(ரொபட் அன்டனி)

மலேஷிய  அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று இரண்டு  நாள் உத்தியோகபூர்வ விஜயமாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மலேஷியா சென்றுள்ளார்.

எதிர்வரும்  சனிக்கிழமைவரை  மலேஷியாவில் தங்கியிருக்கும்  ஜனாதிபதி  மலேஷிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன் இருதரப்பு ஒப்பந்தங்கள் சிலவற்றிலும்  கைச்சாத்திட உள்ளார். 

இன்று 1.45 மணியளவில்  மலேஷியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினரை  மலேஷிய மனிதவள அமைச்சர் வை. பி. தத்தோ சிறி ரிச்சர்ட் ரியொட்  வரவேற்பார்.   மலேஷியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராஹிம் அன்சார் மற்றும் தூதரக அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். 

அந்தவகையில் இன்றைய தினம்  மலேஷியா இன்டர்கொண்டின்டல் ஹோட்டலில் நடைபெறவுள்ள வர்த்தக மாநாட்டில்  ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். மலேஷிய அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சர்கள்  வர்த்தக பிரமுகர்கள் இந்த  மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.  

இந்த மாநாட்டில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான  சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முதலீடு,  உள்ளிட்ட விடயங்கள்  தொடர்பில் ஆராயப்படவுள்ளது.   குறிப்பாக  இலங்கையில்  முதலீடுகளை அதிகரித்துக்கொள்வது  தொடர்பில் இந்த  வர்த்தக  மாநாட்டில்  விரிவாக ஆராயப்படவுள்ளது. 

அதன்பின்னர் நடைபெறவுள்ள உணவுக் கண்காட்சியிலும்  ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். 

தொடர்ந்து இன்று மாலை இலங்கை, மலேஷிய நாடுகளுக்கிடையிலான தூதரக தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டு அறுபது ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்விலும்,  ஜனாதிபதி  பங்குபற்றுவார். 

நாளை வெள்ளிக்கிழமை மலேஹிய பிரதமருடனான இருதரப்பு சந்திப்பு நடைபெறவுள்ளது. பெருதன சதுக்கத்தில் உள்ள  பிரதமர் அலுவலகத்தில்; நடைபெறவுள்ள இந்த அரச தரப்பு சந்திப்பில்  மலேஷிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவுக்கு  வரவேற்பளிப்பார். 

இதன்போது இரண்டு நாடுகளுக்கு இடையில்  சுற்றுலா, விவசாயம், பெருந்தோட்டத்துறை, கலாசாரம் மற்றும் இளைஞர் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வது குறித்த இரு நாட்டு தலைவர்களும்; பரந்தளவில் கலந்துரையாவுள்ளனர்.   அவை  தொடர்பில்  புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட உள்ளன. இரண்டு நாடுகளினதும் அமைச்சர்கள்  உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளனர்.  

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளை விருத்தி செய்யும் நோக்குடன் மலேசிய மன்னரையும்   ஜனாதிபதி  சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.  அத்துடன் ஜனாதிபதி  நாளை மறுதினம் சனிக்கிமை மலேஷியாவில் உள்ள  பிரபலமான  பௌத்த விஹாரை ஒன்றுக்கும்  விஜயம்  செய்து   பார்வையிடவுள்ளார். 

ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில்  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பிரதி அமைச்சர்களான பாலித்த தெவரப்பெரும, மனுஷ்ய நாணக்கார   கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜெ.எம். முஸம்மில்  உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.