அஷ்டத்ரவ்ய கணபதி ஹோமத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?

Published By: Ponmalar

24 Dec, 2022 | 03:57 PM
image

எம்மில் பலரும் புதிதாக தொழில் தொடங்கினாலும், புதிதாக வீடு கட்டி, புதுமுனைப் புகுவிழா நடத்தினாலும் அல்லது புதிதாக வாடகை வீட்டிற்கு இடம்பெயர்ந்தாலும் அங்கு முதற்கட்டமாக கணபதி ஹோமம் ஒன்றினைச் செய்வர்.  சுப பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மேற்கொள்ளும் இந்த கணபதி ஹோமத்தைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பர். ஆனால் அஷ்டத்ரவ்ய கணபதி ஹோமம் என்ற ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? அதாவது கணபதி ஹோமத்துடன் சுதர்ஷன ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் என்பவற்றையும்  இணைத்து செய்வதுதான் கணபதி அஷ்டத்ரவ்ய ஹோமம். இதனை செய்வதன் மூலம் வீடுகளில் அன்பு, நிம்மதி, மகிழ்ச்சி,செல்வம் என்பன ஏழேழு தலைமுறைக்கும் நீடிக்கும் என்பது ஐதீகம். 

அதே தருணத்தில் சில வீடுகளில் குழந்தைகள், கல்வியில் போதிய முன்னேற்றம் பெறாமல் இருப்பார்கள். அவர்களுக்கு கல்வித் தெய்வத்தைக் குறித்து பரா சரஸ்வதி ஹோமம் செய்தால், குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் பெறுவர்.

சில வீடுகளில் பில்லி, சூனியம் என்பன செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கும். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு பல்வேறு மாய தடைகள் ஏற்படும். அவ்வாறான பிரச்சினைகளுக்கு மகா சக்தி வாய்ந்த பிரத்யங்கரா ஹோமம் மற்றும் பிரத்யங்கரா சூலினி துர்க்கா ஹோமம் செய்தால், பில்லி சூனியம் என்பன வேரோடு களையப்பட்டுவிடும்.

நவசண்டி ஹோமம் மற்றும் பகவதி சேவா என்பன ஒரு வீட்டில் முறையே காலையும், மாலையும் செய்யப்படுமானால் அந்த வீட்டில் உள்ள ஆடவர் செய்யும் தொழில் விருத்தி அடையும். பதவி வாய்ப்புகள் பெருகும். குறிப்பாக, அரசியல்வாதிகள் மற்றும் பெருந்தொழிலதிபர்கள் இந்த ஹோமத்தையும், பூஜையையும் செய்துகொள்வது அவர்களது துறையில் நீண்ட கால வளர்ச்சியைத் தரும்.

ஒரு பரம்பரையை எடுத்துக்கொண்டால், அதன் செழுமை ஏழு தலைமுறை வரையே தொடரும். அந்த ஏழு தலைமுறைகளிலும் செழுமை படிப்படியாகக் குறையும். எட்டாவது தலைமுறை தொடக்கம் மீண்டும் செழிப்பு படிப்படியாக வளரும். ஆனால், இந்தச் செழுமையை ஏழேழு தலைமுறைகளுக்கும் நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்வதற்கு ஸ்ரீவித்யா தளபத்ம யோகினி ஹோமம் வழிசெய்யும்.

திருமணத் தடை உள்ளவர்களுக்கு சர்ப்ப காயத்ரி ஹோமம், குழந்தையின்மையால் வாடுவோர் மற்றும் திறமைகள் இருந்தும் புகழ்பெற முடியாமல் தவிக்கும் கலைஞர்கள் ஆகியோருக்கு இந்திராக்க்ஷய அஷ்வாரூட ஹோமம், சகல வசதிகளும் இருந்தும் தொடர்ந்து நோய்களால் வாடுவோருக்கு மகா தன்வந்திரி ஹோமம் எனப் பல ஹோமங்களைச் செய்யலாம்.

ஆவி, பேய் மற்றும் துர் ஆத்மாக்களால் பீடிக்கப்பட்டிருக்கும் வீடுகளில், அவற்றை விரட்டி வீட்டை பூரணமாக சுத்தம் செய்வதற்கு பாதாதிதோஷா நிவாரண ஹோமம் என்பதையும் செய்யலாம். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வரை இந்த ஹோமங்கள் முறைப்படி செய்யப்பட்டு வந்தன. ஆனால் காலப்போக்கில் அவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெற்றதாலேயே அவற்றின் பலன்கள் யாருக்கும் தெரியாமல் இருக்கிறது. எனினும் அவற்றை உரிய முறைப்படி செய்தால் அவற்றின் மகிமையைப் புரிந்துகொள்ளலாம்.

உங்களது இல்லங்களில் சுபிக்சம் பெருகவும், இல்லத்து உறுப்பினர்கள் அமைதியாகவும், வளமாகவும், பேரறிவுடன் திகழவேண்டுமானால் மேற்சொன்ன ஹோமங்களையும், யாகங்களையும் செய்து முழுமையான பலனை அடையலாம். 

-வெலியமுனை குருசாமி. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right