(நெவில் அன்தனி)
கலம்போ ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (23) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் 2 விக்கெட்களால் வெற்றியீட்டிய லைக்கா ஜெவ்னா கிங்ஸ், 2022 எல் பி எல் சம்பியனானது.
இதன் மூலும் இலங்கையில் விளையாடப்பட்ட முதல் 3 எல் பி எல் அத்தியாயங்களிலும் ஜெவ்னா கிங்ஸ் சம்பியனாகி வரலாறு படைத்தது. இந்த வெற்றியுடன் 3 கோடியே 60 இலட்சம் ரூபா பணப்பரிசை ஜெவ்னா கிங்ஸ் தனதாக்கிக்கொண்டது.
இரண்டாம் இடத்தைப் பெற்ற கலம்போ ஸ்டார்ஸ் அணிக்கு ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா பணப்பரிசு கிடைத்தது.
இந்த வருட எல் பி எல் போட்டியில் முன்னேறிவரும் அதி சிறந்த வீரருக்கான விருது யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் அணித் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு வழங்கப்பட்டது.
கலம்போ ஸ்டார்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 164 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கலம்போ ஸ்டார்ஸ் 19.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஆனால், இந்த வெற்றி ஜெவ்னா கிங்ஸுக்கு சிரமத்திற்கு மத்தியிலேயே கிடைத்தது.
17ஆவது ஓவரில் 3 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றிருந்த ஜெவ்னா கிங்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்கள் வீழ்ந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் கடைசி ஓவரில் ஜெவ்னா கிங்ஸ் வெற்றிபெற்று திசர பெரேராவின் தலைமையில் 3ஆவது தடவையாக எல் பி எல் கிண்ணத்தை சுவீகரித்தது.
ரஹ்மானுல்லா குர்பாஸ் (39), அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் 25 பந்துகளில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், குர்பாஸ், அபிப் ஹொசெய்ன் (3) ஆகிய இருவரும் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர். (56 - 8 விக்.)
எவ்வாறாயினும் அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
சதீர சமரவிக்ரம 27 பந்துகளில் 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 44 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டகன்றார். (128 - 3 விக்.)
அவரைத் தொடர்ந்து ஷொயெப் மாலிக் (10), துனித் வெல்லாலகே (2), அவிஷ்க பெர்னாண்டோ (50), மஹீஷ் தீக்ஷன (1) ஆகிய நால்வரும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். (162 - 8 விக்.)
கடைசி ஓவரில் ஜெவ்னா கிங்ஸின் வெற்றிக்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கசுன் ராஜித்தவின் முதலாவது பந்தில் பவுண்டறி விளாசிய திசர பெரேரா அடுத்த பந்தில் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
கடைசி 4 பந்துகளில் ஜெவ்னா கிங்ஸின் வெற்றிக்கு தேவைப்பட்ட 2 ஓட்டங்கள் உதிரிகளாக கிடைத்தது. கசுன் ராஜித்தவின் கையிலிருந்து வழுவிய பந்து வைட் ஆனதுடன் விக்கெட் காப்பாளர் நிஷான் மதுஷ்க சரியாக பிடிக்கத் தவறியதால் ஜெவ்வனா கிங்ஸுக்கு ஒரு உதிரி வெற்றி ஓட்டமாகக் கிடைத்தது.
பந்துவீச்சில் 8 பந்துவீச்சாளராக பயன்படுத்தப்பட்ட சுரங்க லக்மால் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெனி ஹவெல் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கலம்போ ஸ்டார்ஸ் 5 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் முதலாவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 2 ஓட்டங்களாக இருந்தபோது நிஷான் மதுஷ்க (1) ஆட்டமிழந்து தடுமாற்றம் அடைந்தது. ஆனால், தினேஷ் சந்திமாலும் சரித் அசலன்கவும் 2ஆவது விக்கெட்டில் 53 பந்துகளில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.
சரித் அசலன்க 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த சொற்ப நேரத்தில் தினேஷ் சந்திமால் 49 ஓட்டங்களுடன் வெளியேறினார். (90 - 3 விக்.)
சந்திமாலைத் தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 114 ஓட்டங்களாக இருந்தபோது அணித் தலைவர் 12 ஓட்டங்களுடன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். (114 - 3 விக்.)
இந் நிலையில் ரவி பொப்பாராவும் மொஹமத் நபியும் 5ஆவது விக்கெட்டில் 45 ஒட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்தனர்.
நபி 15 ஓட்டங்களுடன் வெளியேற ரவி பொப்பாரா 33 பந்துகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்டறியுடன் 47 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் திசர பெரேரா 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மஹீஷ் தீக்ஷன 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் பினுர பெர்னாண்டோ 48 ஓட்டங்களைக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
விஜயகாந்த் வியாஸ்காந்த் 4 ஓவர்கள் வீசி விக்கெட் எதனையும் வீழ்த்தாத போதிலும் 24 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்தார்.
ஆட்டநாயகன்: அவிஷ்க பெரனாண்டோ, தொடர்நாயகன்: சதிர சமரவிக்ரம.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM