக்கும், அரசியலமைப்பு பேரவையே குழப்பத்தில் இருக்கிறது.
அரசியலமைப்பு பேரவையின் எல்லா உறுப்பினர்கள் கூட இன்னமும் நியமிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றனர். 10 பேர் கொண்ட அரசியலமைப்பு பேரவைக்கு இதுவரை ஆறு பேர் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பிரதமர் தினேஸ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பதவி வழி உறுப்பினர்களாக அரசியலமைப்பு பேரவையில் இடம்பெறுகின்றனர்.
அதேவேளை, ஜனாதிபதியின் பிரதிநிதியாக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவரினால், கபீர் காசிமின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற வகையில், பொதுஜன பெரமுனவினால் சாகர காரியவசம், முன்மொழியப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஏனைய கட்சிகளின் சார்பில், தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர் ஒருவர், சிவில் சமூகத்தில் இருந்து பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் முன்மொழிய வேண்டிய மூவர் ஆகியோரின் நியமனங்கள் தான் இன்னமும் இழுபறியாக உள்ளது.
சுயாதீன உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டிய 3 உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்கு 108 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் கூறியிருக்கிறார்.
இவர்களில் இருந்து மூன்று பேரை, பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து தெரிவு செய்ய வேண்டும். இதில் இழுபறிகள் காலதாமதங்கள் இருந்தாலும், மற்றொரு முக்கியமான பிரச்சினையாக மாறியிருப்பது, பொதுஜன பெரமுன தவிர்ந்த ஏனைய கட்சிகளின் சார்பிலான ஒரு உறுப்பினரைத் தெரிவு செய்வது தான்.
பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர் ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரையே, எதிர்க்கட்சித் தலைவர் நியமிப்பார்கள்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையிலேயே, இன்னொரு உறுப்பினரின் நியமனம் இடம்பெற வேண்டும்.
இவ்வாறான நிலையில் மூன்றாவது பெரிய கட்சியாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சித்தார்த்தனின் பெயரை முன்மொழிந்திருந்தது.
ஜே.வி.பி.யும் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால், பொதுஜன பெரமுனவுடன் முரண்பட்டுக் கொண்டு சுயாதீன அணியாகச் செயற்படும், விமல் வீரவன்ச, அரசியலமைப்பு பேரவைக்கு உதய கம்மன்பிலவின் பெயரை முன்மொழிந்தார். இது தான் ஏனைய கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினரின் தெரிவை குழப்பியிருக்கிறது.
அரசியலமைப்பு பேரவையில் இதுவரை நியமிக்கப்பட்டுள்ள ஆறு பேரில் ஐந்து பேர் சிங்களவர்கள், ஒருவர் முஸ்லிம். தமிழர் தரப்பில் இன்னமும் யாரும் நியமிக்கப்படவில்லை.
சித்தார்த்தன் நியமிக்கப்பட்டால், மூன்று இனங்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாக அரசியலமைப்பு பேரவை மாறும். ஆனால், விமல் வீரவன்ச தரப்பு சித்தார்த்தன் உள்ளே நுழைவதை தடுப்பதற்காக உதய கம்மன்பிலவை முன்னிறுத்தியிருக்கிறது.
இது தமிழருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க கூடாது என்பதற்காக அதனைத் தடுப்பதற்கு- இனவாத நோக்குடன் மேற்கொள்ளப்படும் செயல் என்பதில் சந்தேகமில்லை.
இனவாத நோக்கில் சித்தார்த்தனின் நியமனத்தை தடுக்க முயற்சி செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் உதய கம்மன்பில அதனை பாராளுமன்றத்திலேயே மறுத்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சமஷ்டிக் கோரிக்கையை வலியுறுத்துவதற்கு அரசியலமைப்பு பேரவையை ஒரு அரங்காக பயன்படுத்திக் கொள்ளும் என்பதாலேயே சித்தார்த்தனுக்கு போட்டியாக தான் முன்னிறுத்தப்பட்டுள்ளதாக அவர் நியாயப்படுத்தியிருந்தார்.
10 பேர் கொண்ட அரசியலமைப்பு சபையில், சித்தார்த்தன் தனியொருவராக சமஷ்டியை உருவாக்கி விட முடியாது.
அரசியலமைப்பு பேரவை என்பது, பிரதானமாக சுதந்திர ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களை மேற்கொள்வதும், அவற்றைக் கண்காணிப்பதற்காகவும் தான் உருவாக்கப்பட்டது.
அது சமஷ்டித் தீர்வையோ, அதற்கான பொறிமுறைகளையே உருவாக்குகின்ற அல்லது வகுக்கின்ற இடம் அல்ல. இது விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தரப்புக்கு தெரியாத விடயமும் அல்ல. அவர்கள் தமிழர் ஒருவர் உள்ளே வருவதை விரும்பவில்லை. அதனையே அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அவர்களின் செயற்பாடு இனவாதமா இல்லையா என்ற விவாதங்களுக்கு அப்பால், அவர்களின் இந்த முன்மொழிவு நியாயமானதா, சட்டபூர்வமானதா என்ற கேள்விகளும் உள்ளன.
ஏனென்றால், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் ஆளும்கட்சி, எதிர்க்கட்சியைச் சாராத – ஏனைய சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுக்குள் வராதவர்கள்.
அவர்கள் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டது, ஆளும்கட்சியான பொதுஜன பெரமுனவின் ஊடாகத் தான்.
ஆளும்கட்சியின் மூலம் தெரிவு செய்யப்பட்டவர், எவ்வாறு – சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை பெற்றுக் கொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்புகிறது கூட்டமைப்பு. அவ்வாறு உதய கம்மன்பில உறுப்பினராக நியமிக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஒரு தவறான முன்னுதாரணம் உருவாகி விடும்.
அரசியலமைப்பு சபையின் பிரதிநிதித்துவத்தை முழுமையாக கைப்பற்றிக் கொள்ளும் வகையில், தங்களில் ஒரு குழுவினரை எதிரணி வரிசையில் அமர வைக்கும் அரசியல் மரபு உருவாகும். 2015 பாராளுமன்றத் தேர்தலை அடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியை அமைத்தன.
அந்த ஆட்சியில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு பகுதியினர் பங்காளராகவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அந்த அணியினர், தங்களை எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரினர். மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ஆனால், சபாநாயகர் கரு ஜயசூரிய அதனை அனுமதிக்கவில்லை. மூன்றாவது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையே எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்திருந்தார்.
தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அவர், இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.
அவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தான் என்பதால் அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம். இந்த நியமனங்கள் இழுத்தடிக்கப்படுவதால் என்ன இலாபம்?
முன்னர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் அமைக்கப்பட்ட சுதந்திர ஆணைக்குழுக்கள் தான் இன்னமும் பதவியில் இருக்கின்றன. அதில் ராஜபக்ஷவினரின் விசுவாசிகளும், ஆதரவாளர்களும் இடம்பெற்றிருந்தனர்.
ரணில் ஆட்சியிலும் அவர்கள் நீடிப்பது அவர்களுக்கு வசதியானது என்பது அதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கக் கூடும்.
எவ்வாறாயினும், 21ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு மாதங்களாகி விட்ட பின்னரும் அரசியலமைப்புச் சபையை இன்னமும் நியமிக்க முடியாமல் இருப்பதும், அதற்கு இனவாத தலையீடுகள் காரணமாக இருப்பதும், குறித்த திருத்தத்தை வெற்றிகரமானதாக ஒப்புக்கொள்ள முடியாத நிலையை தோற்றுவிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM