ரசிகர்களுக்கு அஜித் குமார் வழங்கும் நத்தார் தின சிறப்பு பரிசு

Published By: Digital Desk 2

23 Dec, 2022 | 11:51 AM
image

அஜித் குமார் நடிப்பில் தயாராகி அடுத்த மாதம் 12ம் திகதி என்று வெளியாகவிருக்கும் 'துணிவு' என்னும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'கேங்ஸ்டா..' எனத் தொடங்கும் மூன்றாவது பாடல், நத்தார் தினத்தன்று வெளியாகிறது.

புது முயற்சியாக மூன்றாவது பாடலுக்கான பாடல் வரிகளை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்குமார் நடித்திருக்கும் திரைப்படம் 'துணிவு'.

இதில் அஜித் குமாருடன் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி, வீரா, பிரேம் குமார், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். வங்கி கொள்ளையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பே வியூ ப்ராஜெக்ட் எல்எல்பி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இப்படத்திலிருந்து 'செல்லா செல்லா..' எனத் தொடங்கும் முதல் பாடலும், 'காசேதான் கடவுளடா..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெறும் 'கேங்ஸ்டா ..' எனத் தொடங்கும் மூன்றாவது பாடல் டிசம்பர் மாதம் 25ஆம் திகதியன்று, அதாவது நத்தார் தினத்தன்று வெளியாகிறது. 

இதனிடையே 'துணிவு' திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் முன்னோட்ட வெளியீடு போன்ற விழாக்கள் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதாலும், இது தொடர்பாக திரையுலக வணிகர்களிடையே அதிருப்தி இருந்தாலும், 'அஜித் குமார்' என்ற ஒற்றை சொல் மந்திரத்திற்காக ரசிகர்கள் 'துணிவு' திரைப்படத்தை கொண்டாடுவார்கள் என திரையுலக வணிகர்கள் அவதானித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right