(எம்.சி.நஜிமுதீன்)

கூட்டு எதிர்க்கட்சி பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சி உறுப்பினர்கள் கறுப்பட்டி அணிந்து கொண்டு கலந்துகொண்டனர். 

அம்பாந்தோட்டை துறைமுக உழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி சேகரிக்கச்சென்ற ஊடவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் வகையிலேயே கறுப்புப் பட்டி அணிந்துகொண்டு கலந்துகொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே கருத்துத் தெரிவிக்கையில், அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மேற்கொண்ட ஆர்பாட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது கடற்படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அச்சம்பவத்தை கூட்டு எதிர்க்கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.  ஊடகவியலாளர்கள் தமது கடமையினை உரிய முறையில் மேற்கொள்வதனை அரசாங்கம் தடுக்குமாயின் அதற்கெதிராக கூட்டு எதிர்க்கட்சி போராடும். 

ஆகவே ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் நிறுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் ஊடகவியலாளர்களை கெளரவப்படுத்துவதற்காகவும் கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்யும் ஊடகவியலாளர் சந்திப்புகளில் நாம் கறுப்பு பட்டி அணிந்து கலந்துகொள்வதற்குத் தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.